Sunday, 9 March 2014

நாங்கெல்லாம் அப்பவே அப்படி - சினிமா விமர்சனம்




மதுரையில் ஜமீன்தாரான பிரபுவின் தங்கை சீதா 20 வருடத்துக்கு முன், முஸ்லீமான சுமனை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் பிரபு, சுமனின் ஒரு காலை வெட்டி விடுகிறார். இதனால், பிரபுவை பழிவாங்க நினைக்கும் சுமன் தன் மனைவிக்கு சேரவேண்டிய சொத்தை தரும்படி பிரபு மீது வழக்கு தொடருகிறார்.

20 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சுமன் வெற்றி பெறுகிறார். அதன்படி சீதாவுக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரபு அவரிடம் ஒப்படைக்கிறார். எப்படியாவது தன் அண்ணன் குடும்பமும், தன் குடும்பமும் ஒன்று சேர்ந்துவிடும் என்று எண்ணி வாழ்ந்து வந்த சீதாவுக்கு, இந்த வழக்கின் வெற்றி வேதனையைத் தருகிறது.

சீதா தன்னுடைய மகனான விஷ்ணு மஞ்சுவிடம் இதுபற்றி சொல்லி வருத்தப்படுகிறார். தனது ஆசையே அண்ணன் குடும்பத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்றும் சொல்கிறார். இதனால் நாயகன் விஷ்ணு மஞ்சு, தன்னுடைய அம்மாவையும், மாமாவையும் சேர்த்து வைக்க களம் இறங்குகிறார்.

வழக்கு தோல்வியடைந்த வருத்தத்தில் இருக்கும் பிரபுவுக்கு வீட்டில் யாகம் வளர்த்தால் நன்மை கூடும் என்று அறிவுரை கூறுகின்றனர். அதற்கு ஏற்பாடு செய்யும்படி பிரபு தன்னுடைய மேனேஜரான பிரம்மானந்தத்திடம் கட்டளையிடுகிறார். இவரோ, முஸ்லீமான நாயகன் விஷ்ணு மஞ்சுவை தவறுதலாக புரோகிதர் என்று வீட்டுக்கு வரவழைக்கிறார். தனது மாமா வீட்டுக்குள் நுழைய இது ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணி, விஷ்ணு, பிரபுவின் வீட்டுக்குள் நுழைகிறார்.

அங்கு பிரபுவின் மகளான ஹன்சிகா, நாயகனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இருந்தும் தன் காதலை நாயகனிடம் சொல்லாமல் இருந்து வருகிறார். ஹன்சிகாவுக்கு நாயகன் தனது முறைமாமன் என்று தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார்.

ஒருகட்டத்தில் புரோகிதரான விஷ்ணு மஞ்சுவை காதலிப்பதாகவும் அவனை எனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் எனவும் தனது தந்தை பிரபுவிடம் ஹன்சிகா கூறுகிறாள்.

இதைக்கேட்ட பிரபு ஹன்சிகா-விஷ்ணு மஞ்சு காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாரா? நாயகன் தனது தங்கை மகன் என்பதை அறிந்தாரா? தன் தாயின் ஆசையை நாயகன் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் விஷ்ணு மஞ்சு காதல், சண்டை, நகைச்சுவை, நடனம் என எல்லாவற்றையும் நிறைவாக செய்திருக்கிறார். ஹன்சிகா மொத்வானி தனது துறுதுறு நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார்.

நாயகனை வலிய வலிய காதல் செய்யும் காட்சிகள் சிறப்பு. பிரபு, சுமன், சீதா, பிரம்மானந்தம் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

கிராமத்து பின்னணியில் ஒரு அழகான குடும்பக் கதையை படமாக்கிய இயக்குனர் நாகேஸ்வர ரெட்டியை பாராட்டலாம். திரைக்கதையில் பளிச்சிடுகிறார். படத்தை ஆரம்பம் முதல் கடைசிவரை தொய்வு இல்லாமல் கொண்டு போவது சிறப்பு.

தெலுங்கில் இருந்து டப்பிங் ஆகிய படம் என்பதால், சில கதாபாத்திரங்களின் வசனங்கள் உச்சரிப்பு புரியவில்லை. குறிப்பாக, பிரபுவுக்கு டப்பிங் பேசியவர், பிரபுவின் குரலை சீர்குலைத்திருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எஸ்.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் கூடுதல் பலம். குறிப்பாக, பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நாங்கெல்லாம் அப்பவே அப்படி’  குடும்ப சித்திரம்.

