Friday, 21 February 2014

30 ஆண்டுகளுக்குப் பிறகு... ஒரு உண்மைக் கதை..!



கிருஸ்தவ கொள்கை மற்றும் சிறப்புகளை மையப்படுத்தி ‘வில்லியனூர் மாதா’, குழந்தை ஏசு’, அன்னை வேளாங்கண்ணி’ என பல படங்கள் வெளிவந்திருந்தாலும், கடந்த 30 ஆண்டு காலமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற குறையை தீர்க்க வேளா எண்டர்பிரைசஸ் சார்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கடல் தந்த காவியம்’.

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள வடக்கண்குளத்தில் புகழ்பெற்ற பரலோக மாதா தேவாலம் இருக்கிறது. சரித்திரப்புகழ்பெற்ற இந்த மாதா கோவிலுக்கு, 200 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கண்குளம் கடும் பஞ்சத்தில் தவித்தபோது, பெண் வடிவில் வந்த மாதா தன் கையால் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி மக்கள் தாகத்தை போக்கியதாக வரலாற்றுத் தகவல் உள்ளது. அந்த நீர் ஊற்று இன்றளவும் பயன்பாட்டில் உள்ளதாகவும், ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ஆம் தேதி சூரிய ஒளி மாதாவின் கால் முதல் தலை வரை பதிகிறதாம்.

மாதாவின் இப்படிப்பட்ட சிறப்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது கடல் தந்த காவியம் திரைப்படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பரலோக மாதா தேவாலயத்தில் நடந்து, தற்போது பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. புனித வெள்ளியான ஏப்ரல் 18-ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தில் அப்ரஜித், அசுரதா ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள்.

ஹீரோயின்களுக்கு ஆப்பு வைக்கும் அமலாபால்..!



விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படத்திலிருந்து ஸ்டார் வேல்யூ கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலாபால். அதிலும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த பிறகு பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் இறங்கி வரமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.

அதன்காரணமாக, தற்போது தனுஷ், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் அமலாபால், அடுத்தபடியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு கோடம்பாக்கத்தில் முகாம் போட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில், பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கிற சேதியறிந்த அமலாபால், அந்த படத்தை எப்படியேனும் கைப்பற்றி விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகளை எடுத்தார். விளைவு தனுஷின் ஆதரவும் அவருக்கு இருந்ததால் எளிதாக அந்த வாய்ப்பு இப்போது அமலாபாலுக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால், முதலில் அந்த படத்துக்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு ஓ,கே ஆகியிருந்தவர் வழக்கு எண் பட நாயகி மனீஷா யாதவ் தான். இந்த படத்திற்காக தன்னை அழைப்பார்கள் என்று மாதக்கணக்கிலும் காத்திருந்தார். ஆனால் இப்போது தனக்கான வாய்ப்பை அமலாபால் அபகரித்து விட்ட சேதியறிந்து மனசொடிந்து போய் இருக்கும் மனீஷா, அடுத்து விதார்த்துடன் நடித்துள்ள பட்டய கிளப்பு பாண்டியாவாவது தன்னை காப்பாற்றுமா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…!



சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பங்கேற்க உள்ளார்.

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… ஏ.ஆர்.ரஹ்மானின் "இன்ஃபினிட் லவ்" என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

அதற்கான நுழைவுச் சீட்டுகள் இப்போதே விற்கத் தொடங்கி விட்டன. ‘டிஎம்எல் லைப்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகனான இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை விருந்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடிய ஏ.ஆர். ரஹ்மான் மலேசிய, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலுடனும் உற்சாகத்துடன் உள்ளதாகக் கூறினார்.

 இந் நிகழ்ச்சி மலேசியாவில் ஏப்ரல் 26ம் தேதியும் சிங்கப்பூரில் ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.


இளையராஜா சொன்னார்.. நான் கேட்கல.. - வட போச்சே..!



சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அப்புக்குட்டி,பின்னர் அதே இயக்குனர் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா, அப்புக்குட்டியின் நடிப்பை பாராட்டியதோடு, அப்புக்குட்டி பெரிய வேடங்களோ அல்லது ஹீரோ வேடங்களுக்கோ காத்திருக்காமல் வெண்ணிலா கபடிக்குழு போன்ற படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பை தொடர்ந்தால் கண்டிப்பாக அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறினார்.

ஆனால் இளையராஜாவின் அறிவுரையை மதிக்காத அப்புக்குட்டி முக்கிய வேடங்களுக்கும், ஹீரோ வேடத்திற்கு காத்திருந்தார். அவர் நினைத்தபடி மன்னாரு படத்தில் ஹீரோ வாய்ப்பு அப்புக்குட்டி கிடைத்தது. ஆனால் அந்த படம் வெற்றியடையவில்லை.

