Friday 28 February 2014

பாலா + சசிகுமார் = 'கரகாட்டம்’ - திரை விமர்சனம்



சசிகுமாரை ஹீரோவாக வைத்து பாலா எடுக்கப்போகும் அடுத்த படத்தோட டைட்டிலே 'கரகாட்டம்’னு கோலிவுட் பூரா பேச்சு சுத்தி அடிக்குது. காலில் சலங்கை இல்லாமலே கரகரனு ஆடுகிறவர் பாலா. கரகத்தையும் சேர்த்துக் கொடுத்தா என்னெல்லாம் பண்ணுவாரோ? வாங்க கரகாட்டம் கதை எப்படி இருக்கும்னு கொஞ்சம் கற்பனையில் ஓட்டிப் பார்ப்போம்.

சேந்தம்பட்டி கிராமத்திலேயே பெரிய ஆட்டக்காரரா இருந்தவர்தான் சண்முக சுந்தரம். அவருக்கு ஒரு அக்கா (அநேகமா இந்த ரோல்ல காலஞ்சென்ற காந்திமதி முகச் சாயலில் ஒரு நடிகை நடிக்கவைக்கப்படுவாராம்) சண்முக சுந்தரத்துக்கு ஓர் அழகு மகள். பெயரே சொப்பன சுந்தரி. அப்பாவை மிஞ்சும் கரகாட்டக்காரி. (இந்த ரோல்லதான் நம்ம வரலட்சுமி நடிக்கிறாங்க.) ஊர்த் திருவிழாவில் ஆடுகிற வாய்ப்பு வரலட்சுமிக்குக் கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருக்கிற சண்முக சுந்தரத்தின் கனவில் ஒரு லோடு ஜல்லி அள்ளிக் கொட்டிவிடுகிறார் ஊர்ப் பண்ணையாரான சந்தானபாரதி (சந்தானபாரதியே நடிக்கிறார்.)

எதிரியோட நிழலைப் பார்த்தே அவரோட குணத்தைச் சொல்கிற 'ஜெய்ஹிந்த்’ புகழ் வாகை சந்திரசேகர்தான், வரலட்சுமியோட அக்கா புருஷன். 'உங்களை நம்பி இருக்கிற எங்களுக்கு நீங்க இப்படி துரோகம் பண்ணலாமா முதலாளி?’னு பண்ணையாரிடம் நியாயம் கேட்கிறார் மிஸ்டர் வாகை. 'அட கிறுக்குப்பயலே! எனக்கு உன் கொழுந்தியா மேல  கண்ணு. உனக்கு நான் வெச்சிருக்கிற ரெமி மார்ட்டின் மேல கண்ணு’னு ஓப்பனா தேங்காய் உடைச்ச மாதிரி சொல்றார். அப்போதான் ஊருக்கு அந்த அசலூர் கரகாட்டக் கோஷ்டி வருது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்! என்ன அதே ஒரிஜினல் 'கரகாட்டக்காரன்’ கதை போலவே இருக்குதா?

இங்கனதான் வைப்பார் ஒரு ட்விஸ்ட் நம்ம பாலா. மேற்கொண்டு கதையைப் படிங்க. வெளியூரில் இருந்துவரும் கரகாட்டக்காரச் கோஷ்டியில் ரெண்டு பேர் இருக்காங்க. ஒருத்தர் சசிகுமார். இன்னொருத்தர் சமுத்திரக்கனி. அவர் அலுமினிய கலர்ல டவுசர் போட்டு ஆடுவார். இவர் வெங்கலப்பானை கலர்ல டவுசர் போட்டு ஆடுவார். ஆனா ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ். கஞ்சா அடிச்சா, அன்னிக்குப் பூரா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் பாட்டுகளை பிளே பண்ணிட்டு நிறுத்தாம ஆடுவாங்க. இவங்க ஆட்டத்தைப் பார்த்து ஊரே சுத்தி நின்னு வேடிக்கை பார்க்குது.

