Friday 14 March 2014

காதல் சொல்ல ஆசை - சினிமா விமர்சனம்…!




அப்பா, தாத்தா என முன்னோர்கள் அனைவருமே நேர்மையான போலிஸ் அதிகாரிகளாக இருக்கும் தன் தலைமுறையில் தன் மகன் அசோக்கையும் போலீஸ் ஆக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அசோக்கின் தந்தை.

ஆனால் அசோக்கிற்கு அதில் விருப்பமில்லாததால் நண்பர்களுடன் தங்கி வேலை தேடி வருகிறார். அந்த நேரத்தில் நாயகியின் மொபைல் அசோக்கிடம் கிடைக்க, அதைக் கொடுக்க போகும்போது நாயகி வேலை செய்யும் கம்பெனியிலேயே அசோக்கிற்கு வேலையும் கிடைத்துவிடுகிறது. வேலையோடு வேலையாக நாயகியையும் ஒருதலையாக காதலிக்கத் தொடங்குகிறார் அசோக்.


ஒரு கட்டத்தில் அசோக் மீது நாயகிக்கும் காதல் வருகிறது. அந்த நேரத்தில் அவர்கள் கம்பெனி முதலாளியின் மகன் கௌதமுக்கும் இறந்துபோன தன் காதலிபோல் இருக்கும் நாயகி மீது காதல் வருகிறது. கௌவுதமும், அசோக்கும் நல்ல நண்பர்கள். இந்த சூழலில் யாருடைய காதல் வெற்றி பெற்றது? யார் யாருடன் சேர்ந்தார்கள்? என்பது மீதி கதை.

படத்தில் வரும் பாதிக் காட்சிகள் பார்த்து, சலித்து புளித்துப் போனவை. முதல் காட்சியிலிருந்தே சுவாரஸ்யமில்லாமல் நகரும் இப்படத்தை இரண்டரை மணி நேரத்திற்கு இழுத்திருக்க வேண்டிய அவசியம்தான் என்னவோ?

இது காதல் கதையா? காமெடி கதையா? ஆக்ஷன் கதையா? இல்லை லட்சியக் கதையா? என படம் பார்க்கும் அத்தனை ரசிகர்களையும் குழப்பியடித்திருக்கிறார் இயக்குனர்.

லேக்காவின் பின்னணி இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பாடல்களும் அடிக்கடி வந்து எரிச்சலூட்டுகின்றன. ஒளிப்பதிவு மட்டுமே கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கிறது!

நாயகன் அசோக், இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். ஏற்கெனவே ‘கோழி கூவுது’ படத்திலும் நல்ல பாராட்டை பெற்றவர். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது அசோக்கிற்கு.நாயகி வாஸ்னா அஹ்மது நல்ல கலையான முகம்.

முதல் பாதி முழுக்க புடவையில் குடும்பப்பாங்காக வந்து ரசிக்க வைக்கிறார். இருந்தாலும் மனதை கவரும்படியான காட்சிகள் இல்லை. கௌதமாக நடித்துள்ள மது நல்ல தேர்வு. இது தவிர ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரவி ராகவேந்தர் ஆகியோரும் தங்கள் பங்குக்கு நடித்துள்ளனர்.

மொத்தத்தில் ‘காதல் சொல்ல ஆசை’ வழக்கமான காதல்…..

ஆதியும் அந்தமும் - சினிமா விமர்சனம்…!




ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் சைக்கலாஜி துறையில் பேராசிரியராகவும், மனநல மருத்துவராகவும் சேர்கிறார் அஜய். அங்கேயே தங்கும் அவருக்கு ஒரு இளம்பெண்ணின் ஆவி தினந்தோறும் இரவில் கண்ணில் பட, அது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதே கல்லூரியில் ஒரு டிவி நிகழ்சிக்காக தங்கும் காம்பியருக்கும் அங்கு ஏதோ தவறாகப் பட, அவரும் அஜய்யுடன் சேர்ந்துகொள்கிறார்.

இதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்பு உருவானதால் கல்லூரி நிர்வாகத்தின் மேல் சந்தேகப்படுகிறார்கள். இந்த நிலையில் அஜய், காணாமல் போக கல்லூரி முதல்வர்தான் காரணமென அவரிடம் போய் கேட்கிறார் காம்பியர். அஜய் திரும்ப கிடைத்தாரா? அவரை ஏன் கல்லூரி நிர்வாகத்தினர் தடுக்கிறார்கள்? அந்த ஆவியின் பின்னணி என்ன? அது ஏன் அஜய் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது? என பல சஸ்பென்ஸ் கேள்விக்களுக்குப் பதிலாக திரையில் திரைக்கதையாக விரிகிறது ‘ஆதியும் அந்தமும்’.

