நம்முடைய அரசியல் அமைப்பு சாசனம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. அதில் குழந்தைகளும் அடக்கம். ஒரு குழந்தைக்கான அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மனநலம் மற்றும் உடல் நலத்திற்கான போதிய பாதுகாப்பு அனைத்தையும் கோர அவர்களுக்கு கண்டிப்பாக உரிமையுள்ளது.
நம் நாட்டில் குழந்தைகளுக்கான சட்டங்கள் என்பது தனி சட்டமாக இன்று வரை இயற்றப்படவில்லை. எனினும், நமது அரசியல் சாசனத்தின் ஷரத்து 15(3) பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான சிறப்புச் சட்டங்களை இயற்ற வழிவகை செய்துள்ளதால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு பொதுச் சட்டங்களில் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு சட்ட திருத்தங்களாகவும், குழந்தைகளுக்கான சிறப்பு சட்டங்களாகவும் அவ்வப்போது இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளன.
ஒரு சிசு அன்னையின் கருவறையில் ஜனிக்கும் நிமிடத்திலிருந்து சட்டப்படி 18 வயது பூர்த்தியாகும் வரை - அதாவது, மேஜராகும் வரை - குழந்தையாகவே சட்டம் பாவிக்கும். இன்றைய சமூகத்தில் ஆண் குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகளே பெரிதும் இன்னல்களை சந்திக்கிறார்கள். பெண் சிசு கருக்கலைப்பு, பெண் சிசு கொலை, குழந்தை திருமணம், ஆட்கடத்துதல், வயது வரம்பில்லாமல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துதல், பட்டாசு, கண்ணாடி வளையல், கார்பெட், வைரம் பட்டை தீட்டுதல் ஆகிய பல தொழிற்சாலைகளில் இன்றும் சட்டத்தை மதிக்காமல், அதன் உரிமையாளர்கள் கல்வி மறுக்கப்பட்ட அந்தப் பிஞ்சு கைகளை கொத்தடிமைகளாக்கி படுத்தும் பாடு பார்ப்போரின் நெஞ்சை பிளந்துவிடும். இது அனைத்து நாடுகளும் எதிர் கொள்ளும் ஒரு சவாலாகவே உள்ளது.
அதனால் உலக அளவில் குழந்தை பராமரிப்புக்கான Conventionல் இந்தியாவும் கையொப்ப மிட்டுள்ளது. சட்டத்தின் பார்வையில் நாம் குழந்தைகளை இரு வேறு கோணங்களில் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று, சராசரியாக சட்டத்தின் கீழ் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு. மற்றொன்று சந்தர்ப்ப வசத்தால் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்கும் குழந்தைகளின் நிலைப்பாடு.
The commissions for Protection of Child Rights Act,, 2005
தேசிய மற்றும் மாநில அளவிலான குழந்தைகளுக்கான ஆணையம் இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவரும் 6 உறுப்பினர்களும் 3 வருட காலத்துக்கு ஒருமுறை அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். குழந்தை உடல்நலம், பாதுகாப்பு, வளர்ச்சி, கல்வி போன்ற பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யவும், குழந்தைகளின் நலனை பெருக்கவும் இந்த ஆணையங்கள் உருவாகியுள்ளன. எனினும் நடைமுறையில் பல மாநிலங்களில் இந்த ஆணையங்கள் இன்னும் அமைக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
கருவிலிருக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கான சட்டங்கள்
1. The Preconception and PreNatal Diagnostic Techniques (Prohibition of Sex Selection) Act, 1994
2. Medical Termination of Pregnancy Act, 1971
3. The Maternity Benefit Act, 1961
இச்சட்டங்கள் அனைத்துமே கருவிலிருக்கும் சிசுவின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் இயற்றப்பட்டவையே. பெண் சிசுவை கருவிலேயே கலைக்கும் கொடுமையான ஒரு செயல், இன்றைய நாகரிக சமுதாயத்திலும் நடைபெறுவது மறுக்க முடியாத ஒரு உண்மை. ஒரு பெண் இன்று பல்வேறு துறைகளில் கால்பதித்து தன் திறமையை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், நம் சமுதாயத்தில் ஒரு ஆணுக்குக் கொடுக்கும் உரிமையையும் அந்தஸ்தையும் ஒரு பெண்ணுக்கு கொடுக்க பலர் முன்வருவதில்லை.
பெண் குழந்தையை பாரமாகவே நினைப்பதால் அதனை கருவிலேயே கலைக்கும் கொடுமையும் நிலவுகிறது. கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பிரச்னைகளைக் கண்டறிவதற்காக பயன்படுத்தும் மருத்துவ முறையினை குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க பயன்படுத்துவது The Preconception and PreNatal Diagnostic Techniques (Prohibition of Sex Selection) Act, 1994 சட்டத்தின் கீழ் சட்டவிரோதம். மீறிச் செயல்படுபவர்யாராக இருந்தாலும் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவராவார்.