ஆனா சண்முக சுந்தரம் மட்டும் ரத்த ரத்தமா வாந்தி எடுக்கிறார். 'ஏய்... ஆட்டக்காரத் தம்பிகளா! கரகாட்டக் கலை புனிதமான கலை. அதைக் கஞ்சா போட்டுக்கிட்டு ஆடுறீங்களேடா... அந்த மகமாயி மன்னிக்க மாட்டாடா. தைரியமான ஆம்பளைனா, கஞ்சா போடாம ஆடுங்கடா’னு சவுண்டு கொடுக்கிறார். இதனால் வெறியான சமுத்திரக்கனி, சண்முக சுந்தரத்தோட குரல்வளையைக் கடிச்சிடுறார். கடுப்பான வரலட்சுமி நெஞ்சுல ஏறி மிதிச்சு, சமுத்திரக்கனியை சாகடிச்சிடுறார். நண்பனோட சாவுக்குக் காரணமான பொண்ணைப் பழிவாங்குறவரைக்கும் கரகாட்டம் ஆட மாட்டேன்னு சபதம் போட்டுட்டு ஊருக்குக் கிளம்பிப் போகிறார் சசிக்குமார்.

ஆட்டம் பாதியில் நின்னதால் சாமிக்குத்தம் ஆகி, ஊரில் மழை பெய்யாம வறண்டுபோயிடுது. உடம்புல ஒட்டுத்துணி இல்லாம ஒரு கன்னிப்பையன் கரகாட்டம் ஆடினா, வானம் பொத்துக்கிட்டு ஊத்தும்னு ஊர்ப் பெரிய தலைக்கட்டு சந்தானபாரதி சொல்கிறார். இதற்கு உடன்படாத சசிக்குமாரை வில்லனோட ஆட்கள் பத்தாம் நம்பர் ஸ்பானர், கடப்பாறை, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கித் தூக்கிட்டு வர்றாங்க. எழுந்து நடமாடவே முடியாத சசிக்குமார் புருவத்துல குண்டூசி எடுக்கிற ஸ்டெப் எல்லாம் தலையில் கரகத்தை வெச்சு ஆடி க்ளாப்ஸ் வாங்குகிறார்.

மழை அடிச்சு ஊத்துது. சந்தானபாரதியைக் கரகத்தைக் கீழே விழாம தலையில் வெச்சுக்கிட்டே துரத்தி துரத்தி அடிக்கிறார். நார்நாராக் கிழிச்சிக் கழுத்தில் மிதிச்சு சந்தானபாரதியைக் கொன்ற பிறகுதான் வெறி அடங்குது சசிக்குமாருக்கு. ஆட்டத்துலேயும் வீரத்திலேயும் மயங்கி வரலட்சுமி தன் தோல்வியை ஒப்புக்கிட்டு கழுத்தை நீட்ட ரெடி ஆகுறாங்க. ஆனா கல்யாணம் பண்ணாமப் பழிவாங்குகிறார் சசிக்குமார். சோகமா கஞ்சா தோட்டத்து வழியா சில்அவுட்டில் நடந்துபோகிறார். 'எ ஃபிலிம் பை பாலா’னு டைட்டில் போடுறாங்க. இந்தப் படத்துக்காக ஏற்கெனவே பாதி உடம்பா இருக்கிற சசிக்குமாரை கால்வாசி உடம்பாக்  குறைக்கவெச்சிருக்காராம் பாலா. கடந்த ஒரு மாசமா பன்னும் டீயும் சாப்பிடவெச்சு வெயிட்டைக் குறைச்சிருக்கிறாராம் சசிக்குமார்.

இன்னொரு ஸ்கூப் நியூஸ். படத்துக்காக நிஜமாகவே கரகாட்டத்தைக் கத்துக்கிட்டாராம் சசி. பாலா ஒரு பிரம்போட பக்கத்திலேயே நின்னு, 'ஆடுறா... டேய் ஒழுங்கா ஆடுறா... இல்லை கொன்டேபுடுவேன்’ என சசிக்குமாரை அடித்து வெளுக்கும் டீஸர் விரைவில் வெளிவருமாம்!

0 comments:

Post a Comment