படத்தில் முதல் காட்சியிலேயே நேராக கதைக்குள் ரசிகர்களை கூட்டிச் செல்கிறார் இயக்குனர் கௌசிக். அதோடு ரசிகர்களை சோதிக்காமல் இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்ததற்கும் பாராட்டுக்கள்!முதல் பாதியில் திகிலை மட்டுமே மையமாக வைத்து, என்னவாக இருக்கும்? என யோசிக்க வைத்த இயக்குனர், இரண்டாவது பாதியில் சீக்கிரமே அதை ரசிகர்களுக்கு சொல்லி எதிர்பார்ப்பை சற்று குறைக்கிறார்.

ஆனாலும் ரசிகர்களை இறுதிவரை சீட்டில் உட்கார வைக்கிறார் கௌசிக்.இதுபோன்ற திகில் படங்களுக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சரியாக அமைய வேண்டியது அவசியம். அவை இந்தப் படத்தில் பிரமாதமாக கையாளப்பட்டிருக்கிறது. அழகான ஊட்டியின் ரம்மியத்தையும், இருட்டான அந்த கல்லூரி காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி படத்தோடு ஒன்ற வைக்கிறார் ஒளிப்பதிவாளர். திகில் காட்சிகளுக்கு பயத்தைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது பின்னணி இசை!

இந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு நாயகன் அஜய். ஒரு மனநல மருத்துவராக, பேராசிரியராக சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் சீரியஸ் அஜய், ஃப்ளாஷ்பேக்கில் சந்தோஷமாக, காதலுடன் வலம் வரும் ரொமான்ஸ் அஜய் என நடிப்பில் இரண்டு பரிணாமங்களைக் காட்டி பேலன்ஸ் செய்கிறார்.

நாயகி கவிதா ‘க்யூட்’டாக வலம் வருகிறார். இரண்டாவது பாதி முழுக்க ரசிகர்களை தன் நடிப்பாலும், அழகாலும் வசீகரிக்கிறார். அவரது முடிவு மனதில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.கல்லூரி முதல்வரும், முத்துவாக வருபவரும் பாத்திரத்திற்கு ஏற்ப யதார்த்தமாக நடித்துள்ளனர். ‘டிவி’ காம்பியராக வரும் இன்னொரு நாயகியும் ஓகே தான்.

மொத்தத்தில் ‘ஆதியும் அந்தமும்’ திகிலான திரைப்படம்….

ஒரு மோதல் ஒரு காதல் - சினிமா விமர்சனம்…!




சிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி வரும் இவர்.

ஒருநாள் இவர்கள் ஏரியாவில் ஒரு பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒருநாள் அந்த பெண் இவரிடம் உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிர்பந்திக்க நாயகனோ தனது வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். தனது காதலை அவர்களிடம் சொல்ல, அவர்களோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.

இருந்தாலும், தனது காதலியை எப்படியாவது கரம்பிடிக்க நினைக்கும் நாயகன், அவளை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். தனது நண்பர்கள் மூலம் அவளை பதிவு திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறார்.

பதிவு திருமணத்தன்று காதலி வராததால் என்னமோ, ஏதோவென்று பதறிக்கொண்டு அவளுடைய வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு, அவர்கள் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபடும் நாயகனை, அவள் திருமணம் செய்ய மறுக்கிறார்.

இதில் நடக்கும் மோதலில் அந்த பெண்ணின் அண்ணன் தாக்கப்பட, நாயகன் சிறை செல்ல வேண்டியதாகிறது. சிறையில் இருந்து அவரது அண்ணன் இவரை வெளிக்கொண்டு வருகிறார்.

தன்னை காதலித்தவள் இப்படி செய்துவிட்டாளே என்று மனவேதனையில் இருக்கும் நாயகனுக்கு பெங்களூருவில் ஒரு இன்ஸ்ட்டியூட் ஒன்றில் வேலை கிடைக்கிறது. மன நிம்மதிக்கு அவ்வேலைக்கு செல்கிறான்.அங்கு படிக்க வரும் நாயகி மேகாவை பார்த்ததும் காதல் கொள்கிறார்.

நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். படிப்பு முடிந்து சொந்த ஊரான டெல்லிக்கு செல்லும் நாயகி, நாயகனை டெல்லிக்கு வரவழைத்து தனது குடும்பத்தாரிடம் அவனை அறிமுகப்படுத்துகிறாள். நாயகனை அவளது குடும்பத்தாருக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதமும் தெரிவிக்கிறார்கள்.

