Saturday, 15 February 2014

பிகினி, கிளாமரில் பட்டையைக் கிளப்பும் சோனம் கபூர்...!



நடிகை சோனம் கபூர் தான் நடித்துள்ள பேவகூஃபியான் படத்தில் பிகினி அணிந்து நடித்துள்ளார்.நடிகைகள் பிகினி அணிந்து வந்தால் பலர் ஆச்சரியம் மற்றும் அதிரிச்சியுடன் பார்த்த காலம் மலையேறிவிட்டது. தற்போது நடிகைகள் பிகினியில் வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

அதிலும் பிகினி அணியும் காட்சிக்காக நடிகைகள் மெனக்கெட்டு உடலை சிக்கென்று வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் சோனம் கபூர் தான் நடித்துள்ள பேவகூஃபியான் படத்தில் பிகினி காட்சியில் நடித்துள்ளார்.

பேவகூஃபியான் படத்தில் சோனம் கபூர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் அவர் குரானாவுக்கு சூடான முத்தம் கொடுத்துள்ளார்.

பேவகூஃபியான் படத்தில் முத்தக் காட்சி மட்டும் அல்ல குரானாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார் சோனம் கபூர்.

சோனம் கபூர் ரோஸ் கலர் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். படத்தில் அவர் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார்.

தற்போது எல்லாம் பாலிவுட்டும், பிகினியும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. பிகினி காட்சிகளில் நடிக்க நடிகைகள் ஆர்வமாக உள்ளனர். அதற்கு சோனம் மட்டும் விதிவிலக்கா என்ன?

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள பேவகூஃபியான் படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி ரிலீஸாகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்..!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்..! -தேர்தல் ஆணையம் தகவல்..!


”ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலும், அதை வாங்க வாக்காளர்கள் மறுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் விசாரணை என்று வரும் போது, ஆதாரத்துடன் யாரும் குற்றம் சொல்வதில்லை.தற்போது நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுபற்றி எஸ்.எம்.எஸ். மூலம் கூட புகார் கொடுக்கலாம். செல்போனில் எடுக்கப்படும் புகைப்பட ஆதாரம் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆதாரங்கள் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்.” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார் சிங், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்த குமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களைச் சந்தித்த போது,”பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து மேற்கு, வடக்கு பகுதி போலீஸ் அதிகாரிகளின் முதல்கட்ட ஆலோசனை நடந்து முடிந்து விட்டது.இரண்டாம் கட்டமாக மதுரையில் தெற்கு, மத்திய பகுதி போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும், போலீசார் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலும், அதை வாங்க வாக்காளர்கள் மறுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் விசாரணை என்று வரும் போது, ஆதாரத்துடன் யாரும் குற்றம் சொல்வதில்லை.தற்போது நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுபற்றி எஸ்.எம்.எஸ். மூலம் கூட புகார் கொடுக்கலாம். செல்போனில் எடுக்கப்படும் புகைப்பட ஆதாரம் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆதாரங்கள் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்.


ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடவில்லை என்பதற்கான ‘நோட்டா’ முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாராளுமன்ற தேர்தலிலும் நோட்டா இருக்கும்.வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கான ரசீது தர முடியாது.”என்று அவர் கூறினார்.

நாம் வாங்கும் ஐந்து மருந்து/மாத்திரைகளில் ஒரு மருந்து போலியானது..!



இந்தியாவில் போலிகளுக்கு பஞ்சமில்லை; சாதாரண சோப்பில் இருந்து எல்லா பொருட்களையும் கள்ளத்தனமாக தயாரித்து, விற் பனை செய்வதில் பல நூறு கோடிகளை முதலீடு செய்வோர் உள்ளனர்.ஆனால், மனித உயிருடன் விளையாடும் போலி, கலப்பட மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடுவோர் அதிகரிப்பது தான் வேதனை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது; கலப்படமானது என்று அண்மையில் எடுக்கப் பட்ட சர்வேயியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி மருந்து மாத்திரைகள் என்றதும் அது அரசாங்கத்துக்குத் தெரியாமல் தயாரிக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். மருந்து நிறுவனங்களின் கள்ள சந்தையே போலி மருந்து, காலாவதி மாத்திரைகள் எல்லாம்.டாக்டர்கள் மத்தியிலும் போலிகள் உருவாவது அவ்வப்போது நடப்பதால் தான், பலரும் சாதா கோளாறுகளுக்கு எல்லாம் மருந்துக்கடையையே நாடுகின்றனர். தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு டாக்டரிடம் போக மறுப்பவர்கள் தான் போலி மருந்துகள் புழங்க இடம் தருகின்றனர்.மருந்துச்சீட்டு வாங்கி தான் மருந்து வாங்க வேண்டும் என்பது கூட இன்னும் பலருக்கு தெரியவில்லை.

இதற்கிடையில் எந்த ஒரு மருந்தும் நாளடைவில் வைத்துக்கொள்ளவே கூடாது; மருந்து பாக்கெட், பாட்டிலில் , காலாவதி நாள் மட்டுமல்ல, பாதுகாப்பு, பராமரிப்பு ஆலோசனையும் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இவற்றை பெரும்பாலோர் பார்ப்பதே இல்லை. என்ன மாத்திரை எழுதினார் டாக்டர், அது சரியாகத்தான் கடைக் காரர் தந்திருக்கிறாரா, என்ன மில்லி கிராம் என்பதை எல்லாம் கண்டிப் பாக கவனிங்க இனியாவது.

