Tuesday, 4 February 2014

வண்ணத்துப் பூச்சிகளின் பளபளப்பிற்கு என்ன காரணம்..?



வண்ணத்துப் பூச்சிகளின் பளபளப்பிற்கு என்ன காரணம்?

பூச்சி இனத்திலேயே மிகவும் அழகான, அனைவராலும் அறியப்பட்ட பூச்சி வண்ணத்துப்பூச்சி தான்.

உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. வெப்ப மண்டலக் காடுகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன.

இவற்றின் இறக்கைகளின் மீது வண்ண நிற செதில்கள் காணப்படுகின்றன, இவைதான் பூச்சிகளின் பளபளப்பிற்கும் காரணம்.

இதில் செதில்களை அகற்றி விட்டால் தெளிந்த பகுதிபோல் தோன்றும், மேலும் அவைகளால் பறக்கவும் முடியாது.

வந்தாச்சு ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’: ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்..!



 ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் செய்தித்தாளுக்கான அப்ளிகேஷனை (ஆப்ஸ்) ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடும் முதல் தயாரிப்பு இதுவாகும்.

ஆன்லைன் செய்தித்தாளை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது. தற்போது அது உண்மையாகியுள்ளது. ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தில், ஆன்லைன் செய்தித்தாளுக்கான ‘ஆப்’-ஐ ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.

உறுத்தாத லே-அவுட் முறையில் மிகவும் அழகானதாக இந்த அப்ளிகேஷன் இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்த செய்தியையும் இதில் இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ-போன் வாடிக்கையாளர்கள் வரும் 3-ம் தேதி முதல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும்.

பல்வேறு விதமான செய்திகளிலிருந்து, வாடிக்கையாளர் தமக்குத் தேவையான குறிப்பிட்ட ரக செய்திகளை மட்டுமே பின் தொடரும் வசதி இதில் உள்ளது. உணவு, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் செய்திகளைப் படிக்கலாம். பிரசித்த பெற்ற பல்வேறு வெளியீட்டாளர்களின் செய்தி, கட்டுரைகளையும் இதில் காண முடியும்.

இதில் எந்தெந்த நிறுவனங்கள் கூட்டாளியாக இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆயினும், இது தொடர்பான வீடியோ விளம்பரத்தில் நியூயார்க் டைம்ஸ், டைம், யுஎஸ்ஏ டுடே, ஹபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தாள்களின் செய்திகள் வாசிக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நியூஸ் பீட் பகுதியிலிருந்தும் தகவல்கள் பெறப்படுகின்றன. இத்தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆபத்து வந்தால், பாதுகாத்துக்கொள்வது எப்படி..?



தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்குப் பிறகு பெண்கள் பாதுகாப்புச் சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது  கிண்டல், கேலி போன்றவற்றிற்கே கடும் தண்டனை உண்டு. மும்பை போன்ற இடங்களில் பெண்கள் கையில் கத்தி கொடுக்கப்படுவதாகச் செய்திகள்  வந்தன. ஆனால், தவறான எண்ணத்துடன் தங்களிடம் வருபவர்களை எளிதாகச் சமாளிக்க நல்லதொரு ஆயுதம் சில ஆண்டுகளுக்கு முன்பே  தமிழகத்துக்கு வந்துவிட்டது. அது பெப்பர் ஸ்பிரே.

டெல்லி, ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் பெரும்பாலான பெண்களின் கையில் இது இருக்கிறது. கத்தி பயன்படுத்தும்போதுகூட  பெண்களுக்கும் ஆபத்து நேரிடலாம். ஆனால், இதில் அந்த மாதிரி பயப்படத் தேவையில்லை. ஹேண்ட் பேக்கில் வைக்குமளவுக்குக் கிடைக்கிற  இதைக் கையாள்வதும் எளிது. தாக்குதலில் எதிராளி இறந்து விடுவாரோ என்கிற அச்சம் தேவையில்லை. ஏனெனில், இந்த ஸ்பிரேயில் இருப்பது  அமிலமோ, வேதிப்பொருள்களின் கலவையோ அல்ல. வெறும் மிளகுத்தூளும் மிளகாய்த் தூளும்தான்.

சென்னை போன்ற நகரங்களில் முன்னணி மருந்துக்கடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளில் இது கிடைக்கிறது.  வெளியிடங்களில் தவறான நோக்கத்துடன் தங்களை ஒருவர் நெருங்குகிறார் என்றால், சம்பந்தப்பட்டவர் செயல்படத் தொடங்கும் முன் நீங்கள்  முந்திக் கொள்ள வேண்டும். முகத்தில் இந்த ஸ்பிரேயை அடிப்பது நல்லது.

