குறும்படமாக வெளிவந்த கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார்கள். நான் குறும்படம் பார்க்கவில்லை, அதனாலோ என்னவோ இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டு பார்க்காமல் இயல்பாகப் பார்க்க முடிந்தது. படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.
ஒரு பண்ணையாருக்கு தற்காலிகமாக ஒருவர் தனது பத்மினி காரை பார்த்துக்க கூறி கொடுத்து செல்ல, அதன் மீது காதலாகிறார்கள் பண்ணையாரும் அவரது ஓட்டுனரும். இறுதியில் பத்மினி கார் என்ன ஆனது? என்பதை ரொம்ப அழகாக கூறி இருக்கிறார்கள்.
பண்ணையார் ஜெயபிரகாஷ் மற்றும் துளசி தம்பதியினர் கிராமத்தில் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாக இருப்பவர்கள். கதை கொஞ்ச காலம் பின்னாடி நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. கிராமத்தில் எதையுமே இவர் தான் முதலில் வாங்கி அறிமுகப்படுத்துவார். வானொலி, தொலைக்காட்சி இப்படி.. அட! கழிவறையை கூட இவர் தான் திறப்பு விழா செய்வார் என்றால் பார்த்துக்குங்க.. grey பண்ணையாரும் பத்மினியும் [2014] A feel good movie இப்படிப் பட்டவர் வீட்டிற்கு பத்மினி காரை பார்த்துக்க கூறி அவரது உறவினர் கொடுத்து விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.
இதற்கு ஓட்டுனராக வருபவர் தான் விஜய்சேதுபதி. திரும்ப ஒருமுறை கதையின் நாயகனாக வந்து இருக்கிறார். ரம்மியில் விட்டதை இதில் பிடித்து விட்டார். இவரும் ஜெயபிரகாஷும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். இரண்டு பேருமே காரின் மீது ரொம்ப பிரியமாக இருப்பார்கள். படம் பார்க்க பார்க்க நாமும் அந்தக் காரின் மீது காதலாகி விடுவோம் என்பது இதன் திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.
பொல்லாதவன் படத்தில் பைக் எப்படி முக்கியக் கதாபாத்திரமாக வந்ததோ அதே போல இதில் கார். கார் வைத்து இருக்கும் எவரும் குறிப்பாக யார் ரசித்து பராமரிக்கிறார்களோ அவர்கள் இந்தப் படம் பார்த்து தங்கள் காரைப் பார்த்தால் ஒரு காதலோடு பிரியத்தோடு தான் பார்ப்பார்கள். அந்த மேஜிக்கை இந்தப் படத்தின் திரைக்கதை கொண்டு வருகிறது.
இதில் பெரிய ஆச்சர்யம் இவர்களின் காரின் மீதான அன்பு மிகை நடிப்பாக தோன்றாதது தான். பொதுவா நாம நினைப்போமே.. “யோவ் போங்கய்யா! சும்மா ஊர்ல இல்லாத காரை வைத்து இருக்காங்களா!” என்று.. படம் முழுக்க இதுவே இருந்தாலும், அது மாதிரி ஒரு காட்சியில் கூட நினைக்கத் தோன்றவில்லை. அந்தக் காரை படம் பார்ப்பவர்களும் நேசிக்கத் துவங்கி விடுகிறார்கள்.
ஜெயபிரகாஷ் கார் ஓட்டப் பழக விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கோ எங்கே இவர் பழகினால் நம்மை ஓட்டுனராக இருப்பதில் இருந்து கழட்டி விட்டு விடுவாரோ என்று வேண்டும் என்றே கார் ஓட்டப் பழக்குவதை தாமதப் படுத்துவார். ஒரு காட்சியில் ஜெயபிரகாஷ் கார் ஓட்டிப் பழகும் போது ஒரு பாறையில் மோதி விடுவார். உண்மையிலேயே அவர்களை விட படம் பார்த்தவர்கள் தான் பதட்டம் ஆகி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், நான் உட்பட grey பண்ணையாரும் பத்மினியும் [2014] A feel good movie .