பொதுவாக, சில மருந்துகள், மிதமான வெப்பத்தில், சூரிய வெளிச் சம் படாமல் பாதுகாக்க வேண்டும்; சில மருந்துகள் 59 முதல் 80 டிகிரி வெப்பத்தில் வைத் திருக்க வேண்டும்; இதற்காக இருட்டான இடத்தில் வைப்பது நல்லது. சமையல் அறை, குளியல் அறை தவிர, மற்ற அறையில், அலமாரியில் வைத்து மூடி வைப்பதே நல்லது. சில மருந்துகள் பிரிஜ்ஜில் வைத்து குளிர்பதன நிலையில் வைத்திருக்க வேண்டும். வீட்டில் பிரிஜ் இல்லாதவர்கள், கடையில் அவ்வப் போது வாங்கி பயன்படுத்துவதே சரியானது.

சில மருந்துகள் விஷத்தன்மை வாய்ந் தவை; குழந்தைகள் தவறுதலாக எடுத்து விடாமல் அவர்கள் கைபடாத இடத்தில் பாதுகாப்பது முக்கியம். மருந்து காலாவதி ஆகாமல் கண்காணிக்க, மருந்தை அதே பாட்டிலில், பாக்கெட்டில் வைத்து பயன் படுத்துவது நல்லது. அப்போது தான் காலாவதி தேதியை பார்த்து வரலாம்.

மருந்துக்கடைகளில் வாங்கும் தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சாதா கோளாறுகளுக்கு வாங்கும் மருந்துகள் காலாவதி ஆகும்; அதுபோல, டாக்டர்கள் எழுதித்தரும் மருந்துகளும் குறிப்பிட்ட காலத்துக்கு பின் பயன்படுத்தவேகூடாது. கருத்தடை மாத்திரைகள், காண்டம்கள், காய்ச்சல் மருந்து, வலி நிவாரணி மருந்துகள், அலர்ஜி மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆன்டிசெப்டிக் ஆயின்ட் மென்ட்கள் ஆகியவையும் இந்த பட்டியலில் அடங்கும்.

காலாவதி ஆன மருந்துகளை பயன்படுத்துவதால் ஆபத்தா என்று பலருக்கும் சந்தேகம். அவரவர் உடல் நிலையை பொறுத்தது; குறிப்பிட்ட சில கோளாறுக்கான மருந்துகள், செயலற்றதாகி விடும்; சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்; அதனால் தான் ஆபத்து நேர்கிறது.

மருந்துகளில் உள்ள சில துணை ரசாயன பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதுவும் குழந்தைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும்.

கண் மருந்து விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலை திறந்து வைக்கவே கூடாது. ‘ட்ராப்ஸ்’ போடும் போது, கடைசியாக போட்ட துளிகளில் இருந்து தேங்கிய மருந்தை துடைத்து, சுத்தமான பின், புதிய ‘ட்ராப்’ போட வேண்டும். மற்ற மருந்துகளை விட, கண் ‘ட்ராப்’ பாட்டில்களை உடனுக்குடன் மூடி வைத்து விட வேண்டும்; சூரிய ஒளிபடாமல் வைப்பதும் முக்கியம்

விஜயகாந்த் நல்ல ஸ்டன்ட் நடிகர் - திமுக தலைவர் கருணாநிதி...!



திமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இரவு திருச்சி வந்த கருணாநிதி, வெள்ளிக்கிழமை காலை மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“திருச்சி மாநாட்டைக் காண ஏராளமான பொதுமக்களும் திரண்டு வருகின்றனர். இது மக்களவைத் தேர்தலில் எழுச் சியை ஏற்படுத்துவதோடு மட்டு மன்றி, தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்துக்கான ஆரம்ப அறிகுறி.

நண்பர்கள் என்ற முறையில் தான் காங்கிரஸ் தலைவர்கள் என்னைச் சந்திக்க வருகின்றனர். இந்த சந்திப்புகளில் அரசியல் பேச வில்லை. அதேபோல, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கனிமொழி சந்தித்ததில் எவ்வித உள்நோக்கமுமில்லை. கனி மொழி சில நாள்களுக்கு முன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவரது உடல்நலம் குறித்து தெரிந்து கொள்ள சோனியா விரும்பியதால், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காக டெல்லி சென்ற கனிமொழி சோனியாவைச் சந்தித்தார்.

2 ஜி விவகாரத்தை வைத்து காங்கிரஸ் திமுகவை மிரட்டுவதாக எழுதப்படும் செய்திகளைப் பார்த்து, மக்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். திமுகவின் நிதி நிலைமை மேம்பட்டு வருகிறது. ஆனால், முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு இல்லை.

அணிகள் மாறுவதற்கும், ஆட்சிகள் மாறுவதற்கும் மக்கள் எண்ணங்கள் மாற வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. எந்தக் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று இப்போதே திட்டவட்டமாகச் சொல்ல முடியாது, நான் சொல்லவும் விரும்பவில்லை.

வெடித்த பலூனான 2ஜி விவகாரம்

ரூ.80 ஆயிரம் கோடி, ரூ.90 ஆயிரம் கோடி ஊழல் என ராசா மீதும், வேறு சிலர் மீதும் புகார் கூறி 2 ஜி விவகாரத்தை பத்திரிகைகள் ஊதிப் பெரிதாக்கின. அந்த விவகாரம் இப்போது வெடித்த பலூனைப் போல சுருங்கி கேள்விக்குறியாகிவிட்டது.

விஜயகாந்த் நல்ல ஸ்டன்ட் நடிகர். அவர் சினிமாவில் எதிரிகளிடம் பிடிகொடுக்காமல் எப்படி நடிப்பாரோ, அதேபோல அவருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறவர்களுக்கு பிடிகொடுக்காமல் இருக்கிறார். திமுக கூட்டணிக்கு அவர் வர வேண்டும் என ஏற்கெனவே அழைத்துவிட்டேன்.

