நடிகர் : நகுல்
நடிகை : மிருதுலா பாஸ்கர்
இயக்குனர் : அறிவழகன்
இசை : தமன்
ஓளிப்பதிவு : பாஸ்கர்
திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம்.
இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார். தன் நண்பன் மரணத்தை தாங்க முடியாத நகுல், அந்த கல்லூரியில் இருந்தே விலகுகிறார். மேலும், தன் நண்பன் சாவுக்கு காரணமான கூடைப் பந்தை இனிமேல் விளையாடக்கூடாது என்றும் முடிவெடுக்கிறார்.
அதன்படி, சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்கும் மிருதுளா, சந்துரு ஆகியோர் நகுலுடன் நட்பு கொள்கிறார்கள். நாளடைவில் நகுலின் நடவடிக்கைகள் நாயகி மிருதுளாவிற்கு பிடித்துப்போக அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். நகுலும் அவளை காதலிக்கிறார்.
சந்துரு அந்த கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இருந்தும் தன்னுடைய அணியால் கல்லூரிக்கு இதுவரை ஒரு கோப்பைகூட பெற்றுத்தர முடியாத ஆதங்கத்தில் இருந்து வருகிறார்.
அதே கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் கல்லூரியின் பெயரை நிலைநிறுத்திய தலைக்கணத்தில் இவர்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனர். மேலும், கூடைப்பந்து விளையாட்டை தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.
இதனால் வெகுண்டெழும் நகுல், சந்துருவுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில், கூடைபந்து விளையாட்டில் நகுல் தன்னுடைய முழு திறமையைப் பயன்படுத்தி கல்லூரிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இப்படத்தின் நாயகன் நகுல், ஒரு கூடைப்பந்து வீரருக்குண்டான எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாறுபட்ட நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாடும்போது ஒரு அனுபவ வீரரைப் போலவே விளையாடியிருக்கிறார். கதை முழுவதும் இவரை மையப்படுத்தியே நகர்வதால், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகி மிருதுளாவுக்கு நாயகனை காதலிப்பது மட்டுமே வேலை என்பதால், இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே. இருந்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். திருச்சியில் நண்பராக வரும் கிருஷ்ணா, அங்கு பயிற்சியாளராக வரும் நடிகர் ஆதி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். சென்னையில் நண்பராக வரும் சந்துருவும், நடிப்பில் நகுலுக்கு போட்டி போட்டிருக்கிறார்.
கல்லூரி முதல்வராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், பயிற்சியாளராக வரும் அதுல் குல்கர்னி, கதாநாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் மிளிர்கின்றனர்.
தமிழில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கிறன. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் இதுவரை ஒரு படம்கூட வந்ததில்லை. அதை இயக்குனர் அறிவழகன் சரியாக புரிந்துகொண்டு, அழகாக படமாக்கியதற்காக பாராட்டலாம். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.
கே.எஸ்.பிரபாகரன் ஒளிப்பதிவில் கூடைப்பந்து விளையாட்டை அழகாக படமாக்கியிருக்கிறார். இவருடைய கேமரா கண்கள் படத்தின் காட்சிகள் நம் கண்களை உறுத்தாமல் இருக்க ரொம்பவும் விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான்.
மொத்தத்தில் ‘வல்லினம்’ மெல்லினம்.
0 comments:
Post a Comment