 அடுத்த நொடியே செயல்பட முடியாமல் போவதால், ஸ்பாட்டிலேயே அவர்  பிடிபட இது உதவும். ஸ்பிரே பயன்படுத்தி முடிந்ததும் உடனடியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள். அல்லது கூட்டத்தைக் கூட்டி விடுங்கள்.மேலும் பெண்கள் பாதுகாப்புக்கென்றே சமீபத்தில் மத்திய அரசு பிரத்யேக எண்ணை ஒதுக்கியுள்ளது. சிக்கலான நேரங்களில் 181 என்ற அந்த  எண்ணை அழைக்கவும் மறக்காதீர்கள்.

நான் என்ன சின்னக் குழந்தையா..?



நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.

அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார்.

சிற்பி “இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு” என்கிறார்.

இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார்.

அரசன் “இதில் என்ன விஷயம் இருக்கிறது” என்கிறார்.

முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி.கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.

சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது.

சிற்பி ” மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்” என்கிறார்.

இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார்.

இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது.

இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார்.

பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.

இதில் , சங்கிலி வெளியே வரவே இல்லை.

சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.

அப்போது இதில் “யார் தான் சிறந்த மனிதர் என்று” அரசன் கேட்கிறார்.

என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார்.

அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.மூன்றாம் முறை வரவே இல்லை.

சிற்பி ” நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள் “. அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி,
எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு , எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார்.

நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும் .மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்.

வெளிநாட்டில் படிக்கும்போது பணி - விதிமுறைகள் குறித்த ஒர் ரிப்போர்ட்..!



வெளிநாடுகளில் படிக்கும்போது, தங்களின் செலவினங்களுக்காக படிக்கும் நாட்டிலேயே ஊதியத்திற்காக பணிபுரிவது ஒரு வழக்கமான விஷயம். ஆனால், எந்தெந்த நாடுகளில் என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்த தெளிவு வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும், வெளிநாட்டு மாணவர்கள், படிக்கும்போது பணிபுரிவது தொடர்பான வேறுபட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றைப் பற்றிய அறிவை, மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பே தெரிந்துகொண்டால், எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரை அதற்கான விபரங்களைத் தருகிறது.

சிங்கப்பூர்

இந்நாட்டில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், Employment of Foreign Manpower -ன் கீழ், work pass பெறாமல், படிக்கும்போது அல்லது விடுமுறையின்போது, பணி செய்ய அனுமதி இல்லை. மாணவர்கள் 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து, விடுமுறையிலும் இருந்தால், சில பள்ளிகளுக்கு work pass பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பிரிட்டன்

இளநிலைப் படிப்பு மற்றும் அதற்கும் மேற்பட்ட படிப்புகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்கள், term time -ல் வாரத்திற்கு 20 மணி நேரமும், விடுமுறை நாட்களில் முழு நேரமும் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். அதேசமயம், இளநிலைப் படிப்பிற்கு கீழே படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், term time -ல், வாரத்திற்கு 10 நாட்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரான்ஸ்

ஒரு வெளிநாட்டு மாணவர், தேசிய மாணவர் சுகாதார திட்டத்தில் இணைந்திருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்கும் வரை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பணியாற்றலாம். அதேசமயம், ஐரோப்பிய யூனியன் அமைப்பை சாராத நாடுகளின் குடிமகனாக இருக்கும் ஒரு வெளிநாட்டு மாணவர், செல்லத்தக்க ரெசிடென்சி பெர்மிட் வைத்திருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டு மாணவர், ஆண்டிற்கு 964 மணி நேரங்கள் வேலை செய்வதற்கு பிரான்ஸ் நாட்டு சட்டங்கள் அனுமதியளிக்கின்றன.

ஜெர்மனி

ஐரோப்பிய யூனியனை சாராத வெளிநாட்டு மாணவர்கள், ஒரு ஆண்டிற்கு, 120 முழுநாட்கள் அல்லது 240 அரை நாட்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட ஜெர்மன் அதிகாரிகளிடமிருந்து அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், மேலே குறிப்பிட்ட வரம்பை மீறி பணியாற்ற விரும்பினால், அதன்பொருட்டு, வேலைவாய்ப்பு ஏஜென்சி மற்றும் வெளிவிவகாரத் துறை ஆகிவற்றிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும், ஐரோப்பிய யூனியனை சாராத வெளிநாட்டு மாணவர்கள், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது freelance பணியாளராக இருக்கவோ அனுமதியில்லை. அதேசமயம், கல்வி தொடர்பாகவோ அல்லது மாணவர் தேவை தொடர்பாகவோ இருந்தால், கால வரம்பின்றி அப்பணியை மேற்கொள்ளலாம்.