தோல்வி பயத்தில் தேடுதல் வேட்டையில் சூர்யா...!




எவ்வளவுதான் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுவது நல்ல நல்ல கதைகள்தான். இதில் உறுதியாகவே இருக்கிறார் சூர்யா.

தரமான கதைகளை தேடி வருகிறாராம் சூர்யா.

சிங்கம்-2 படத்திற்கு பிறகு எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பது என்பது சூர்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது.

இதில் கெளதம்மேனன் படத்தில் முதலில் நடிக்க தயாரானபோது, அவர் சொன்ன கதையில் சூர்யாவுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஏற்கனவே மாற்றான் தோல்வியில் இருந்தவர், மீண்டும் அந்த தோல்வி தன்னை தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக, அடுத்து லிங்குசாமி சொன்ன கதையில் நடிக்க முடிவெடுத்தார்.

தற்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.

இதற்கிடையே அடுத்தடுத்து அவரை சந்தித்து சில பிரபல இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்களாம்.

ஆனால், அப்படி அவர் கேட்ட கதைகளில் ஒன்றுகூட தேறவில்லையாம். அதனால், எவ்வளவு வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதற்கேற்ப முழுசாக என்னை மாற்றிக்கொண்டு என் உழைப்பை நூறு சதகிவிதம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

ஆனால், நல்ல தரமான கதைகள் கிடைக்கவில்லையே என்று கூறிவரும் சூர்யா, மேலும் பல இயக்குனர்களிடம் கதை கேட்கும் படலத்தை முடுக்கி விட்டுள்ளார்.

ரெட் லைட் (சிவப்பு விளக்கு) நல்லதாம்..!




இரவுப் பணிகளின்போது அலுவலகத்தில் சிவப்பு விளக்கு எரிவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வெள்ளை எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீல வெளிச்சம் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்றும், அதற்கு அடுத்தபடியாக தீங்கு விளைவிக்கக் கூடியது வெள்ளை நிற வெளிச்சம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 அதே நேரம், சிவப்பு விளக்கு வெளிச்சத்திலிருந்த வெள்ளை எலிகளுக்கு, மிகக் குறைந்த அளவே மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் தோன்றின.

அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ராண்டி நெல்சன் கூறும்போது, “”இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கு மனச் சோர்வு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வெள்ளை நிற வெளிச்சத்தைப் போல் சிவப்பு நிற வெளிச்சம் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில்லை என்ற எங்கள் ஆய்வு முடிவுகள் அவர்களுக்கு நல்ல தீர்வைத் தரும்” என்று தெரிவித்தார்.

காதலை உணர்ந்தேன் - திரைவிமர்சனம்..!




வறுமையில் இருக்கும் நாயகிக்கு படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடிகார அப்பாவால் தனக்கு எதுவும் வாங்கித்தர முடியவில்லை என நினைத்து வருந்துகிறாள்.

அப்போது, அவளது தோழி நாயகிக்கு பெரிய பணக்கார பையனாக பார்த்து காதலித்தால், அவன் உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கித் தருவான் என்று அறிவுரை கூறுகிறாள்.

முதலில் இதற்கு மறுக்கும் நாயகியை, தான் காதலிப்பதால் தனக்கு என்னென்ன நன்மை உண்டாகிறது என்பதை எடுத்துக்கூறி அவளை காதல் செய்ய வைக்க ஒப்புக்க வைக்கிறாள் தோழி.

அதன்படி, அதே ஊரில் இருக்கும் நாயகனை காதலிக்குமாறும் தோழி யோசனை கூறுகிறாள். நாயகியும் அவனிடம் வலியபோய் தன் காதலை சொல்கிறாள். ஆனால், அவனோ இவளை வெறுத்து ஒதுக்குகிறான். இறுதியில், அவனை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறாள்.

காதலிக்க ஆரம்பித்தால் தனக்கு தேவையானதை அவனிடமிருந்து எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நாயகியின் ஆசை நிறைவேறாமல் போகிறது. தான் கேட்ட எதையும் தனது காதலனால் வாங்கித்தர முடிவதில்லை.

இந்நிலையில், ஒருநாள் நாயகன் அவனது தாத்தாவை பார்க்க 3 நாள் பயணமாக வெளியூர் செல்கிறான். அந்த நேரத்தில் நாயகியின் தோழி வீட்டுக்கு வரும் அவளது முறைமாமன் நாயகியை பார்க்கிறான். பார்த்ததும் அவள்மீது காதலில் விழுகிறான். அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். அவளும் எதையும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாள். ஒருநாள் தோழியின் முறைமாமன் நாயகியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளிடம் கூறுகிறான்.