தமிழக மக்களை இன உணர்வோடும், மானத்தோடும் வாழ வைக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் எங்களது கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். விஜயகாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெய லலிதாவைப் பிரதமராக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கூறுவது அடிமைத்தனமாக இருக்கிறது.

வருகிற மக்களவைத் தேர்தலிலும், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்திய நாட்டின் ஒற்றுமையை, மதவாதத் தன்மையற்ற நிலையை, ஊழலற்ற நிர்வாகத்தை, மற்றவர் களை மதித்து அரசியல் நடத்தும் அண்ணாவின் கொள்கைகளை மையமாக வைத்து எங்களின் பிரச்சாரம் இருக்கும்.

கட்சியில் கலகம் செய்து தண்டிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்பட வேண்டிய முறையில் நடந்துகொண்டால் மன்னிக்கப்படுவார்கள்” என்றார் கருணாநிதி.

சில கேள்விகளுக்குப் பூடக மாக பதிலளித்தார். காங்கிரஸ், தேமுதிக, திமுக ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு “வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், பிரதமராகும் ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு “எனது உயரம் எனக்குத் தெரியும்” என்றும் கருணாநிதி கூறினார்.

மேலும், “கடந்த சில ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க வேண்டியவர்களாலேயே அது சிதைக்கப்படுவது வேதனையாக இருக்கிறது” என்ற கருணாநிதி, “மூன்றாவது அணி அமைவது காங்கிரஸுக்கு சாதகமாக அமையும் என்று மோடி கூறிய கருத்துக்கு, தான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.

கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா..?



வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ இந்தி படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். நானே, பசுபதி, வைபவ், வினய்வர்மா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தியில் டைரக்டு செய்த சேகர் கம்முலாவே தமிழ் படத்தையும் இயக்குகிறார். வித்யாபாலன் போல் கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்ததாகவும் எனவே கதை மற்றும் கேரக்டரில் மாற்றம் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இது குறித்து டைரக்டர் சேகர் கம்முலாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்றும் கதையை மாற்றும் படியும் நயன்தாரா என்னை நிர்ப்பந்தித்ததாக வெளியான செய்திகள் வதந்திதான். வித்யாபாலன் இந்தியில் கர்ப்பிணியாக நடித்த கேரக்டரை தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நான்தான் மாற்றினேன். நயன்தாராவை அணுகி கதை சொன்ன போதே அவர் கர்ப்பிணியாக இல்லாமல் அமெரிக்காவில் இருந்து பழைய ஐதராபாத்துக்கு தனது கணவனை தேடி வரும் ஒரு பெண் கேரக்டர் என்று விவரித்தேன். பெண் வலிமையானவள் என்பதை காட்டுவதற்காகவே கதையை உருவாக்கினேன்.

இந்தி போல் இல்லாமல் கதையில், மாற்றங்கள் செய்துள்ளேன். நயன்தாரா பிரமாதமாக நடித்துள்ளார். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அவர் நடிப்புக்கு ஈடு இல்லை.

இவ்வாறு சேகர் கம்முலா கூறினார்.

தமிழ் பதிப்புக்கு மரகதமணி இசையமைத்துள்ளார். விஜய் சி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருந்தா சாரதி, மகேஷ் வசனம் எழுதியுள்ளனர். மதன்கார்க்கி பாடல் எழுதியுள்ளார்.

தேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது..!



தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை செலவிடாமல் வைத்திருக்கின்றனர். வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.இப்போது மக்களவை உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அந்த உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவிட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்படாமல் இருக்கின்றன.நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு அதை மத்திய அரசு 5 கோடி ரூபாயாக உயர்த்தியது. அதன்படி முதல் 2 வருடங்களுக்கு தலா 2 கோடி ரூபாயும், அடுத்த மூன்று வருடங்களுக்கு தலா 5 கோடி ருபாய் என்ற கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் 19 ( 2 x 2 = 4 3 x 5 = 15 15+4=19 ) கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலமாக தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் தொடங்கி நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் சராசரியாக ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் வைத்திருக்கின்றனர். மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்திற்குள் முடிவடைகிறது. அதற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.

தொகுதி வளர்ச்சிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகம் செலவிடாமல் வைத்திருப்பவர்களில் முதலிடம் பெறுபவர் விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்க தாகூர் (காங்கிரஸ்). தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இன்னும் 7 கோடியே 93 லட்ச ரூபாய் செலவு செய்யாமல் வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தருமபுரி மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன் (திமுக), 5 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி மீதம் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தயாநதி மாறன் (4.09 கோடி), (நெப்போலியன் 3.1 கோடி), (அழகிரி 5.3 கோடி), ஆ.ராசா (2.09 கோடி) ஆகியோரும் நிதியினை செலவு செய்யாமல் மீதம் வைத்து பட்டியலில் இடம்பெறுகிறார்கள். அவ்வளவு ஏன், மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரமே தனது தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 4.05 கோடி ரூபாயை செலவு செய்யாமல் வைத்திருக்கிறார்.

சரி, இந்த நிதியை உச்சபட்சமாக செலவிட்டவர்கள் யார்..?

ஆரணி தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் (திமுக), கள்ளக்குறிச்சி தொகுதி உறுப்பினர் ஆதிசங்கர் (திமுக), தஞ்சாவூர் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக), தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் ஜெயதுரை(திமுக), வேலூர் தொகுதி உறுப்பினர் அப்துல் ரகுமான் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) என ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியினை கிட்டத்தட்ட 100 சதவீதம் செலவு செய்திருக்கிறார்கள்.

2004 -2009 ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் செலவு செய்யப்படாமல் மீதம் இருந்த தொகை 13.04 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதியில், இன்னும் 106.92 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் உள்ளது.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரும் விளக்கம் என்ன..?