அயர்லாந்து

ஐரோப்பிய பொருளாதார மண்டலத்திற்கு(EEA) வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், கல்வி மற்றும் அறிவியல் அமைச்சரின் அங்கீகாரத்தை பெறத்தக்க வகையிலான, குறைந்தபட்சம் ஒரு வருட கால அளவைக் கொண்ட முழுநேர படிப்பை மேற்கொள்ளும்போது, அவர்கள் கேசுவல் பணி வாய்ப்பை பெறலாம்.

கேசுவல் பணி வாய்ப்பு என்பது, ஒரு வாரத்திற்கு பகுதிநேர முறையில் 20 மணிநேரங்கள் வரையும், சாதாரண கல்லூரி விடுமுறை நாட்களின்போது முழுநேரமும் பணி செய்வதாகும்.

இத்தாலி

ஒரு சர்வதேச மாணவர் கல்வி காரணங்களுக்காக விசா வைத்திருந்து, இத்தாலியில் 90 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய தேவையிருந்தால், அவர் ரெசிடென்ஸ் பர்மிட் கோர வேண்டும்.

ரெசிடென்ஸ் பர்மிட் வைத்திருக்கும் எந்த வெளிநாட்டு மாணவரும், இத்தாலிய குடிமகனைப் போலவே, வாரத்திற்கு 20 மணிநேரங்கள் மிகாமல், பகுதிநேர பணியை மேற்கொள்ளலாம்.

சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய யூனியன் மற்றும் EFTA நாடுகளை சாராத வெளிநாட்டு மாணவர்கள், வாரத்திற்கு அதிகபட்சம் 15 மணிநேரங்கள் வரை, பகுதிநேர பணி வாய்ப்பை பெற முடியும். ஆனால், அந்நாட்டில் வந்து குடியேறி 6 மாதங்கள் கழிந்த பிறகே இந்த உரிமையைப் பெற முடியும்.

மேலும், ஒருவர், முழுநேர மாணவர் என்ற நிலையை தக்கவைப்பதோடு, அவருடைய கல்வியில் தொடர்ச்சியான மேம்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம், ஒரு வெளிநாட்டுப் பல்கலையிலிருந்து இளநிலைப் பட்டம் பெற்று, சுவிட்சர்லாந்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொண்டு, தங்களின் சுவிஸ் கல்வி நிறுவனத்திற்காக பணிபுரியும் ஒரு மாணவர், மேற்கண்டபடி, 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

அமெரிக்கா

F1 விசா வைத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், முதலாமாண்டு படிக்கையில், கல்வி நிறுவனத்திற்கு வெளியில் சென்று பணிசெய்ய அனுமதியில்லை. அதேசமயம், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் அலுவலர்களிடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றிருந்தால் தடையில்லை.

சில குறிப்பிட்ட சூழல்களின் கீழ், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்(USCIS), ஒரு வருட படிப்பிற்கு பிறகு, மாணவர்கள் வெளியே சென்று பணிசெய்யும் அனுமதியை வழங்குகிறது. அதேசமயம், கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளேயே ஒருவர் பணிசெய்ய USCIS அனுமதி தேவையில்லை. இதன்மூலம் ஒருவர், ரெகுலர் நாட்களில் வாரத்திற்கு 20 மணி நேரங்களும், நீட்டிக்கப்பட்ட விடுமுறை நாட்கள், இடைவெளிகள் மற்றும் கோடைகால நாட்களின்போது, வாரத்திற்கு 40 மணிநேரங்கள் வரையும் பணிபுரியலாம்.

ஆஸ்திரேலியா

இந்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு வெளிநாட்டு மாணவர், ரெகுலர் படிப்பின்போது, ஒவ்வொரு 15 நாட்களிலும், 40 மணிநேரங்கள் பணிபுரியலாம். அதேசமயம், இடைவெளிகள் மற்றும் விடுமுறை நாட்களில், கால வரம்பின்றி பணியாற்றலாம்.