 மேலும், நாயகனுடைய வீட்டில் இதற்கு சம்மதம் கேட்டு வருமாறும் கேட்டுக் கொள்கிறார்கள்.தனது ஊருக்கு திரும்பும் நாயகன் முதலில் தனது திருமணத்துக்கு நோ சொன்ன நாயகனுடைய குடும்பத்தார் இந்த திருமணத்துக்கு ஓ.கே. சொன்னார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் விவேக் படம் முழுவதும் துறுதுறுவென வருகிறார். குறும்புத்தனமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.பிரமீட் நடராஜன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சுவாமிநாதன் காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.காதலில் ஏற்படும் மோதலை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர், உண்மையான காதலை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார்.

முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் தடுமாறுகிறது.கே.ஆர்.கவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். யுகா ஒளிப்பதிவில் பாடல்கள் பதிவு செய்தவிதம் அருமை.

மொத்தத்தில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’ வழக்கமான பழைய காதல்….

கே.பாலச்சந்தருடன் அமீர்கான் திடீர் சந்திப்பு..!




சென்னையில் திரைப்பட விழாவை துவக்கி வைக்க அவரது சொந்த செலவில் சென்னை வந்திருந்த இந்தி இளம் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நேற்று தமிழ் நாட்டின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் சினிமாவின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

அமீர்கானின் சத்யமே ஜெயதேவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியும், அவரது கஜினி, 3 இடியட்ஸ், தூம் 3 படங்கள் பற்றியும் பாலச்சந்தர் பாராட்டி பேசினார்.

பாலச்சந்தரின் பல படங்கள் பற்றி அமீர்கான் சிலாகித்து பேசினார்.

தமிழில் பாலச்சந்தர் இயக்கிய படங்களை இந்தியில் ரீமேக் செய்வது பற்றியும் அமீர்கான் பாலச்சந்தருடன் பேசியதாக தெரிகிறது.


இன்றைக்குள்ள சூழ்நிலையில் உன்னால் முடியும் தம்பியை இந்தியில் ரீமேக் செய்து அதில் கமல் நடித்த கேரக்டரில் அமீர்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாலச்சந்தர் அவரிடம் கருத்து சொன்னதாக கூறப்படுகிறது.

நயன்தாராவை அட்டாக் பண்ணும் ஹன்சிகா..!




சிம்பு-ஹன்சிகா காதல் முறிவுக்கு நயன்தாராவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடிப்பதற்கு முன்பு வரை, ஹன்சிகாவுடன் அவரது காதல் ஆரோக்யமாகவே இருந்து வந்தது.

ஆனால், எப்போது நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிக்கத் தொடங்கினாரோ அதிலிருந்து அவர்களது காதல் ஆட்டம் காணத் தொடங்கியது. ஆக, திரைக்குப்பின்னால் ஏதோ நடந்திருக்கிறது.

அதையடுத்து சிம்புவை சந்திப்பதையே தவிர்த்தார் ஹன்சிகா, ஆனால் இந்த செய்தி வெளியில் புகைந்தபோது, அவரை தேற்றும் விதமாக, நயன்தாரா எனது தோழி, ஆனால் ஹன்சிகா எனது காதலி என்று ஸ்டேட்மென்ட் விட்டார் சிம்பு.

ஆனபோதும் அடங்கவில்லை ஹன்சிகா. திடீரென்று ஒருநாள் காதலை முறித்துக்கொண்டு, இனி நான் தனி ஆள் -என்று டுவிட் செய்து உலகுக்கு காதல் முறிவை தெரியப்படுத்தினார்.

இந்த நிலையில், இப்போது எனக்கு எந்த கட்டுக்காவலும் இல்லை என்பதை மேல்தட்டு ஹீரோக்களுக்கு நேரடியாகவே தெரியப்படுத்தி புதிய படங்களில் வேகமாக கமிட்டாகி வருகிறார் ஹன்சிகா.

அதோடு, தனது காதல் முறிவுக்கு காரணமான நயன்தாராவுக்கும் அட்டாக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

அதாவது, அவர் அடுத்தடுத்து நடிப்பதற்கு எந்தெந்த கம்பெனிகளிடம் பேசுகிறாரோ அந்த கம்பெனிகளுக்கு தானும் விசிட் அடிக்கிறாராம். அதோடு, நயன்தாராவை விட குறைவான கூலியில் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சொல்லி படங்களை தன் பக்கம் இழுத்து வருகிறாராம்.

இதனால், செகண்ட் இன்னிங்சில் இதுவரை போட்டி இல்லாத களத்தில் கம்பு சுற்றி வந்த நயன்தாரா, இப்போது ஹன்சிகா என்றொரு போட்டியாளர் உருவாகியிருப்பதால் அவரை எதிர்கொள்வது எப்படி என்பது தெரியாமல் தடுமாறிப்போய் நிற்கிறார்.