Thursday, 6 February 2014

காளி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு...!




ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, கொல்கத்தா காளி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

புதிய படம்

‘ஜில்லா’ படத்தை அடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ‘துப்பாக்கி’ படத்துக்குப்பின், விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் இணையும் இரண்டாவது படம் இது.

‘துப்பாக்கி’ படத்தைப்போல் இதுவும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படம். படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை ஏ.ஆர்.முருகதாசே எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைப்பது இதுதான் முதல் முறை.

சமந்தா

இந்த படத்தில், விஜய்யுடன் சமந்தா ஜோடி சேருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதும் இதுதான் முதல் படம்.

சமந்தா இப்போது லிங்குசாமி டைரக்ஷனில், சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்ததும் அவர், விஜய் நடிக்கும் படத்துக்கு வருவார்.

காளி கோவிலில்...

விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு, கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் தொடங்கியது. படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னதாக, காளியம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தினார்கள். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள்.

முடக்கத்தான் கீரை சூப் - ட்ரை பண்ணி பாருங்க...!




தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் இலை - 1 கட்டு

வெங்காயம் - 1

தக்காளி - 1

கேரட் - 1

பீன்ஸ் - 5

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

சோள மாவு - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ப.மிளகாய் - 2

செய்முறை :

• வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முடக்கத்தான் இலை நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

• இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.

• கடைசியாக இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து இறக்கவும்..

• 48 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை குடித்து வந்தால், சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும்.  

அமிதாப் பச்சனின் நினைவலைகள்....!!!




பழம்பெரும் இந்தி நட்சத்திரமான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் இந்தித் திரையுலகில் நடிகராக வலம் வருகின்றார். உலக அழகி ஐஸ்வர்யாராயைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆராத்யா என்ற சிறிய பெண் குழந்தையும் உண்டு.

 இவர் கடைசியாக நடித்து வெளிவந்துள்ள 'தூம்-3' உலகெங்கும் வெற்றிகரமாக ஓடி 500 கோடிக்கு மேல் வசூலித்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இவர் அடுத்து ஷாருக்கான், தீபிகா படுகோனே. பொமன் இரானி ஆகியோருடன் இணைந்து பராகானின் 'ஹேப்பி நியூ இயர்' என்ற இந்திப் படத்தில் நடிக்க உள்ளார்.

இவர் நேற்று தனது 38-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி 71 வயதான அமிதாபின் மனதில் பல நினைவுகளைத் தோற்றுவித்தது. தனது மகன் அபிஷேக் 38 வயதினை எட்டும் இந்த நேரத்தில் அவன் பிறந்த நேரம், அப்போது தாங்கள் நடந்துகொண்டது, சிறுவயதில் அவனது நடத்தை, வளர்ந்த விதம், அன்றிலிருந்து இன்று வரை அவனது வாழ்வில் நடந்த சுவையான சிறிய சம்பவங்கள் என்று அனைத்தும் தனது நினைவில் தோன்றியதாக அவர் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தன் மகன் வளர்ந்துள்ள இந்த நிலையில் அபிஷேக்கிற்கு தான் எப்போதுமே ஒரு சிறந்த தோழனாகவும், நண்பனாகவும், ஆதரவு அளிப்பவராகவும் நீடித்து இருப்பதே சிறப்பைத் தருவதாக இருக்கும் என்றும் அவர் கருதுவதாகக் கூறியுள்ளார்.

‘குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ ...!!




சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர் பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்க மறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.

கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ”ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம். அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது” என்று வாதிட்டார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ”ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன” என்று வாதிட்டார்.

ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில்,

‘குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ என்று தீர்ப்பானது.

உருளைக்கிழங்கும் பெர்னார்ட் ஷாவும்....!




ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார்.

அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார்.

பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.

அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.

அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட… வென்று சிரித்துவிட்டார்.

பிறகு அவர், “பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா… கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!“ என்றார்.

அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா, “உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்“. என்றார்.

அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கிவிட்டது.

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள் ...!



கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தின் (திண்டுக்கல்) இணைப் பேராசிரியரும், தலைருமான எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம்:

தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.

தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.

நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.

பண்ணை அமைக்கும் முறைகள்:

நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.

பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.

காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:

குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.

ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.

குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.

ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.

சசிகுமார் படத்தில் ஆண்ட்ரியா..!