அதேசமயம், முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அதேபோல், ஊதியமின்றி நன்கொடை தொடர்பான தன்னார்வ பணிகளை மேற்கொள்வோருக்கும், படிப்பின் ஒரு பதிவுசெய்யப்பட்ட பகுதியாக பணி இருக்கின்ற படிப்பை மேற்கொள்வோருக்கும் எந்த தடையும் இல்லை.

கனடா

பொது பல்கலைகள், கம்யூனிட்டி கல்லூரிகள், CEGEP கல்வி நிறுவனங்கள், பொது நிதியளிக்கப்படும் வணிக அல்லது தொழில்நுட்ப பள்ளி அல்லது பட்டம் வழங்கும் வகையில் அனுமதியளிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வொர்க் பர்மிட் இல்லாமல், கல்வி நிறுவன வளாகங்களில் பணியாற்றலாம்.

குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திற்காகவோ அல்லது அந்த கல்வி நிறுவன வளாகத்தில் இயங்கும் இதர வணிக நிறுவனத்திற்காகவோ பணியாற்றலாம். அதேசமயம், வளாகத்திற்கு வெளியே என்று வரும்போது, ரெகுலர் நாட்களில் வாரத்திற்கு 20 மணி நேரங்கள் மற்றும் கோடைகால மற்றும் குளிர்கால விடுமுறை நாட்கள் மற்றும் வசந்தகால இடைவெளிகள் ஆகியவற்றின்போது, முழுநேர பணியையும் மேற்கொள்ளலாம்.

நியூசிலாந்து

இந்நாட்டைப் பொறுத்தவரை, சர்வதேச மாணவர்களுக்கு, படிக்கும்போது பணியாற்றும் விஷயத்தில், படிப்பின் வகைப்பாட்டைப் பொறுத்து, பல்வேறான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அகடமிக் வருடத்தின்போது மற்றும் அகடமிக் ஆண்டில் வரும் விடுமுறை நாட்களில், பணிவாய்ப்பு offer இல்லாமல், வாரத்திற்கு 20 மணிநேரங்கள் வரை பணிபுரிய கீழ்கண்ட வகைப்பாடுகள் உள்ளன. அவை,

* நியூசிலாந்தின் தனியார் பயிற்சி கல்வி நிறுவனம் அல்லது மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களில், குறைந்தபட்சம் 2 வருட காலஅளவு கொண்ட முழுநேர படிப்பை மேற்கொள்வோர்.

* தனியார் பயிற்சி கல்வி நிறுவனம் அல்லது மூன்றாம் நிலை நிறுவனத்தில், குறைந்தபட்சம் 6 மாத காளஅளவில் முழுநேர படிப்பை மேற்கொண்டிருப்போர். அதேசமயம், அவர்கள் விதிமுறைகள் தொடர்பாக, விசா அதிகாரியை திருப்தி செய்திருக்க வேண்டும்.

அஞ்சானிலும் ஒரு பல்லேலக்கா..?


இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் ஒரு பாடல்காட்சி புனேயில் ஒரு கிராமத்தில்
படமாக்கப்பட்டுவருகின்றது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி - ஸ்ரேயா நடித்த சிவாஜி படத்தின் மெஹா ஹிட் பாடலான ”பல்லேலக்கா” பாடலில் இடம்பெறும் பெரும்பாலான பகுதிகள் இதே கிராமத்தில்தான் படமாக்கப்பட்டன. “பல்லேலக்கா” பாடலில் விதவிதமான காட்சிகள் இடம்பெற்றிந்தது நினைவிருக்கலாம்.

அஞ்சான் திரைப்படத்தின் ஒரு பாடலும் அதே கிராமத்தில் தற்பொழுது படமாக்கப்பட்டுவருகிறது. திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யூ.டி.வி. மோசன்
பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பை மற்றும் மஹாராஷ்டிராவில்
படமாக்கப்பட்டுள்ளன.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். பத்மஸ்ரீ சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகிவருகிறது. சூர்யா இரட்டை
வேடங்களில் நடித்துவருகிறார். இப்படம் வருகிற ஆகஸ்டு 15ல் வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் 2 மாதங்கள் கழித்து ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-  


சூப்பர் ஸ்டார் ரஜினி நுரையீரல் பாதிப்பு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தவுடன் தனது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து அப்படத்திற்கு கோச்சடையான் என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏப்ரல் 11ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாக கூறியுள்ளது. ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தும் செயல்திறன் பிடிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனேவும், மற்ற கதாபாத்திரங்களில் ஷோபனா, சரத்குமார், ஆதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியாவில் செயல்திறன் பிடிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் படம்பிடிக்கப்பட்ட முதல் படமாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


 தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்புரி, பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது என ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.