இறுதியில் நாயகி தனக்கு காதல்தான் முக்கியம் என்பதை உணர்ந்து தோழியின் முறைமாமனை உதறித் தள்ளினாளா? அல்லது தான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தருபவன்தான் முக்கியம் என்று தோழியின் முறைமாமனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே மீதிக்கதை.

கொஞ்சம் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிவிடலாம் என்பதற்கு இதுமாதிரியான படங்கள் ஒரு சிறு உதாரணம். சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் தயாரிப்பு சங்கங்கள் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வந்தால் கண்டிப்பாக இப்போது தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்கூட இனிமேல் தியேட்டருக்கு வர தயங்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இப்படத்தின் லொக்கேஷன்களுக்கு இயக்குனர் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. வீட்டு மொட்டை மாடி, முற்றம், ஒற்றையடி பாதை என மாறி மாறி மூன்று லொக்கேஷன்களிலேயே படம் முழுவதையும் எடுத்திருக்கிறார்.

அதேபோல், நாயகன், நாயகியைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் ஒரே உடையிலேயே வந்து போகிறார்கள். காதலிக்காக நாயகன் திருடும் காட்சியில், அவர் திருடவேண்டும் என்பதற்காகவே அனைவரும் பணத்தை அவருக்கு முன்னால் வைத்துவிட்டுப் போவதுபோல் காட்சிப்படுத்திய விதம் கொடுமையிலும் கொடுமை.

நாயகன், நாயகி முகங்களை பார்த்து இவர்களுக்கு எதற்கு டூயட் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. பாடல் வைத்தால் இசைமைப்பாளருக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘சித்தாட கட்டிக்கிட்டு’ ‘வெண்ணிலா ஓ வெண்ணிலா’ போன்ற அழகான பழைய பாடல்களுக்கு இந்த கேவலமான மூஞ்சிகளை ஆடவிட்டு அந்த பாடல்களை கெடுத்ததோடு, நமக்கும் வெறுப்பை வரவழைத்திருக்கிறார்கள். அதற்கு பாடல்களே வைக்காமல்கூட இருந்திருக்கலாம்.

கதாபாத்திரங்கள் தேர்வு தொடங்கி, ஒவ்வொரு காட்சி எடுத்தவரைக்கும் படம் முழுக்க சொதப்பல்தான். கிரேன் மனோகர் 4 பேருடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கோபத்தை வரவழைத்திருக்கிறார். தஷியின் பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை.

வீரன் முத்துராக்கு - திரை விமர்சனம்..!




நரேனும், சண்முக சுந்தரமும் பக்கத்து பக்கத்து கிராமத்தின் தலைவர்கள். 30 வருஷத்துக்கு முன்னால் நடந்த சண்டையில் சண்முக சுந்தரத்தின் ஒரு காலை நரேன் உடைத்துவிடுகிறார். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் பகை உண்டாகிறது.

இவர்களது மகன்கள் வளர்ந்து பெரியவர்களானதும், இவர்களுக்குள் நடக்கும் சிலம்பு சண்டையில் நரேனின் மகனான நாயகன் கதிர் வெற்றி பெறுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த சண்முக சுந்தரம் நரேனை பழிதீர்க்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

நரேனின் ஊரில் ஏதாவது கலவரத்தை தூண்டி நரேனை பழிதீர்க்க பார்க்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. ஒருநாள் நரேன் இவர்கள் ஊர் வழியாக செல்லும் பேருந்தை வழிமறிக்கும் நாயகன், அந்த பேருந்தில் பயணம் செய்யும் நாயகி லியா ஸ்ரீயை பார்த்ததும் காதல்வயப்பட்டு விடுகிறார். நாளடைவில் நாயகியும் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார். லியாஸ்ரீ சண்முக சுந்தரத்தின் தங்கையின் மகள்.

இந்நிலையில், நரேன் கொலை செய்யப்படுகிறார். மாடு முட்டிதான் அவர் இறந்தார் என போலீஸ் அந்த கொலையை மூடி மறைக்கிறது. தனது தந்தை இறந்த சோகத்தில் ஊரில் வாழப் பிடிக்காத நாயகன் காட்டுக்குள் சென்று வாழ்ந்து வருகிறார்.