நாங்கள் பணிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்கிறோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து, தொடங்கிட காலதாமதம் செய்வதால் நிதி மீதம் இருக்கிறது” என்கிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் தொகுதியில் எந்தெந்த திட்டங்களுக்குப் எவ்வளவு நிதி பரிந்துரை செய்தார்கள், அவற்றில் எவை எவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கின்றன என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடலாமே!

எத்தனையோ பள்ளிகள் முறையான கட்டிட வசதிகள் இல்லாமலும், மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லாமலும், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் இயங்கி வருகின்றன. கஜானாவில் உறங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் இவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் எதற்கும் பயனில்லாமல் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி, அரசு கஜானாவில் உறங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் யார்?

தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை முழுவதுமாக செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • ஜெகத்ரட்சகன் (திமுக)
  • தொகுதி: அரக்கோணம்
  • நிதி ஒதுக்கீடு: 16.92 கோடி
  • செலவு செய்தது: 16.66 கோடி
  • ஆதிசங்கர் (திமுக)
  • தொகுதி : கள்ளக்குறிச்சி
  • நிதி ஒதுக்கீடு : 16.64 கோடி
  • செலவு செய்தது : 16.61 கோடி
  • எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)
  • தொகுதி : தஞ்சாவூர்
  • நிதி ஒதுக்கீடு : 14.18 கோடி
  • செலவு செய்தது : 14.15 கோடி
  • எஸ். ஆர். ஜெயதுரை (திமுக)
  • தொகுதி : தூத்துக்குடி
  • நிதி ஒதுக்கீடு : 17.61 கோடி
  • செலவு செய்தது : 17.53 கோடி
  • அப்துல் ரகுமான் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்)
  • தொகுதி: வேலூர்
  • நிதி ஒதுக்கீடு: 16.9 கோடி
  • செலவு செய்தது: 16.7 கோடி

தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியினை செலவிடாமல் மீதம் வைத்துள்ளவர்கள்

  • மாணிக்க தாகூர் (காங்கிரஸ்)
  • தொகுதி : விருதுநகர்
  • நிதி ஒதுக்கீடு : 14.98 கோடி
  • செலவு செய்தது : 7.03 கோடி
  • ஆர்.தாமரைச்செல்வன் (தி.மு.க)
  • தொகுதி : தருமபுரி
  • நிதி ஒதுக்கீடு : 16.91கோடி
  • செலவு செய்தது : 11.14 கோடி
  • மு.க அழகிரி (தி.மு.க)
  • தொகுதி: மதுரை
  • நிதி ஒதுக்கீடு: 17.02கோடி
  • செலவு செய்தது: 11.72 கோடி
  • சி.சிவசாமி (அ.இ.தி.மு.க)
  • தொகுதி : திருப்பூர்
  • நிதி ஒதுக்கீடு : 16.95கோடி
  • செலவு செய்தது : 12.17 கோடி
  • டாக்டர்.பொன்னுசாமி வேணுகோபால் (அ.இ.தி.மு.க)
  • தொகுதி : திருவள்ளுவர்
  • நிதி ஒதுக்கீடு : 16.78 கோடி
  • செலவு செய்தது : 12.24 கோடி

ஆதாரம்: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சகம்

மார்ச்சில் வெளியாகிறதா என்னமோ ஏதோ..?


கௌதம் கார்த்திக் - ராகுல் பிரீத் நடிப்பில் உருவாகியிருக்கும் என்னமோ ஏதோ திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகவிருப்பதாகச் செய்திகள்
வெளியாகியுள்ளன.

ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் என்னமோ ஏதோ. தெலுங்குப் படமான ஆல மொடலாய்ண்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே மெஹா ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நீ என்ன பெரிய அப்பாடக்கரா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள ஷட் அப் யுவர் மௌத் மற்றும் மாற்றுத் திறனாளியான வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள ஒரு பாடலும் படத்தின் எதிர்பார்ப்பினைக் கூட்டிவருகின்றன.

இப்படம் வருகிற மார்ச் 28ல் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கௌதம் கார்த்திக் தற்பொழுது வை ராஜா வை, சிப்பாய், நானும் ரௌடிதான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

நிறைவடைந்தன யான் படப்பிடிப்புகள்..!



ஜீவா - துளசி நடிப்பில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் யான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் யான் திரைப்படத்தின் மூலம் பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த வருடத்தின் ஆரம்ப நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கின. இந்தியாவில் படம்பிடிக்கவேண்டிய அனைத்துக் காட்சிகளும்
படமாக்கப்பட்டபின்னர் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதமிருந்தன. மொராக்கோ செல்வதற்கான கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு கடந்த ஜனவரியில்தான் படக்குழு மொராக்கோ பறந்தது. தற்பொழுது மொராக்கோவில் படமாக்கப்படவேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால் யான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விரைவில் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் துவங்கவுள்ளன.

யான் படத்தில் ஜீவா, துளசி மட்டுமல்லாது ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தானம், நாசர், ஜெயப்பிரகாஷ்,
பிரகாஷ்ராஜ், தம்பி ராமைய்யா போன்ற பலரும் நடித்துள்ளனர்.

டாப்சி மிகச்சிறந்த நடிகை - விவேக் புகழாரம்..!



கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் வை ராஜா வை திரைப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துவரும் டாப்சியை சின்சியரான நடிகை என்று பாராட்டியுள்ளார் விவேக். மேலும் டாப்சி அழகான பெண் மட்டுமல்ல, மிகவும் சின்சியரான நடிகையும் கூட என்று பாராட்டியுள்ளார்.

ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துவரும் திரைப்படம் வை ராஜா வை. 3, வணக்கம் சென்னை
திரைப்படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவரும் மூன்றாவது திரைப்படமான இப்படம் காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி
உருவாகிவருகிறது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் வசந்த் நடிகராக அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கின.

ஆவி தள்ளிய வேன்..! - ஓர் திரீல் ரியல் அனுபவம்



இலங்கயின் வெற்றி FM இன் செய்தி பிரிவில் கடமையாற்றும் லெனினின் உண்மை கதை!

இவரும் இவருடைய நண்பர்களும் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் புஸ்ஸல்லா பகுதியிலுள்ள போபிட்டிய பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் அந்த மரண சடங்கு வீட்டிற்கு வேன் ஒன்றிலேயே சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் வேனில் ஹட்டனை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் போது, வேனில் ஒரே பேய் கதைகளை கதைக் கொண்டே சென்றுள்ளனர்.

அப்போது அவருடைய நண்பனொருவன் ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த இடத்தில் இரவு வேளையில் செல்லும் வாகனங்கள் தீடீரென நின்று விடுவதாக கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டு, பார்ப்போம் இன்று நாங்கள் அதே பாதையின் ஊடாக தானே செல்ல போறோம். என்ன நடக்குதுனு பார்ப்போம் என தெரிவித்துள்ளனர்.

சரியான அதிகாலை 2 மணி, குறித்த இடத்தை வேன் நெருங்கியுள்ளது.

யாரும் பாதையில் இல்லை. இருள் சூழ்ந்த நிலையில். பாதை அமைதியாக பேய்களை வரவேற்பது போல் காட்சியளித்தது.

குறித்த இடம். அவன் கூறியது போலவே எஞ்சின் தீடீரென செயலிழந்து வேன் வீசுப்பட்டு, உரு சுவரில் மோதி நின்றதாம்!

வேனில் எரிந்து கொண்டிருந்த அனைத்து மின்விளக்குகளும் அனைந்து, குறித்த இடமே இருளாயிற்றாம்.

சாரதி வேனை மீண்டும் ஸ்டாட் செய்ய முயற்சித்தும், வேன் ஸ்டாட் ஆகவில்லையாம்.

சுமார் அதே இடத்தில் சூரியன் உதிக்கும் வரை அவர்கள் அங்கேயே இருந்;துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த வேனில் இருந்த வேளையில் யாரோ வேனை தட்டுவது போலவும், வேனை தள்ளுவது போலவும் உணர்வுகள் தென்பட்டதாம்!

அன்று விடிந்தது. ஆள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. அப்போது அந்த பிரதேசத்தில் சென்றவர்களிடம் இவர்கள் விசாரித்துள்ளனர்.

அப்போது பிரதேச மக்கள் தெரிவித்ததாகவது:- இது அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற 5ஆவது சம்பவம் எனவும், இந்த பிரதேசத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர் காலை வேளையில் வேன் ஸ்டாட் செய்தவுடன் ஸ்டாட் ஆகிவிட்டதாம்!

இசையை விட்டுக்கொடுக்காத ஜி.வி.பிரகாஷ்குமார்..!



வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார். அப்போதில் இருந்தே அவருக்குள் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்து கொண்டேயிருந்திருக்கிறது. அதன்காரணமாகவே, மதயானைக்கூட்டம் என்ற படத்திலேயே ஹீரோவாக நடிப்பதாக இருந்தார் ஜி.வி. ஆனால், கடைசி நேரத்தில் அந்த மதுரை மண்வாசனை கதை உங்களுக்கு செட்டாகாது என்று சிலர் சொல்லப்போக, முன் வச்ச காலை பின் வைக்க வேண்டாம் என்று வேறு ஒரு நடிகரை வைத்து அந்த படத்தில் தான் தயாரிப்பாளராக மட்டும் இருந்தார். அதோடு தான் இசையமைப்பாளராக இருந்தும் ரகுநந்தனை இசையமைக்க வைத்தார்.

அதன்பிறகு பென்சில் கதையை கேட்டு முடிவெடுத்தார். ப்ளஸ் டூ மாணவன் கதை என்பதால், அது ஜி.வி.பிரகாசுக்கு பொருந்தி விட தனது உடல் எடையை குறைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு இசையமைக்கவும் ரகுநந்தனையே புக் பண்ணலாமா என்று கேட்டபோது, மறுத்து விட்டாராம் அவர்.

காரணம், நான் எந்த படத்திற்கு இசையமைத்தாலும் அதில் என்னையே ஹீரோவாக கொண்டுதான் செயல்படுவேன் அப்படியிருக்க, இது நான் நடிக்கிற படம். அதனால் நானே இசையமைக்க வேண்டும். அப்போதுதான் நான் அனுபவித்து நடிக்க முடியும் என்று சொல்லி விட்டாராம். அதோடு, இனி நான் நடிக்கும் எல்லா படங்களுக்கும் நானே இசையமைப்பேன் என்றும் கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

ஒரு படத்துக்கு பட்ஜெட் முக்கியமல்ல, கரு தான் முக்கியம்! - வெற்றிமாறன்


பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதன்பிறகு சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை இயக்கயிருந்தார். ஆனால் என்ன காரணமோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதனால் அடுத்து படம் இயக்குவதை தவிர்த்த வெற்றிமாறன், உதயம் என்எச்4 படத்தை தயாரித்தவர், தற்போது அதர்வா நடிக்கும் ஈட்டி படத்தை மைக்கேல் ராயப்பனுடன் இணைந்து தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே இரண்டு படங்களை தனுஷை வைத்து இயக்கிய வெற்றிமாறன், மீண்டும் அவரை வைத்து தற்போது இன்னொரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவரிடத்தில் இன்றைய தருவாயில் படங்களின் வெற்றிக்கு எது முக்கியமானது? என்று கேட்டால், இன்று மட்டுமல்ல எந்த காலத்திலும் ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் கரு தான் முக்கியம். நல்ல கதைகள் மட்டுமே வெற்றியை கொடுக்கும். அந்த மாதிரி படங்களே பெரிய படங்கள். மற்றபடி பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை நான் பெரிய பட்ஜெட் என்று நினைப்பதில்லை. கதைகளின் தரம் மட்டுமே என்றைக்குமே உயர்ந்தது.