பிரம்மன்’ படத்தில் குத்துப் பாடலுக்கு நடனம் ஆடவிருக்கிறார் ஆண்ட்ரியா. சசிகுமார், லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் வளர்ந்து வரும் படம் ”பிரம்மன்”. இந்த படத்தை கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த “சாக்ரடீஸ்” இயக்கி வருகிறார்.

இதில் குத்துப்பாடல் ஒன்றிற்கு நடனமாட நடிகை ஆண்ட்ரியாவிடம் கேட்கப்பட்டதாம். முதலில் அவர் நடனமாடுவதற்கு மட்டுமே அழைக்கப்பட்டராம். ஆனால் ஆண்ட்ரியாவோ சம்மந்தப்பட்ட பாடலையும் தானே பாடுவதாக கூறி இரண்டுக்கும் சேர்த்து ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார்.

முதலில் யோசித்த தயாரிப்பாளர் வேறு வழியின்றி இயக்குனரின் பிடிவாதத்தால் அந்த தொகையை கொடுக்க சம்மதித்து விட்டாராம். சமீபத்தில் தமிழில் வெளியான ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.

மேலும் காமெடியில் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் சந்தானமும், சூரியும் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்து காமெடி செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் சேர்ந்து நடிப்பது போல ஒரு காட்சி கூட படத்தில் இல்லையாம். முதல் பாதியில் சந்தானமும், பின் பாதியில் சூரியும் வருகிறார்களாம். படத்திற்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

சூரியுடன் நடிக்க சிம்பு மறுப்பு..!



காமெடி நடிகர் பரோட்டா சூரியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சிம்பு.

இவர், சந்தானத்தை நகைச்சுவை நடிகராக காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை சிம்பு பயன்படுத்தினார்.

சந்தானம் தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்தார். தற்போது பசங்க பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இதில் பரோட்டா சூரியை காமடியனாக நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் தெரிவித்தார். ஆனால் தானும், சந்தானமும் இணைந்து நடித்த படங்கள் ஏற்கனவே வரவேற்பு பெற்றுள்ளது. திடீரென்று காம்பினேஷனை மாற்றினால் சரியாக இருக்காது என்று சிம்பு கூறியுள்ளார்.

அதற்கு பாண்டிராஜ், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்படத்துக்கான காமெடி காட்சிகளை சூரியை மனதில் வைத்துத்தான் எழுதி இருக்கிறேன். சந்தானத்துக்கு அது பொருந்திவராது. நீங்களும், சூரியும் இணைந்தால் அது புதிய ஜோடியாக தெரியும், வரவேற்பும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு சூரியுடன் நடிக்க சிம்பு ஓ.கே. சொல்லியுள்ளாராம்.

ஜெனிலியா ரிட்டர்ன்..!


மீண்டும் நடிப்புலக பயணத்தை தொடர்கிறார் நடிகை ஜெனிலியா.

இவர் 'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'வேலாயுதம்' ஆகிய தமிழ்ப் படங்களிலும், நிறைய தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

துறு துறு நடிப்பாலும், குறும்புத்தனமான எக்ஸ்பிரஷன்களாலும் அதிகம் ஈர்த்தவர்.

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டதால், நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.

அதற்குப் பிறகு சல்மான் கானின் 'ஜெய் ஹோ' படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க, ஜெனிலியாவிற்கு வாய்ப்பு வந்தது.

வந்த வாய்ப்பை விட மனசில்லாத ஜெனி, காதல் கணவர் சம்மதத்துடன் நடிக்க முன்வந்தார்.

தற்போது சல்மான் கான் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கும் 'டாலி கி டோலி' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.

தற்போது ஜெனிலியாவுக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

வெல்க்குரோ ஜிப்.! - பற்றி தெரியுமா உங்களுக்கு..?


வெல்க்குரோ விளைவின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது வெல்க்குரோ ஜிப். நம் அன்றாட வாழ்வில் வெல்க்குரோ ஜிப்பினை நாம் பலபொருட்களில் பயன்படுத்துகின்றோம். இதில் ஒரு பக்கம் குட்டி குட்டி வளையங்களையும் எதிர்ப்பக்கம் பிளாஸ்டிக்கிலான கொக்கிகளையும் கொண்டுள்ளது.