ஒரு பெண்ணின் கருவை கலைப்பது என்பதை ஒரு சில தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் குற்றமாகவே கருதுகிறது சட்டம். இந்திய தண்டனை சட்டம் 1860ன் கீழ் பல பிரிவுகள் கருக்கலைப்பை தண்டனைக்குரிய குற்றமாக வகுத்துள்ளது. Medical Termination of Pregnancy Act, 1971 என்ற சிறப்புச் சட்டத்தின் கீழ் 12 வாரத்துக்கு உட்பட்ட கரு எனில் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த ஒரு மருத்துவரின் உதவியுடனும், 12 வாரத்திலிருந்து 20 வாரத்துக்கு உட்பட்ட கரு எனில் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த 2 மருத்துவர்களின் உதவியுடனும் கருக்கலைப்பு செய்யலாம்.
கருவுற்றிருக்கும் பெண்ணின் உடல்நலத்துக்கோ, மனநலத்துக்கோ பாதிப்பிருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பை சட்டம் அனுமதிக்கிறது. கருவிலிருக்கும் குழந்தை பிறந்தால் அதன் உடல்நலத்துக்கோ மனநலத்துக்கோ பெருமளவில் பாதகம் ஏற்படும் என்று தெரியும் பட்சத்தில் சட்டம் அந்த கருக்கலைப்பை அனுமதிக்கிறது.
உதாரணமாக பாலியல் வன்புணர்ச்சியினால் ஒரு பெண் கருவுற்றிருக்கும் பட்சத்தில், அந்தக் கருவின் வளர்ச்சி அந்தப் பெண்ணின் மனநலத்தை பாதிக்கும் எனில் அந்தக் கருக்கலைப்பு சட்டத்தால் அனுமதிக்கப்படும். ஒரு தம்பதி அளவான குடும்பத்தை விரும்பி, அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் குழந்தையே போதும் என்ற எண்ணத்தில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி, அதன் செயல்பாட்டில் குறை இருந்து ஒரு கரு உண்டாகுமெனில், அது அவர்களின் மனநலத்தை பாதிக்குமெனில், அந்த கருக்கலைப்பை சட்டம் அனுமதிக்கிறது.
கருவுற்றிருக்கும் பெண்ணின் அனுமதியுடன்தான் கருகலைக்கப்பட வேண்டும். கருவுற்றிருக்கும் பெண் 18 வயதுக்குட்பட்டவராயிருப்பின் காப்பாளரின் அனுமதியுடனே கரு கலைக்கப்பட வேண்டும். பணிக்குச் செல்லும் கருவுற்ற பெண்ணுக்கும் அவர் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பு என்ன என்பதனை குறிப்பிடும் சட்டமே The Maternity Benefit Act, 1961. இச் சட்டம் பற்றி ஏற்கனவே நம் தொடரில் விரிவாக பார்த்து விட்டோம்.
இந்திய தண்டனை சட்டம் 1860
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 7 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை செய்யும் எந்த ஒரு செயலும் குற்றமாக கருதப்படமாட்டாது. 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தை செய்யும் செயல் அக்குழந்தை புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லாத பட்சத்தில் குற்றமாக கருதப்படமாட்டாது.
18 வயதுக்குக் கீழ் இருக்கும் ஒரு நபர் செய்யும் குற்றத்தை வயது வந்த நபர்களுக்கு இணையாக பொதுச்சட்டத்தின் கீழ் விசாரிக்க சட்டம் அனுமதிப்பதில்லை. குழந்தை குற்றவாளிகளை The Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000ன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் முறையிலேயே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பெற்றோரின் பராமரிப்பிலிருந்தோ, காப்பாளரின் பராமரிப்பிலிருந்தோ அவர்களின் அனுமதியின்றி ஒரு குழந்தையை அழைத்து செல்வது கூட ஆட்கடத்தல் குற்றத்துக்குச் சமமான செயலே.
குழந்தை கடத்தல் என்பது பெரும்பாலும் பணத்துக்காகவோ, சொந்த பகை தீர்ப்பதற்காகவோ, நரபலி கொடுப்பதற்காகவோ செய்யப்படுகின்ற குற்றம். இது இந்திய தண்டனை சட்டம் 1860ன் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துபவர் இந்தச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியவராகிறார்.
இந்திய சாட்சிய சட்டம் 1872ன் கீழ் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக குழந்தை சாட்சியங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க இயலாது. ஒரு இளம் குழந்தை சாட்சி பிரமாணத்தின் கீழ் சாட்சியம் அளிக்க முடியாது. எனினும் ஒரு குற்றத்தை நேரில் பார்த்த குழந்தை அல்லது அந்த குற்றத்துக்கு ஆளான குழந்தை ஓரளவுக்கு அந்தக் குற்றத்தின் தன்மையினை உணர்ந்து சொல்லும் சாட்சியம் சட்டம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகவே உள்ளது.
0 comments:
Post a Comment