அதோடு, சிலர் சிறிய நடிகர்கள் நடித்த படங்களை சின்ன படங்கள் என்கிறார்கள். ஆனால் நிறைய சின்ன படங்கள்தான் நல்ல கதையுடன் வருகின்றன. வெறும் பிரமாண்டத்தை மட்டும் தாங்கி வரும் படங்களை விட சிறிய நடிகர்களால் பெரிய கதையுடன் வரும் படங்களே என்னைப்பொறுத்தவரை பிரமாண்ட படங்கள் என்றும் சொல்கிறார் வெற்றிமாறன்.

'கடல் தந்த காவியம்' உண்மை சம்பவம் படமாகிறது..!



வேளா எண்டர்பிரைஸ் சார்பில் தயாராகியுள்ள படம் 'கடல் தந்த காவியம்'. இப்படத்தில் படத்தின் நாயகன் அப்ரஜித், நாயகி அசுறதா, இவர்களுடன் எஸ்.காந்திமதி, உஷா, விமலா, அனுப்ரியா,கருணா, காளி, மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சரத்ப்ரியதேவ் இசையமைக்கும் இப்படத்ஹிர்கு சகாயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குவதோடு இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் பிரகாஷ் ஜியோ.

படத்தைப் பற்றி கூறிய இயக்குனர் பிரகாஷ் ஜியோ, "நெல்லை அருகில் உள்ள வடக்கன்குளத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் பரலோக மாதா. இந்த மாதா கோவில் சரித்திர புகழ் பெற்றதாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கன்குளம் கடுமையான பஞ்சத்தில் சிக்கியது. அப்போது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் ஊர் மக்கள் தவித்தபோது பெண் வடிவில் வந்த மாதா தன கையால் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி மக்கள் தாகத்தை போக்கியதால வரலாற்று செய்தி கூறுகிறது.

அந்த நீர் ஊற்று இன்றளவும் அங்கு பயன்பாட்டில் உள்ளது. இங்கு மற்றொரு அற்புதம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 8ஆம் தேதி பகல் 12 மணி அளவில் சூரிய ஒளியானது மாதாவின் கால் முதல் தலை வரை பதிந்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. இப்படிப்பட்ட்ட மாதாவின் சிறப்புகளை மையப்படுத்தி ' கடல் தந்த காவியம்' உனர்வூப்பூர்வமாக தயாராகியுள்ளது.

படத்தின் பெரும் பகுதி பரலோக மாதா தேவாலய பகுதிகளிலேயே உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 18ஆம் தேதி, புனித வெள்ளியன்று 'கடல் தந்த காவியம்' வெளியாகிறது." என்று தெரிவித்தார்...


தமிழ் சினிமா காட்டிய புதிய காதல்கள் - காதலர் தின ஸ்பெஷல்..!



காதல் இல்லாத தமிழ் சினிமாவே கிடையாது. பக்தி படமானாலும், புராண படமானாலும், சரித்திர படமானாலும் அவ்வளவு ஏன் கார்டூன் படமாக இருந்தாலும் கட்டாயம் காதல் இருக்கும். சில தமிழ் படங்களைப் பார்த்த ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் "உங்களுக்கு ஐ லவ் யூ சொல்வது மட்டும்தான் பிரச்னையா?" என்று கேட்டார். அந்த அளவுக்கு காதலை கதற கதற காட்டியிருக்கிறது தமிழ் சினிமா. சினிமா காட்டிய சில வித்தியாசமான காதல்களை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போம்.

தேவதாஸ் காதல்

காதல் வகையிலேயே அதிகம் பேமஸ் ஆனது தேவதாஸ் காதல்தான். காதலி உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட காதலில் தோற்ற நாயகன் தாடி வைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டே செத்த காதல். காதலில் தோற்றவர்கள் தண்ணி அடிக்க வேண்டும். தாடி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது இந்த தேவதாஸ் காதல்.

அபூர்வ காதல்

அம்மா வயதுள்ளவரை மகன் வயதுள்ளவர் காதலிப்பதும், அப்பா வயதுள்ளவரை மகள் வயதுள்ளவர் காதலிப்பதும் அபூர்வராக காதல். இதை சொன்னவர் பாலச்சந்தர். நல்ல வேளையாக இந்த இரண்டு காதலையும் அவர் சேர்த்து வைக்க வில்லை. அப்படி வச்சிருந்தால் நிஜத்துலேயும் இந்த அபூர்வ காதல் செழித்து வளர்ந்திருக்கும்.

பள்ளிக்கூட காதல்

காதலிக்கிறதுக்கு ஒரு வயசு வேண்டும், ஒரு தகுதி வேண்டும் என்பதை உடைத்து பத்தாம் வகுப்பு படிக்கும்போதே காதலிக்கலாம் என்று பள்ளிக்கூட காதலை அறிமுகப்படுத்தியது பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை. இன்றைய சினிமாவின் பள்ளி காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாரதிராஜா. பள்ளிக்கூட சீருடை அணிந்து காதலிப்பது மாதிரி காட்சிகள் வரும்போது மனசு கிடந்த பதறுது பலருக்கு.