வளையமும் கொக்கியும் ஒன்றையொன்று அழுத்தும் போது இணைந்து சிக்கிக் கொள்கிறது. பின்னர் அவற்றை இழுக்கும் போது பிரிந்து விடுகின்றது. கைப்பைகள், காலணிப்பட்டை, புத்தகப்பை, கோப்புகள், கேமரா உறை எனப் பல பொருள்களிலும் இணைப்பானாக வெல்க்குரோ ஜிப் பயன்படுகிறது.

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப்பகுதியில் நடந்துச் சென்றபோது தனது கால்சட்டையில் ஒரு வித செடியின் முள்ளும் விதையும் ஒட்டியதன் அடிப்படையில் தற்செயலாக வெல்க்குரோ ஜிப்பினை கண்டுபிடித்து 1957ல் காப்புரிமை பெற்றார்.

கட்டுப்படுத்த முடியாததா கேன்சர்..?



''ஒருநாள் குளிக்கும்போது, மார்பகத்தில் கட்டி மாதிரி தெரிஞ்சது. ஆனா, வலிக்கான எந்த அறிகுறியும் இல்லை. டாக்டரைப் பார்க்கப் போனேன். சோதிச்சவர், எனக்கு மார்பகப் புற்றுநோய்னு சொல்லிட்டார்.' - இப்படித் தலைவலி, ஜுரம் போல் சர்வ சாதாரணமாகச் சொல்லும் அளவுக்கு புற்றீசலாய் பெருகிக்கொண்டிருக்கிறது புற்றுநோய்.

''புற்றுநோய்க்கு இதுவரை முழுமையான மருந்து என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் புற்றுநோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.

'உணவே’ மருந்து. சித்த மருத்துவத்தின் தாரக மந்திரமும் அதுதான். சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. பாட்டி வைத்திய முறையை முற்றிலும் மறந்து நாம் ரொம்பவே விலகிவிட்டதால் வியாதிகள் பெருகிவிட்டன என்றுகூடச் சொல்லலாம். கொடிய நோயாகச் சித்தரிக்கப்படும் புற்றுநோய்க்குக்கூட சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் இருக்கின்றன.'' என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன். அவரது விரிவான விவரங்கள் இங்கே...

புற்றுநோயும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவத்தில் சில நோய்களை அசாத்திய நோய்கள் என்று வகைப்படுத்தினார்கள். அதில் புற்றுநோயும் ஒன்று.

கட்டிகள் கழுத்தில் வரக்கூடிய கழுத்துக் கழலைகள் போன்றவற்றைக் 'கண்ட மாலை’ என்று சொல்லுவார்கள். அது புற்றாகவும் இருக்கலாம். புற்றுநோய் பற்றி வெவ்வேறு வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

காரண காரியங்கள்:

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று வகைப்படுத்தினால், கிடைக்கும் பதில் ஆச்சர்யத்தை தரும். அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன தொடர்பு என்பதைப் போன்றதுதான்... ஆனால், உண்மை.

சித்த மருத்துவத்தில் புற்றுநோய் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்கிறார்கள். அவை :

1. உணவு

2. சுற்றுச்சூழல்

3. மனம்

உணவை உணருங்கள்:

பட்டைத் தீட்டின பச்சரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவு, அரிசி, கோதுமை, வெள்ளை உப்பு இவற்றை இன்று அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் அஜீரணம் ஏற்படுத்தும் எண்ணெய், புலால் உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, பாலாடை, அவல், சிறுதானிய உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, 45 வயதைக் கடந்தவர்கள், நேரடியாக இனிப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை வந்த பிறகுதான் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. காபிக்கு இனிப்பு சேர்க்க, பனை வெல்லம், கருப்பட்டியைப் பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பால் சிறந்தது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பல வேதிப்பொருட்களைச் சேர்க்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்தே பெரும்பாலானவை சந்தையில் கிடைக்கின்றன. இவை உடல்நலத்துக்குக் கேடானவை.

சுகாதாரமான சுற்றுசூழல்:

இப்போது உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாட்டுப் பழங்கள் உணவுகள் போன்றவை எளிதில் கிடைக்கின்றன. அவை நாடு கடந்து இங்கு வரும்வரை கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. வசிக்கும் இடத்திற்கு அருகே விளையும் காய்கறி, பழங்களையேப் பயன்படுத்தவேண்டும். அதிலும் இயற்கை உரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், மிகவும் நல்லது.