இதில் ஜெயபிரகாஷ், துளசி அன்பு காதல் படத்தின் பலம். கல்லூரிக் காதல், பள்ளிக்கூட காதல் என்று போய்க்கொண்டு இருக்கும் காலத்தில் இவர்களின் காதல் படம் பார்க்கும் எவரையும் ரசிக்க வைக்கும். இருவரின் அன்பையும் காதலையும் அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தெரியாதது போல அன்பை வெளிப்படுத்துவது அருமை. இவர்கள் வயதில் உள்ளவர்கள் இந்தப் பகுதிகளை நிச்சயம் ஏக்கமுடன் தான் பார்ப்பார்கள். துளசி சில இடங்களில் மிகை நடிப்பு போல தோன்றினாலும் உறுத்தவில்லை.
விஜய் சேதுபதி ஒரு ஓட்டுனர் என்பது மட்டுமல்ல, முதலாளி ஜெயப்பிரகாஷை விட காரை அதிகமாக காதலிப்பார். பார்த்து பார்த்து துடைத்து வைப்பதை பார்க்கும் எவரும் தங்களின் காரின் நினைவு வந்தாலே இந்தப் படத்தின் வெற்றி தான். காரின் சொந்தக்காரர் வந்து கேட்டு விட்டால் என்ன பண்ணுவது என்று இருவரும் கவலைப்படுவது, ரொம்ப எதார்த்தமான நடிப்பு. ஒரு கட்டத்தில் சண்டையாகி பின் திரும்ப இருவரும் ராசியாவது அருமை. அங்கே அன்பு என்ற ஒன்றே பிரதானமாக இருக்கும்.
நான் சென்னையில் இருந்த போது பல புதிய வகை பைக் இருந்தும் (அப்போது பல்சர் பிரபலமாக இருந்தது) Splendor+ தான் வாங்குவேன் என்று வாங்கி, அதன் ஹேன்ட் பார் சிறியதாக மாற்றி, துடைத்து துடைத்து வைப்பேன். அதில் போவதென்றால், எனக்கு என்னமோ பென்ஸ் / ஜாகுவார் காரில் போவது போல ஒரு நினைப்பு. ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கிளம்பினால், நான் தான் ராஜா மாதிரி நினைப்பேன். நெடுஞ்சாலையில் செல்லும் போது என்னமோ திரைப்படத்தில் ஹீரோ போவது போல எனக்கு ஒரு கெத்து இருக்கும். அவ்வளவு ரசித்து ஓட்டுவேன். வேறு யாரும் ஓட்டக் கேட்டால் அரை மனதோடு தான் கொடுப்பேன். சரியாக ஒட்டுவார்களா? என்ற பயத்துடனே. இதெல்லாம் எனக்கு படம் பார்க்கும் போது மனதில் வந்து போனது.
ஜெயபிரகாஷ் பெண்ணாக நீலிமா. இவருக்கு வேலையே ஒவ்வொருமுறை கணவருடன் வரும் போதும் ஏதாவது ஒரு பொருளை இங்கே இருந்து கேட்டுப் பெறுவது தான். எனக்குப் பெரிய சந்தேகம்?! இந்த நீலிமாக்கு வயசே ஆகாதா!! நானும் கிட்டத்தட்ட 10 வருடத்திக்கும் மேல் பார்க்கிறேன், எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார். கதாப்பாத்திரம் கூட கிட்டத்தட்ட அப்படித் தான்.. கொஞ்சம் கோபம் கொஞ்சம் அழுகை. இவர் பேசும் முறை ஒரு பண்ணியாரின் மகள் என்ற அந்த கெத்து நன்றாக பொருந்தியுள்ளது.
