சென்னை உள்ளிட்ட நகரங்களில் புதிய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது சமீபக் காலமாகச் சற்றுக் குறைந்துள்ளது. அதுபோல, அவற்றைக் கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதி எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்ற செய்திகள் வருகின்றன. இந்தத் தகவல்கள் ஆதாரபூர்வமானவையா அல்லது யூகத்தின் அடிப்படையில் ஆனவையா? அதைப்பற்றிப் பார்த்து விடுவோம்.
புதுமையான குறியீடு
சென்னையைப் பொறுத்தவரை 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளுக்கான வீட்டு வசதி - ஸ்டார்ட்அப் இன்டக்ஸ் மேற்கூறிய தகவலை உறுதி செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும், வீட்டு வசதி மற்றும் மத்திய அரசின் நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கான அமைச்சகமும் இணைந்து ஒரு குறியீட்டைத் தயாரித்து வருகின்றன.
முதல் கட்டமாக 27 முக்கிய நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வீடுகள் மற்றும் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 300 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளன. வீடுகளைக் கட்டுவதற்குச் சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களும் முறையாகத் திரட்டப்படுகின்றன.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் வீடுகள் மற்றும் ஃபிளாட்டுகள் கட்டப்படுவது அதிகரித்துள்ளனவா அல்லது குறைந்துள்ளனவா என்று ஆய்வு செய்து ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்பட உள்ளன. இப்படியாக ஒரு நகரத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைச் சுட்டி காட்டும் குறியீடுதான் வீட்டுவசதி - ஸ்டார்ட்அப் இன்டக்ஸ்.
இந்தத் தகவல்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு காலாண்டுகளுக்கான தகவல்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.
சென்னைக்கு முதல் வாய்ப்பு
இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய பிறகு நாட்டிலேயே முதன்முறையாகச் சென்னையைப் பற்றிய குறியீடு தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 2011ஆம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களின் தொடங்கப்பட்ட புதிய வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் 4,515 ஆக இருந்தது. ஆனால், அதே ஆண்டில் கடைசி மூன்று மாதங்களில் 2946 வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் புதிதாகத் தொடங்கப்பட்டன.
மேலும் 2011ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் புதிய வீட்டு வசதி கட்டிடங்களைத் தொடங்குவதற்கு 1,200 அனுமதிகள் வழங்கப்பட்டன. அந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 770 அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அனுமதிகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குத்தான் வழங்கப்படுகின்றன.
தனி வீடுகள் கட்டுவதற்கான விண்ணப்பங்கள் குறைவாகவே தாக்கல் செய்யப்படுகின்றன. அந்தவகையில் பார்த்தால் சென்னையில் குறியீடு சரிந்துள்ளது என்றே அர்த்தம். இதேபோல பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் குறியீடு சரிந்தது.
நன்மைகள்:
இந்தக் குறியீட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?
# முதலாவதாக, பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி.) அதிகரிக்கிறதா, சரிகிறதா என்பதைக் குறியீடு பிரதிபலிக்கிறது. உதாரணமாக 2009, 2010ஆம் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது போலவே புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
# இரண்டாவதாக, மிக முக்கியமாக வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்படுகின்றன என்றால், அதற்கான தேவைகளும் கிராக்கிகளும் அதிகரித்துள்ளன என்பதையே அது காட்டுகிறது. மாறாக, குடியிருப்புகள் கட்டப்படுவது குறைகிறது என்றால், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் இன்னும் முழுமையாக விற்கப்படவில்லை என்பதையும் அதற்கான கிராக்கி குறைந்துள்ளது என்பதையும் காட்டுகிறது குறியீடு.
ஒரு பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும்போது அதன் விலை சரியும் என்பதும் நிச்சயமாக அதிகரிக்காது என்பதும் வெளிப்படை. எனவே வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
# இன்னும் சொல்லப்போனால், விலையை மேலும் குறைப்பதற்குப் பேரம் பேசவும் இது இடமளிக்கிறது. இது தவிர அனுமதி வழங்கப்பட்ட நாளுக்கும், கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நாளுக்கும் இடையே அதிகக் காலதாமதம் நேரிடுகிறதா என்பதையும் இந்தக் குறியீட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
# சென்னையைப் பொறுத்தவரை 2009-2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் அனுமதிகள் வழங்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன என்பது ஆறுதலான விஷயம்.
# தேசிய வீட்டு வசதி வங்கி சார்பில் வெளியிடப்படும் ‘ரெசிடக்ஸ்’ என்ற குறியீடு குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் விலை உயர்ந்ததா அல்லது சரிந்ததா என்பதை மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஸ்டார்ட்அப் இன்டக்ஸ் அடுத்து வர இருக்கும் மாதங்களில் சந்தை எப்படி இருக்கும்? விலை குறையுமா அதிகரிக்குமா என்பதையும் சுட்டி காட்டக்கூடியது என்பதில் ஐயமில்லை.
விரைவில் 2012, 2013ஆம் ஆண்டுக்கான குறியீடு சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள 300க்கும் அதிகமான நகரங்களுக்கும் வெளிவர உள்ளது.
0 comments:
Post a Comment