அதன்பின்னர் சிறுசிறு வேடங்களில் சில படங்களில் நடித்த அப்புக்குட்டிக்கு இப்போது வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. இளையராஜாவின் ஆலோசனையை மதித்து காமெடி ரோலில் அப்புக்குட்டி நடிக்க ஆரம்பித்திருந்தால், சூரி அளவுக்கு இந்நேரம் நகைச்சுவை நடிப்பில் கலக்கியிருக்கலாம். அதைவிட்டு, ஹீரோவுக்கு ஆசைப்பட்டு வாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கியிருக்கிறார் அப்புக்குட்டி.

‘டி-டே’ நடுங்க வைக்கும் திரில்லர் விமர்சனம்..!



மிகப்பெரிய நடிகர்களை வைத்து 'கல் ஹோ நா ஹோ', 'சாந்தினி சவுக் டு சைனா' போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காத படங்களை கொடுத்து வந்த நிகில் அத்வானி இத்திரைப்படத்தில் மிகவும் ரிஸ்க்கான கருவை தேர்ந்தெடுத்து அதை ஆக்ஷன் த்ரில்லராக தந்திருக்கிறார்.

இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான இக்பால் சேத்தை (ரிஷி கபூர்) கைது செய்ய முடிவெடுத்த இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தலைவர் அஸ்வினி ராவ் (நஸ்ஸார்), ரகசிய உளவாளியாக நாயகன் வாலிகானை (இர்பான் கான்) கராச்சிக்கு அனுப்புகிறார்.

தங்க வியாபாரம் செய்பவராக வெளி உலகத்தில் உலா வரும் இக்பால் சேத் நிழல் உலகில் இந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தும் சதி வேலை செய்து வருகிறார்.

இந்த உண்மைகள் தெரிந்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல், அந்த அமைப்பு அவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வளையமாக விளங்குகிறது. இதனால் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியாமல் தடுக்கப்படுகிறது.

ஆனால் ஒரு சமயத்தில் ஐ.எஸ்.ஐயின் எதிர்ப்பையும் மீறி இக்பால் சேத் தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறார். இதை தெரிந்து கொண்ட நாயகன் வாலி கான் தனது தலைவரான அஸ்வினி ராவிடம் இந்த தகவலை தெரிவிக்கிறார்.

உடனடியாக இருவரும் சேர்ந்து ஆபரேஷன் கோல்டுமேன் என்ற திட்டத்தை தீட்டுகிறார்கள். இத்திட்டத்தில் பெண் வெடிகுண்டு நிபுணரான சோயா ரஹ்மான் (ஹுமா குரேஷி), மும்பையை சேர்ந்த கேடியான அஸ்லாம் (ஆகாஷ் தாஹியா) மற்றும் இந்திய ஆயுதப்படை அதிகாரியான கேப்டன் ருத்ரபிரதாப் சிங் (அர்ஜுன் ராம்பால்) ஆகிய மூன்று பேரை இணைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் திட்டமிட்டபடி இக்பால் சேத்தை கைது செய்தார்களா? அல்லது என்கவுண்டர் செய்தார்களா என்பதே மீதி கதை.

நாயகனான இர்பான் கான் அதிரடியாகவும், இயல்பாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனது மனைவிக்கும், மகனுக்கும் பாசத்தை காண்பிக்கும் அவர், இந்திய தேசத்தை நேசிப்பதிலும், நாட்டை காப்பதில் உறுதியோடு இருப்பதிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

ஹுமா குரேஷி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்வதற்காக அஸ்வினி ராவின் திட்டத்தில் பங்கு கொள்ளும் ஆகாஷ் தாகியாவும் நன்றாக நடித்துள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ரிஷி கபூர் வியப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அவருடைய பார்வை, பேசும் வசனம் மற்றும் டென்ஷனான சூழலில் மராத்தி மொழியில் பேசிக்கொள்வதிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கராச்சி நகரில் விபச்சாரியாக வரும் ஸ்ருதிஹாசன் உயிரோட்டமாக நடித்து அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை வெளிப்படுத்துவதில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி அருமையான சோகப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இப்பாடலில் அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்பது நிஜம். இப்படத்தின் மறக்க முடியாத பாடலாகவும், என்றும் நெஞ்சில் நின்று ரீங்காரமிடும் பாடலாகவும் இந்த பாடல் விளங்கும்.

இரும்பு கவசம் போன்ற கதை, வலுவான பாத்திரங்கள், நம்பக்கூடிய நிகழ்வுகள், சிறப்பான இசை ஆகியவற்றை கொண்ட ஆக்ஷன் திரில்லராக டி டே அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘டி-டே’  நடுங்க வைக்கும் திரில்லர் டே.