நாயகிக்கும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர். இதுபிடிக்காத நாயகி, நாயகனைத் தேடி காட்டுக்குள் செல்கிறாள். இதை அறிந்த சண்முகசுந்தரம் அவளை பின்தொடர்ந்து சென்று நாயகியை கொன்று விடுகிறார்.

சித்தப்பா நமோ நாராயணனும், சண்முக சுந்தரமும் சேர்ந்துதான் தனது தந்தையை கொன்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. தன் தந்தை மற்றும் காதலி சாவுக்கு காரணமானவர்களை நாயகன் பழிதீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கதிர் சண்டைக் காட்சிகளிலும், தந்தையையும், காதலியையும் பறிகொடுத்து சோகத்தை காட்டும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். எதார்த்தமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகி லியாஸ்ரீக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும், குறைவான காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார்.

நரேனும், சண்முக சுந்தரமும் ஊர் தலைவர்களாக பளிச்சிடுகிறார்கள். நரேன் நடிப்பில் சிகரம் தொடுகிறார். சண்முக சுந்தரம் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நரேனின் தம்பியாக வரும் நமோ நாராயணனும் நடிப்பில் மிளிர்கிறார்.

இரண்டு தலைமுறை கதைகளை படத்தில் காட்டியிருக்கும் இயக்குனர், வன்முறையை ரொம்பவும் கொடுமையாக காட்டாமல் திரைக்கதையில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றைய தலைமுறைகளை இந்த படம் திருப்திபடுத்துமா? என்பது சந்தேகமே.

கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஜி.எஸ்.பாஸ்கர் ஒளிப்பதிவில் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அருமை.

’அப்பாவே இப்படி பண்ணலாமா..?’ ஒரு நடிகையின் சோகக்கதை..!




’லவ் அட்டாக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிஷா. முதல் படத்திலேயே ஸ்ரீநிஷாவின் முழுத் திறமையும் வெளிப்பட்டதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.


நிறைய படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீநிஷா திடீரென மே மாதம் 20-ஆம் தேதி காணாமல் போய்விட்டார்.


கார் ஓட்டுனரான ஸ்ரீநிஷாவின் சித்தப்பா பதறிப்போய் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க போலிஸும் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீநிஷாவை ஒரு மாதமாக தேடிவந்தது.


படப்பிடிப்புத் தளத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு கிளம்பிய பிறகு காணாமல் போன ஸ்ரீநிஷா, ஒரு மாதத்திற்குப் பின் சில நாட்களுக்கு முன்பு ஒரு தெலுங்கு டி.வி சேனலில் தோன்றி திடுக்கிடும் பேட்டியளித்திருக்கிறார்.


பேட்டியில் வாடிய முகத்துடன் பேசிய ஸ்ரீநிஷா “ நான் தலைமறைவாக இருந்ததற்குக் காரணம் என் சித்தப்பா தான். பொருளாதார நெருக்கடியால் நானும், என் அம்மாவும் அவரைச் சார்ந்து இருக்க நேர்ந்தது.


என் அம்மா வீட்டில் இல்லாத சமயங்களில் என்னுடன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தார். வெளியே சொன்னால் எங்கள் இருவரையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அவருக்கு பயந்து தான் நான் தலைமறைவாக இருந்தேன்” என்று கூறியிருக்கிறாராம்.


எனவே போலிஸ் ஸ்ரீநிஷாவின் சித்தப்பா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் நடிகைகளுக்கு பிரச்சனை சித்தி, சித்தப்பா மூலம் வருவது தான் திரையுலகின் லேட்டஸ்ட் டிரெண்ட்.

எதிர்வீச்சு - திரைவிமர்சனம்..!




மலேசியாவில் பிரபலமாக இருக்கும் புட்சால் எனப்படும் இன்டோர் புட்பால் விளையாட்டை பற்றிய படம். மலேசியாவில் நடக்கும் இந்த விளையாட்டில் பிளாக் ஹார்ஸ் சாதாரண அணியாக இருந்து முன்னேறி வருகிறது.


அந்த அணியின் முக்கிய வீரர் ஹீரோ இர்பான். இந்த அணி ஸ்பான்ஸர்ஸ் கிடைக்காமல் தள்ளாடுகிறது. சின்னி ஜெயந்த், சிங்க முத்து அந்த அணிக்காக ஸ்பான்ஸர் பிடிக்க அலைகிறார்கள். அங்கு நடக்கும் போட்டி ஒன்றில் மலேசியாவின் நம்பர் ஒன் அணியோடு இவர்கள் மோதுகிறார்கள்.


