காதல்படம் என்கிற எண்ணத்தில் திரையரங்குக்குள் வருகிறவர்களை படம் தொடங்கி சிறிதுநேரம் வரைதான் நிறைவு செய்யமுடியும். அதன்பின்னர் படம் வேறுதிசையில் பயணிக்கிறது. புலிவரும்அடர்வனம் என்று பெயர் வைத்திருக்கலாம்.
முகநூல் மூலம் அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கும் நாயகன் அபிலாஷ் நாயகி சானியதாரா ஆகிய இருவருக்கும் முகலாயர்காலத்திலிருந்து இருக்கும் பெற்றோர்எதிர்ப்பு வந்துவிடுகிறது.
நாயகனின் தந்தையாக நாசர் நடித்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அவரைப்போலவே இருக்கிற அவருடைய தம்பி ஜவகர் நடித்திருக்கிறார். இவ்வளவுகாலம் தமிழ்த்திரையுலகம் இவரை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டது? நாயகன் அபிலாஷைப் பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும் போலிருக்கிறது.
இந்தப்படத்தில் பிடிக்கவில்லை. நாயகி தாழ்வில்லை. பொதுவாகக் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்வார்கள், இந்தக்காதலுக்கு அறிவில்லை.
படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் நாயகன், கல்லூரியில் படத்துக்கொண்டிருக்கும் நாயகி ஆகிய இருவருக்கும் வீட்டில் எதிர்ப்பு வந்ததும் எங்கு போவதென்றே தெரியாமல் முதலில் வருகிற பேருந்தில் ஏறிவிடலாம் என்று சொல்லி தேனிக்குப் பயணப்படுகிறார்கள்.
இத்தனைக்கும் தமிழ்த்திரையுலக வழக்கம் போல நாயகனுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
அங்கு போயும் கோயில் கோயிலாகப் போய் எங்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்கிறார்கள், படிப்பறிவு இல்லதவர்கள்கூடப் பயப்படும் வனத்துக்குள் கவலையின்றிச் சுற்றுகிறார்கள் போன்ற அபத்தங்களெல்லாம் படத்தில் இன்னொரு நாயகியாக இருக்கின்ற வர்ஷாஅஷ்வதியைச் சந்திக்கத்தான்.
தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களுக்குள்ளேயே பெண்களுக்குப் பாலியல்வன்முறைகள் நடக்கும்போது மேகமலை மாதிரி வனப்பகுதியில் நடக்காமலா இருக்கும்?
நாயகி சானியதாரா மீது வனத்துக்குள் திரியும் சில குற்றவாளிகளுக்கு ஆசை வருகிறது. அவர்களிடமிருந்து தப்ப காதலர்கள் போராடுகிற நேரத்தில் தன் சிறுவயது மகனோடு வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார் வர்ஷா.
அதன்பின்னர் மொத்தப்படமும் இயற்கைஎழில் சூழ்ந்த வனப்பகுதிக்குள்ளேயே நடக்கிறது. சந்திரனும் சூரியனும் கூட நுழையமுடியாதகாடு என்று பாட்டெழுதியிருக்கிறார் வைரமுத்து, அந்தவரிகளை சமதளத்தில் நின்றுபாடிக்கொண்டிருக்கிறார்கள் காதலர்கள்.
அந்தக்காதலர்கள் காட்டுக்குள் போனதும் கதைக்களம் காதலில் இருந்து விலகிப்போய் விடுகிறது. காதலர்களுக்கு கோழி, மீன் என்று நன்றாகச் சமைத்துப்போடுகிறார் வர்ஷா. பார்க்கும்போது நாக்கு ஊறுகிறது. வர்ஷாவின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கவர்கிறான்.
பாவாஇலட்சுமணனைக் கிண்டல் செய்கிற மாதிரி மாரிமுக்கா என்று கத்துவது ரசிக்கவைக்கிறது. வனம் பற்றியும் விலங்குகள் பற்றியும் நல்ல கருத்துகளைச் சொல்கிறார்கள். காலகாலமாக விலங்குகள் போகும்பாதையில் நாம் வீடு கட்டிக்கொண்டுவிட்டால் அவை என்ன செய்யும்?
உட்பட சில வசனங்களில் இயற்கை மீது மனிதர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் வன்முறைகளை எடுத்துச்சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கூடியிருக்கிறது என்பதற்கு இந்தப்படமும் இதன் இயக்குநரும் சான்று.
காடு பற்றியும் அங்குள்ள வாழ்க்கை பற்றியும் வர்ஷா பேசுவதைக் கேட்கும்போது அவர் அங்கேயே பிறந்துவளர்ந்த மாதிரி தெரிகிறது. அப்படியே விட்டிருக்கலாம் கடைசிக்காட்சியில் அவரைப் பெருமைப்படுத்துகிறேன் என்று அதையும் உடைத்துவிடுகிறார்கள். அவரும் காதலுக்காக வீட்டைவிட்டு ஒடிவந்து அந்தக்காட்டில் வசிப்பவராம்.
வர்ஷாவின் சின்னவயது மகனுக்கு ஒரு விநோதமான நோயைச் சொல்லி அதற்கு மருத்துவம் செய்யப்பணம் புரட்டும் காட்சிகளை வைத்து நோகடிக்கிறார்கள். அந்தக்காட்டுக்குள் சீட்டுசேர்க்கிற ஒருவர் நேர்மையாகப் பணத்தைக் கொண்டுவந்துகொடுக்கிறார்.
வர்ஷா வசிக்கும் ஓட்டுவீட்டுக்குக் கடன் இருக்கிறது போன்ற வியப்புகளும் இருக்கின்றன. ஒருவழியாகப் பணத்தைச் சேர்த்துக்கொண்டு காட்டுவழியாகப் போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று அவர்கள் காட்டுக்குள் போனதும் படத்தில் விறுவிறுப்பும் படபடப்பும் ஒருசேரச் சூழ்ந்து கொள்கிறது. புலி நடமாடும் காட்சிகளை நன்றாகப் படமாக்கியிருக்கிறார்கள்.
புலி நன்றாக நடித்திருக்கிறது. அந்தக்காட்சிகளில் நமக்கு இருக்கும் பதட்டம்கூட புலியிடம் அகப்பட்டுக்கொண்டிருப்பவர்களிடம் தெரியவில்லை. பஞ்சுமெத்தையில் உட்கார்ந்திருப்பதைப்போல மரக்கிளையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கடியான சூழலில் ஒரு குழந்தை நோயின் வலியில் துடிப்பது போல் காட்டி நம்முடைய கோபத்தைச் சம்பாதிக்கிறார் புதுஇயக்குநர் ஜேம்ஸ்டேவிட்.
தன் மகனின் உயிர் காக்க வர்ஷா எடுக்கும் முடிவு நெகிழவைக்கிறது. தன் குழந்தையை மட்டுமின்றி புலிக்குட்டியையும் அவர் காப்பாற்றுகிறார் என்று காட்டியிருப்பது தாய்மையின் உச்சம். இவ்வளவும் அந்தக்காதலர்கள் தங்கள் பெற்றோர் பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளத்தான் உதவுகிறது எனும்போது, இதற்காகவா இத்தனை துயரம் என்ற எண்ணம் வருகிறது.
0 comments:
Post a Comment