மழலை காதல்

பள்ளிக்கூட காதலாவது பரவாயில்லை தங்க பச்சான். அஞ்சாப்பு படிக்கும்போதே காதலிக்க கற்றுக் கொடுத்தவர். அழகி படத்தில் அவர் ஆரம்பித் வைத்த இந்த மழலை காதல் நேற்று வந்த உ படம் வரை தொடர்கிறது.

பார்க்காமலே காதல்

காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்வாங்க. அதையே மாற்றி காதலிக்கிறதுக்கு பார்க்ககூட தேவையில்லை. பார்க்காமலேயே காதலிக்கலாமுன்னு சொல்லிக் கொடுத்தார் அகத்தியன். காதல் கோட்டையில் அஜீத்தும், தேவயானியும் பார்க்காமலேயே காதலிச்சு கடைசி நேரத்துல ரெயில் நிலையத்துல சேர்ந்ததை லிட்டர் கணக்கில் கண்ணீர் வடிச்சு ரசிச்சு ரசிச்சு பார்த்தோம்.

அலைபாயுதே காதல்

காதலில் இது தனி வகை. அதாவது வீட்டுக்கு தெரியாம தாலிகட்டி குடும்பம் நடத்துற காதல். அடிக்கடி பத்திரிகையில் அலைபாயுதே பாணியில் என்று பல காதல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். இந்த காதலை கண்டுபிடித்து சொன்னவர் மணிரத்னம்.

தற்கொலை காதல்

காதல் கைகூடி வரவில்லையா ஆத்துலேயோ, குளத்துலேயோ விழுந்து செத்துடணும். ஏக் துஜே கேலியேவும், புன்னகை மன்னனும் கற்றுக் கொடுத்தது. கொஞ்ச காலம் சினிமா காதலர்கள் இப்படித்தான் செய்தார்கள். 80 களில் ஊட்டி சூசைட் பாயிண்டில் இருந்து தொப்பு தொப்புன்னு விழுந்து காதலர்கள் செத்துக்கிட்டிருந்தாங்க. இப்பதான் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.

அழுக்கு காதல்

இப்போ உள்ள சினிமா கண்டுபிடிச்சது இந்த அழுக்கு காதலை. காண்வெண்ட்டில் படித்து ஐ.டியில வேலை பார்த்தாலும் கூடவே ஸ்மார்ட்டா இருக்கிற பையனை ஏறிட்டும் பார்க்காமல் கட்டச்சுவர்ல உட்கார்ந்துகிட்டு நண்பர்களோட அரட்டை அடிச்சிக்கிட்டு பீடி குடிக்கிறவனைத்தான் காதலிப்பாங்க. அதிலும் லுங்கியும், கட்டம்போட்ட சட்டையும் போட்ட ஆளைப் பார்த்தாலே காதல் பொங்கி வழிஞ்சிடும்-.

சைக்கோ காதல்

பொண்ணு தெளிவாத்தான் இருக்கும். ஆனா தெளிவில்லாம சைக்கோவா திரியுறவனை காதலிக்கும், இல்லேன்னா பல கொலைகளை பண்ணினவத்தான் பிடிக்கும். அவனை கல்யாணம் பண்ணிகிட்டு இவள் திருத்திவிடுவாளாம். அவனும் காதல் வந்த பிறகு எல்லாத்தை விட்டுவிட்டு நல்லவனாகி விடுவானாம். கோர்ட்டும் ஹீரோ செஞ்சது எல்லாமே மக்கள் நலனுக்காகத்தான்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடும்.

இப்படி நம்ம தமிழ் சினிமா காட்டிய காதல் எக்கச்சக்கமா இருக்கு. இதுல நீங்க ரசித்து பார்த்த காதலையும், வெறுத்து ஓடின காதலையும் கமெண்டுல போடுங்க. காதலர் தினத்தை கொண்டாடுங்க பாஸ்...

மறைக்க முடியாத கருப்புச் சரித்திரம்..!



 கலை நுட்பத்தினால், செங்கோலினால், ஈகையினால் இயற்றப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் காட்டிலும், கண்ணீரால், மனித அத்துமீறல்களால், செந்நீரால் தீட்டப்பட்ட வரலாற்றுக் கதைகளும், காப்பியங்களும் அதிகமாய் திகழ்கின்றன.

NRI எனும் வார்த்தையை 'நான் ரிடர்னிங் இண்டியன்ஸ்' என்றே பலர் பெயர் சூட்டிவிட்டனர். புண்ணிய பூமியாக, சந்தர்ப்பங்களின் சொர்க்க பூமியாக அமெரிக்காவை எண்ணி அங்கேயே டேரா போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக் கொண்டே தான் செல்கிறது.

அமெரிக்கா உண்மையில் கடந்த வந்த பாதை என்ன? கொலம்பஸ்ஸினால் கண்டறியப்பட்ட இத்தேசத்தில் புதைந்து கிடக்கும் வரலாற்று இழிபாடுகளை மிகைபடுத்தப்படாத மனித உணர்ச்சிகளால் சித்தரித்துள்ளது '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' (12 Years A Slave).

கதாநாயகன் சாலமன் வயலின் வாசிப்பதில் வித்தகர். நியூயார்க்கில் மனைவி, மக்களுடன் மகிழ்ச்சியாக வாழும் நாயகனை இரண்டு நபர்கள் அணுகுகிறார்கள். தாங்கள் சர்க்கஸ் கலைஞர்கள் என்றும், 'இப்போது வாஷிங்டனில் நடக்கவிருக்கும் எக்ஸிபிஷனில் நீங்கள் எங்களுக்காக வாசிக்க வேண்டும். வாசிக்கும் பட்சத்தில் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு தருவோம்' எனக் கூறுகின்றனர்.

