Saturday, 8 February 2014

அதிக நேரம் உட்காராதீர்கள்…! - ஓர் அதிர்ச்சியான தகவல்கள்..!



நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள். குறைந்தது 7 மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்கள். 2 மணி நேரம் டி.வி. முன்னால் உட்கார்ந்திருக்கிறீர்கள். 2 மணி நேரம் கம்ப்யூட்டர் முன்பு இருக்கிறீர்கள். வேறு எங்கெங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள். நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து. 45 நிமிடத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் முதுகுவலி, டிஸ்க் பிரச்சினைகளை தோன்றும்.

மனித சமூகத்தை ஆணி அடித்தது போல் உட்கார வைத்து அவர்களை நோயாளிகளாக மாற்றிய பெருமை கம்ப்யூட்டர் புரட்சிக்கு உண்டு. கம்ப்யூட்டர்களை அலுவலகங்களில் உபயோகிக்கத் தொடங்கியதும் மனிதனின் உடல் இயக்கம் குறைந்தது. வேலைகளின் இடையே எழுந்து நிற்பதையும், நடப்பதையும்கூட இது தடுத்து நிறுத்திவிட்டது. லேப்டாப் மற்றும் செல்போன் போன்றவை மனித உடல் இயக்கத்தை முடக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக உட்காரும்போது உடலில் எந்த பாகம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் தெரியுமா? முதுகெலும்புதான் அழுத்தத்திற்குள்ளாகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அதன் அடிப்பகுதிதான் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக 45 நிமிடங்களுக்கு அதிகமான நேரம் உட்கார்ந்திருந்தால், அடிப்பகுதியில் உள்ள லம்பார் டிஸ்க்கின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, கெட்டியாகும். டிஸ்க் நரம்பினை நெருக்கவும் செய்யும். அதனால்தான் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் பல்வேறு விதமான வலி நிறைந்த பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றார்கள்.

கழுத்து வலி, கை கால் மரத்துப்போகுதல், தோளில் தசைப் பிடித்தல் போன்ற பாதிப்புகள் உருவாகும். அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு கொலஸ்ட்ரால், டைப்- 2 வகை சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அமர்ந்தே வேலைபார்க்கும் போது கொலஸ்ட்ராலை சக்தியாக மாற்றும் என்சைம்களின் செயல்பாடு நின்றுபோகும்.

தசைகளின் இயக்கம் குறைந்துபோவதால் ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுழற்சியும் குறையும். எப்போதும் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களின் இடுப்பும், கால்களும் பலம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் திடீரென்று கீழே விழும் நிலை ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாகும். முறிவு ஏற்படும் வாய்ப்பும் அதிகம். உட்கார்ந்தே வேலைபார்ப்பவர்களில் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் அவர்களை பற்றிய ஆய்வுகளும் அதிகரித்து வருகின்றன.

லூசியானாவில் நடந்த ஆய்வு ஒன்றில் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு பத்து வருடங்கள் கடக்கும்போது, மற்றவர்களைவிட குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு இரட்டிப்பாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். மலத்துவாரத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் 44 சதவீதம் அதிகமாக இருக்கிறது. தொடர்ச்சியாக உட்கார்ந்தே வேலை பார்ப்பது புகைப்பிடிப்பதைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறது இன்னொரு ஆய்வு.

ஆஸ்திரேலியாவில் 12 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டெலிவிஷன் முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆயுளில் 22 நிமிடங்கள் குறைகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள். புகைப்பிடிக்கும்போது ஒவ்வொரு சிகரெட்டும் ஆயுளில் 11 நிமிடங்களை குறைக்கிறது. நியூசிலாந்தில் நடந்த ஆய்வில், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களின் கால்களின் ரத்தக்குழாய் உள்ளே ரத்தம் கெட்டியாவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

உட்கார்ந்தே வேலைபார்ப்பவர்களுக்கு அதிக உணவு தேவையில்லை. அவர்கள் அளவின்றி சாப்பிட்டால் அது கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். அது பல்வேறு நோய்களுக்கு காரணமாவதோடு, அகால மரணம் வரை கொண்டுபோய்விடும். 6 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்ப்பவர்களைப் பற்றி அமெரிக்காவில் ஆய்வு ஒன்று நடந்தது.

அதில் அவர்கள் பெண்ணாக இருந்தால் 3 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களைவிட இறப்பதற்கான சூழல் 94 சதவீதம் அதிகம் என்கிறார்கள். ஆண்களுக்கு இது 48 சதவீதமாக உள்ளது. அதாவது உட்கார்ந்தே வேலை பார்க்கும் பெண்களுக்கு ஆண்களைவிட அதிக பாதிப்பு என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

0 comments:

Post a Comment