Saturday, 8 February 2014

காமராஜரின் திட்டமும் திடமும்..!



அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.

அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.

அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.

ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.

மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.

"முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.

தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.

முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.

"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.

"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.

"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.

இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

0 comments:

Post a Comment