ஜெயபிரகாஷ் பண்ணையில் வேலை செய்யும் நபருமாக கார் க்ளீனருமாக!!! வரும் ஒரு நபர் பட்டப் பெயர் பீடை. இவர் என்ன வாழ்த்தினாலும் புட்டுக்கும் grey பண்ணையாரும் பத்மினியும் [2014] A feel good movie . நகைச்சுவைக்கு இவர் தான். நன்றாக நடித்து இருக்கிறார். படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல இவர் உதவி இருக்கிறார். நாங்கள் தோட்டத்தில் இருந்த போது அங்கே 10 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்தார்கள். ஒவ்வொருவரும் குறைந்தது 20 – 25 வருடம் இருந்தவர்கள். அனைவருமே ரொம்ப பிரியமாக இருப்பார்கள். இப்பவும் எங்கள் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் அனைவரும் வந்து வேலை செய்வார்கள். எங்கள் சொந்தக்காரர்களே “உங்க வீட்டில் சொந்தக்காரங்க கூட்டத்தை விட வேலை ஆளுங்க கூட்டம் தான் அதிகம் இருக்கு” என்று கூறுவார்கள். இதற்கு நாம் அவர்களிடம் அன்பாக இருந்தால், அவர்களும் உண்மையாக இருப்பார்கள் என்பது தான் காரணம். விஜய் சேதுபதி மற்றும் இந்தப் பீடை கதாபாத்திரமாக இருப்பவரை பார்க்கும் போது எனக்கு இதெல்லாம் நினைவிற்கு வந்தது.
விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யா (ரம்மி கதாநாயகி), நல்ல பொருத்தம். இவர்களின் பகுதியும் ரசிக்கும் படி இருக்கிறது. பாவாடை தாவணியில் இவரைப் பார்க்க ரொம்ப நன்றாக உள்ளது. இனிமேல் இவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் காரணம், இரண்டு படங்களில் ஒன்றாக நடித்தது தான். ரம்மி நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வெளி வந்தது, இடையில் நிறைய விஜய் சேதுபதி படங்கள் வெளிவந்து விட்டது ஆனால், இது இரண்டும் தொடர்ந்து வந்தது போல ஆகி விட்டது.
சினேஹா டார்லிங் நட்புக்காக சில நிமிடங்கள் வந்து செல்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் ரொம்ப நன்றாக நடித்து இருந்தார், அனுபவம் பேசுகிறது. இவரைப் போல அட்டகத்தி தினேஷ். இவரின் கதை கூறுவதில் தான் படமே தொடங்குகிறது. கடைசியில் சில நிமிடமே வருகிறார் ஆனால், அந்த சில நிமிடங்களிலும் பல முகபாவனைகளைக் காட்டி பச்சக்குன்னு மனதில் ஒட்டிக்கொள்கிறார். நிஜமாகவே!
ஒளிப்பதிவு ரொம்ப நன்றாக இருந்தது. நான் பார்த்தது பெரிய திரையரங்கம் என்பதால், ரொம்ப ரசித்துப் பார்த்தேன். பாடல்களை நான் முன்பு கேட்கவில்லை என்பதால் இது பற்றிக் கூற முடியவில்லை. பின்னணி இசை இரைச்சலாக இல்லாமல் இருந்தது. முதல் பாதி கொஞ்சம் நீளமாக இருப்பது போல தோன்றுகிறது. காட்சிகள் எளிதாக ஊகிக்க முடிகிறது.
எடிட்டிங்கும், திரைக்கதையும் தான் படத்தின் பலம். வெறும் காரை மட்டும் வைத்துக்கொண்டு சுவாரசியமாக ஒரு படத்தை கொடுப்பது என்றால் சாதாரண விசயமில்லை. இதில் தனது முதல் முயற்சியிலேயே இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார். படத்தை சோகமாக முடித்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது. நல்ல வேளை அப்படியில்லாமல் நன்றாக முடித்து இருக்கிறார்கள்.
ஆபாசமில்லை, குத்துப் பாடல்கள் இல்லை, வெறுப்பான காட்சிகள் இல்லை, கடுப்பான நகைச்சுவை இல்லை, ஹீரோயிசம் இல்லை, வெளிநாட்டுப் பாடல்கள் இல்லை, ஹீரோயினை மோப்பம் பிடிக்கும் வேலை இல்லை. கதை உள்ளது, அருமையான திரைக்கதை உள்ளது, படம் நெடுக அன்பு உள்ளது, ரசிப்புத் தன்மை உள்ளது, கதையோட நகைச்சுவை உள்ளது. இதுக்கு மேல வேற என்னங்க வேண்டும்?
குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். கார் வைத்துள்ளவர்கள் குறிப்பாக காரை ரசித்துப் பராமரிக்கிறவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.