Tuesday, 18 February 2014

இரட்டை வேடம் போடும் கமல்...!



ராஜாராணி’ என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படம் பார்வையற்ற இருவரின் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நாயகன், நாயகி இருவருக்குமே இப்படத்தில் கண் பார்வை தெரியாது.

இவர்களுக்குள் உள்ள காதலை சொல்லும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர்கள் பாண்டிராஜ், லிங்குசாமி, சேரன் அட்லி, பா.ரஞ்சித், கார்த்திக் சுபாராஜ், நவீன், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் ஆடியோ சிடியை கமல் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் சூர்யா பேசும்போது, ‘குக்கூ’ மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும்.

இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும். கமல் எனக்கு அண்ணன். நான் வித்தியாசமான படங்கள் எல்லாம் பண்ணுகிறேன் என்றால் அதற்கு காரணம் அவர்தான்.

 நான் என்ன பண்ணுகிறேன் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவரை பின்பற்றித்தான் நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.

கமல் பேசும்போது, சூர்யா என்னை அண்ணன் என்று சொன்னார்.

அவரை நான் கவனித்து வருகிறேன் என்றும் சொன்னார்.

அது எல்லாமே உண்மைதான். ஆனால், சூர்யா தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவருக்கு நான் அண்ணன்.

அவருடைய அப்பா சிவகுமாருடன் அவர் இருக்கும்போது நான் அவருக்கு சித்தப்பாவாகத்தான் இருப்பேன்.

பொதுவாக எனக்கு இரட்டை வேடங்களில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும். சூர்யா விஷயத்தில் நான் இரண்டு வேடத்தில் இருப்பது ரொம்பவும் மகிழ்ச்சி என்று பேசினார்.

மேலும், குக்கூ படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், இது நல்ல படமாக இருக்கும் என நம்பிக்கை கொள்வதாகவும் கூறினார்.

0 comments:

Post a Comment