மனம்

உள்ளார்ந்த மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும். இயற்கை எழிலை ரசிப்பது, படைப்பாற்றலை வெளிப்படுத்துவது, நல்ல நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவது, கலை இலக்கியங்களில் செலவிடுவது, தினமும் கொஞ்ச நேரமாவது கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாகப் பேசுவது, உற்றார் உறவினரோடு நல்லுறவை வளர்ப்பது, குழந்தைகளின் மழலையை ரசிப்பது போன்றவைதான் உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும்.

இன்று டி.வி.யே கதியாகக்கிடக்கும் குழந்தைகள் இரவு எட்டு மணி வரை பேய்ப் படத்தைப் பார்த்துவிட்டுத் தூங்கும்போது விளக்கை எரியவிட்டுக்கொண்டுதான் தூங்குகின்றனர். இரவு நேரத்தில் நல்ல கும்மிருட்டில் தூங்கும்போது, நம் உடலில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அந்த ஹார்மோன் புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது. பல அமெரிக்கவாசிகள், உறங்கச்செல்லும்போது மெலட்டோனின் கண்ணாடியை அணிந்து தூங்குகிறார்களாம்.

இந்த மூன்று காரணங்களைத் தவிர, ஒபிசிட்டி எனப்படும் கூடுதல் உடல் பருமன், நாட்பட்ட ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், கட்டுப்பாட்டில் இல்லாத அளவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் புற்றுநோய் வரும் வாய்ப்புகளை அதிகமாக்கும். இவைத் தவிர பரம்பரைக் காரணிகளும் காரணமாகலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள்:

எளிய மணமூட்டிகள் எல்லாமே புற்றுநோயை வரவிடாமல் தடுக்கக்கூடிய அருமருந்துகள்தான்.

மஞ்சள் அற்புதமான மருத்துவக் குணங்கள்கொண்டது. சிஸ்டோபிளாஸ்டி என்ற சிகிச்சை புற்றுநோய் வளராமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது. ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் உள்ள மூலக்கூறுகள், பக்க விளைவுகள் ஏதும் இன்றி கேன்சர் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப் பூ, வெந்தயம், இஞ்சி, கொத்தமல்லி விதை, மிளகு இவை எல்லாவற்றிலும் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, சில மருந்துகளால் ரத்தத் தட்டுக்கள் குறையும். சளி, இருமலுக்குப் பயன்படக்கூடிய ஆடாதொடை இலை ரத்தத்தட்டுக்களை உயர்த்தும்.

தாளித்தபத்ரி புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகை. புற்றுநோயைத் தடுக்கக்கூடிய வேதிப் பொருளான 'டாக்சால்’ (Taxol), தாளித்தபத்ரி மரத்திலிருந்துதான் கிடைக்கிறது.

தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற மூலிகைகள் எல்லாமே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியன. வீரியமிக்க இந்த மூலிகைகளை முறையான ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும்.

மருந்தின் பலன்கள்:

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளில் தாவர, உலோக உப்புக்களிலிருந்து செய்யக்கூடிய உயரிய சித்த மருந்துகள் இருக்கின்றன. ரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய், இரைப்பை, கருப்பை, மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கான புராஸ்டேட் புற்றுநோய் எனப் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், எல்லாமே, ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் புற்று நோய்களுக்குப் பலன் அளிக்கக்கூடியன. அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு மீண்டும் புற்று வராமல் தடுக்க சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கதிர்வீச்சு எடுத்த பிறகும், ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

புற்றுநோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும்போது, உடல் மிகவும் சோர்ந்துவிடும். வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுக்கள் குறைந்துவிடும். வெள்ளை அணுக்கள், தட்டுக்களை அதிகரிக்கவும் உடலை உறுதிப்படுத்தவும் சித்த மருத்துகள் உதவும்.

இணைந்த மருத்துவம்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் குழு (இன்டகரேடிவ் ஆன்காலஜிஸ்ட்) செயல்படுவது மிகப் பிரபலம். நோயாளிக்கு நேரத்தையும், செலவையும் இது குறைக்கும். நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கவும் வழிவகுக்கும். மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்வதும் நல்ல பலனைத் தரும். அதேபோல், நம் நாட்டில் எந்தெந்தத் துறையில் என்னென்ன சிறப்பான மருந்துகள் இருக்கிறதோ, அந்தந்தத் துறை மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாய்வு செய்து சிறப்பான சிகிச்சையை நோயாளிக்குத் தர முயற்சிப்பதன் மூலம் புற்றுநோயின் தீவிரத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தலாம்.