நாயகன் இவ்விருவருடன் வாஷிங்டனிற்கு செல்கிறார். அங்கு ஒரு பாரில் தன்னை மறந்து குடிக்கும் நாயகன் மயக்கமுற, அழைத்து வந்த இருவரும் இவரை படுக்கையில் உறங்க வைக்கின்றனர்.

கண் கூச சாலமன் மெல்ல இமைகளை திறந்து, கால்களை இழுத்துப் பார்கிறார். ஏதோ தடுக்க, எழுந்து பார்க்கையில் அவர் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. சாலமனை அழைத்து வந்த இருவர் காசுக்காக சாலமனை அடிமை என்று விற்றுவிட்டதை பிறகு உணர்கிறார். அரசாங்கத்தினால் அடிமை அல்ல என அங்கீகரிக்கப்பட்ட நாயகன் அவ்விரு மனித நரிகளின் பணத்தாசைக்கு பலிகடாவாகிறார்.

அன்று முதல் ஒரு தவறும் செய்யாது, தன் நிறத்தின் காரணமாக பன்னிரெண்டு வருடம் அடிமைப்படுத்தப்பட்ட சாலமன் எனும் மனிதரை பற்றிய கதை தான் இப்படம். 1853 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சாலமனால் இயற்றப்பட்ட '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

சாலமனை பற்றிய கதை என்று மட்டும் இக்கதையை விவரிக்க இயலாது. இவர் சந்தித்த நல்லவர்-கெட்டவர், மேம்பட்ட மனிதர்கள், இழி பிறப்புகள், அப்பிராணிகள், சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் இவர்கள் யாவரும் இக்கதையின் அங்கத்தினர்கள்.

எதிர்ப்பாரா திருப்பங்களுக்கு இடம் அளிக்காத போதும் இப்படம் நம்மை ஈர்க்கத் தவறுவதில்லை. காரணம் இது ஒரு வரலாற்று பெட்டகம். இதில் வரும் நிகழ்வுகள் அமெரிக்காவுக்கு மட்டுமோ அல்லது அங்கு வாழ்ந்த மக்களுக்கு மட்டுமோ உரித்தான ஒன்றல்ல. பல தேசங்களில் இழைக்கப்பட்ட தீண்டாமை போன்ற அநீதியை, மனித இழிபாடுகளை இதில் வரும் கதைமாந்தர்களோடு நம்மால் ஒப்பிட்டு கூற முடியும்.

தெய்வத்தின் பெயரால், சர்வாதிகாரத்தின் பெயரால், சாதி சமயத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று கூட பல மக்களுக்கு நிந்தனைகள் நிகழ்த்தப்பட்டு தான் வருகிறது. நிறத்தின் பெயரால் விதிக்கப்பட்ட அநீதியை தான் இப்படம் விவரிக்கிறது.

படத்தில் சாலமனின் தோழி சக அடிமை ஒருத்தி அழுது கொண்டே இருக்கிறார். ' நீ இப்போ அமைதியா இரு. இல்லைன்னா உன்னால உயிரோடு இருக்க முடியாது' – சாலமன். அவளோ 'நான் இனி உயிருடன் இருந்து என்ன பயன். என் பசங்களை என் கூட வெச்சு காப்பாத்த எதை எல்லாம் விற்கக் கூடாதோ அத்தனையும் செய்து விட்டேன்.

செய்யாத இழி செயல் இல்லை. கடைசில இப்போ என் குழந்தைகளும் என் கிட்ட இல்லை. இதுக்கு மேல எதுக்கு வாழணும்' என்று புலம்பிக் கதறுகிறாள். இக்காட்சி நடக்கும் மறுபுறத்தில் இவர்களின் முதலாளி இயேசுவிற்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை பற்றிய கதையைச் சொல்லி 'இதை எப்படி பொறுத்துக் கொண்டாரோ ஆண்டவன்' என்று வியக்கிறார். கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக வருந்தும் மனிதம் கண்முன் இருக்கும் மனிதருக்கென வருகையில் மழுங்கடிக்கப்படுவதை உணர்த்தி அக்காட்சி சடார் சடார் என்று சாட்டையடி அடிக்கிறது.

தொழிலாளிகளை தன் பொழுது போக்கிற்காக ஆடச் சொல்கிறார் முதலாளி. அப்போது மனதில் விரத்தி, பயம், பிரிவுகளை சுமக்கும் அடிமை மக்கள் ஏனோ தானோ என்று கைகளை அசைக்கின்றனர். முதலாளியின் மனைவி அங்கே ஆடும் ஒரு பெண்ணின் நளினமற்ற ஆட்டத்தை கண்டு சினமுற்று அவள் மீது விஸ்கி பாட்டிலை வீசுகிறாள். நெற்றி கிழிகிறது. அதை பார்த்து நின்ற மக்களை 'நீங்கள் ஆடுங்கள்.. என் சந்தோஷத்தை கெடுக்காதீர்கள்' என்று முதலாளி கூறுகிறார்.

இதைப் போன்ற பல காட்சிகள் அமெரிக்காவில் மனிதத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட பல வன்கொடுமைகளை சித்தரிக்கிறது. கலையம்சத்துடன் செதுக்கப்பட்ட இப்படைப்பு கண்டிப்பாக உங்களை சோகத்தின் குழியில் தள்ளிவிடப் பார்க்கவில்லை, மாறாக மனிதத்தின் தேவையை உரத்து உரைக்கின்றது.

சவுக்கினால் அடிக்கப்பட்ட வரலாற்றை அன்பினால், கண்ணீரால் துடைக்கப் பார்க்கும் இப்படம், ஆஸ்கர் விருதுக்கு ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக ஆஸ்கர் விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.