அந்த அணியை நடத்தும் மலேசியாவின் பெரிய பணக்காரர் இறுதிப் போட்டிக்கு முன் இர்பானை கடத்தி ப்ளாக் ஹோர்ஸ் அணியை பலவீனமாக்குகிறார். இறுதிப் போட்டியில் பிளாக் ஹோர்ஸ் அணி வென்று மலேசியாவின் சாம்பியனாக ஆனதா? என்பதே முடிவு.

ஹீரோ இர்பான் துடிப்பாக இருக்கிறார். விளையாடும் காட்சிகளில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரைப் போல் உற்சாகமாக இருக்கிறார். மற்றபடி பலவீனமான காட்சிகளில் எல்லோரும் ஏதோ நேரத்தை கடத்த வந்து போவதுபோல் இருக்கிறார்கள்.


நாயகி சாய்னா அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதிலும் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், அதுவரைக்கும் தியேட்டரில் யாரும் இருப்பார்களா? என்பது சந்தேகமே.


சின்னி ஜெயந்த், வையாபுரி, சிங்கமுத்து என காமெடி பட்டாளம் இருந்தும் சிரிப்பு வரவில்லை. அவர்களே விழுந்து விழுந்து சிரித்துக் கொள்கிறார்கள். நளினியும் அவ்வப்போது வந்து போகிற மாதிரி கதாபாத்திரம்தான். இவரை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம்.


மிக மோசமான திரைக்கதை, பலவீனமான காட்சிகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மோசமான இயக்கத்தில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். பிர்லா போஸ் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் மலேசியாவையும், புட்சால் விளையாட்டையும் காட்டியிருக்கிறார்கள். விளையாட்டு காட்சிகளில் மட்டும் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது.

அஜித் படத்திற்கு இசையமைக்கிறாரா ஹாரிஸ் ஜெயராஜ்...!




தமிழ் சினிமாவின் அட்டகாசமான மெலடி பாடல்களைக் கொடுத்ததன் மூலம் கோலிவுட்டின் மிக முக்கியமான இசையமைப்பாளராகத் திகழ்ந்துவரும் ஹாரிஸ் ஜெயராஜ் தல அஜித் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கவுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புக்கள்
வருகிற ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு செப்டம்பரில் படத்தினை வெளியிட படக்குழு உத்தேசித்துவருகிறது.


கௌதம் மேனன் படத்திற்குப் பிறகு அஜித் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படம் நீங்கலாக அனைத்துப் படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தொடர்ந்து வெற்றிகளையும் குவித்துவருகிறது. இதனால் அஜித் நடிக்கும் படத்திற்கும் அவரே
இசையமைப்பாரென்ற செய்தி ஓரளவு உறுதியாகிவருகிறது.


விரைவில் இச்செய்தியைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும்.


இயக்குனர் கே.வி.ஆனந்த் தற்பொழுது தனுஷ், அமிரா டாஸ்டர், கார்த்திக் மற்றும் பலர் நடித்துவரும் அனேகன் படத்தினை இயக்கிவருகிறார்.

உத்தமவில்லனுக்கும் எதிராக வில்லத்தனம் செய்வதா..?




‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகத்தை முடித்த கையோடு கமல், தன்னுடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்.3-ந் தேதி பெங்களூரில் தொடங்கியது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டர் மற்றும் டீசர்களில் வெளியான கமலின் தோற்றம், பிரெஞ்சு புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து திருடப்பட்டதாக இணையதளங்களில் பரவத் தொடங்கின.

உண்மையில், இந்த தோற்றம் கேரளாவில் தெய்யம் என்ற ஆட்டத்தில் ஈடுபடும் கலைஞனுக்குண்டானது.

கேரளாவின் வடக்கே மலபாரில், ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றியபின் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடப்படும் ஒரு நடன வகைதான் தெய்யம்.

இந்த ஆட்டக்கலையை தெய்யாட்டம் எனவும், வேடத்தை தெய்யக்கோலம் என்றும் கூறுகிறார்கள்.

இந்த ஆட்டத்தின் சிறப்பை தமிழுக்கு அறிமுகப்படுத்தவே உலக நாயகன் இந்த படத்தில் தெய்யக்கோலத்தில் தோன்றுகிறாராம்.

அதைவிடுத்து, அவர்மீது திருட்டு பட்டம் கூறுவது சரியல்ல.

மேலும், படத்திற்கு படம் சினிமாவில் ஏதாவது புதுமுயற்சியை கையாள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் கமலின் இந்த புதுமுயற்சியை களங்கடிக்க நினைப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்