குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தைகளை தெய்வங்களாக கூட மதிக்க வேண்டாம். உயிருள்ள ஜீவன்களாக மதித்தாலே போதும் என்று சொல்லும் நிலைதான் இப்போது காணப்படுகிறது. தாய்ப்பாலை கூட விற்க ஆரம்பித்து விட்ட நிலையில், குழந்தைகள் எம்மாத்திரம்? குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் பழக்குதல் என்று மனிதத்தன்மையே இல்லாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் ஒரு ஆண்டில் சுமார் 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது. முக்கியமான விஷயம், 11 ஆயிரம் குழந்தைகள் என்ன ஆகிறார்கள் என்பதே தெரியாததுதான். பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்றாலும், சில குழந்தைகள் பெற்றோரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ஓடிச் செல்வதும் நடக்கிறது.இந்த குழந்தைகள், தனியாகவோ அல்லது ஓரிருவர் சேர்ந்தோ கண் காணாத இடத்துக்கு சென்று விடலாம் என்ற அசட்டு தைரியத்துடன் திருட்டு ரயில் ஏறி விடுகின்றனர். இக்குழந்தைகள் ரயில் நிலையங்கள் அல்லது பஸ் ஸ்டாண்டுகளில் சிக்கும்போது, போலீசார், பெற்றோர்களை அழைத்து ஒப்படைப் படைக்கின்றனர்.
நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில், குழந்தைகள் காணாமல் போவது அதிகளவில் நடக்கிறது. 60 சதவீதம் குழந்தைகள், வீட்டில் பெற்றோர், உடன் பிறந்தோர் நடவடிக்கைகள் பிடிக்காமலேயே வெளியேறுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மாநில உயர் நீதிமன்றம், ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் தன்னந்தனியாக சுற்றித்திரியும் குழந்தைகளை பிடிக்க குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், மீட்கப்படும் குழந்தைகளை நேரடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க கூடாது என்றும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம்தான் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் குழந்தைகளின் பிரச்னையை தெரிந்து கொண்டு, விருப்பம் இருந்தால் அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தல் அல்லது அவர்களின் மனதில் நல்லெண்ணங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தை பொறுத்த வரையில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரத்தில் உள்ள முக்கிய காரணங்கள், குழந்தைகளை விற்கவும், பிணைத்தொகை வசூலிக்கவும், பிச்சை எடுக்க வைக்கவும் என்று வேறு பல காரணங்களினாலும்தான் அதிகம் கடத்தப்படுகின்றனர். எனவே, குழந்தைகள் காணாமல்போகும் வழக்குகளை கிடப்பில் போட்டு விடாமல், உடனடியாக போலீசார் களத்தில் இறங்கி விசாரிக்க வேண்டியது அவசியம். பிடிபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கித்தர வேண்டியது அதை விட முக்கியமானது.
0 comments:
Post a Comment