Friday, 21 March 2014

யாசகன் - திரை விமர்சனம்…!




மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தை, சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ். இவர் தந்தை சொல்லை தட்டாத பிள்ளை. தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் கொண்டவர். யாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் உடனே சென்று உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்.

மகேஷ் ஒரு நாள் வேலை தேடி ஒரு கம்பெனிக்கு செல்கிறார். அங்கு புதியதாக திருமணம் ஆன மகேஷின் நண்பரும் வேலை தேடி வருகிறார். மகேஷ் வேலையை விட்டுக் கொடுத்தால் தான் நண்பருக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இந்த மாதிரி பல தியாகங்களை செய்து வருகிறார் மகேஷ்.இதற்கிடையில் மகேஷ் அப்பாவின் குடும்ப நண்பரின் மகளான நாயகி நிரஞ்சனா, மகேஷையே சுற்றி சுற்றி வருகிறார். முதலில் கண்டுக்கொள்ளாத மகேஷ், பிறகு நிரஞ்சனா காதலை சொன்னவுடன் ஏற்றுக் கொள்கிறார்.ஒருநாள் மகேஷின் வீட்டு அருகில் இருக்கும் ஒரு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இதைக் கண்ட மகேஷ் அவர்களை பின் தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்கிறார்கள். நிறைய பணம் தேவை என்பதால் மனம் வருந்துகிறார் சிறுமியின் தாயார். இவருக்கு ஆறுதல் கூறிவிட்டு பணத்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லுகிறார் மகேஷ்.

சிறுமியை காப்பாற்றுவதற்காக தன் சகோதரியான ஜானவியிடம் பணம் கேட்கிறார். அதற்கு ஜானவி பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். பிறகு தான் உதவி செய்த அனைவரிடமும் சென்று பணம் கேட்கிறார். ஆனால் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. இறுதியாக ஏற்கனவே தான் உதவி செய்த ஒருவரிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்கிறார். அவரும் பணம் தர மறுக்க மனமுடைந்து அங்கிருந்து செல்கிறார். மகேஷ் பணத்தை கேட்டவரிடம் இருந்த பணம் திடீரென காணாமல் போக, இதற்கு காரணம் மகேஷ் தான் என்று போலீசில் புகார் செய்கிறார் அவர். இதனால் போலீஸ் மகேஷை கைது செய்கிறது.

ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் மகேஷ் வெளியே வருகிறார்.வெளியில் வரும் மகேஷ், சிறுமி வீட்டிற்குச் சென்று பார்த்தால் சிறுமி இறந்து விடுகிறாள். இதனால் மனமுடைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார் மகேஷ். இதற்கிடையில் நிரஞ்சனாவின் அப்பாவிற்கு பணி இடம் மாற்றம் ஆகி வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்.மகேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் குடும்பத்தினர் வெறுக்கின்றனர். இறுதியில் மகேசின் மனநிலை சரியானதா? காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

‘அங்காடித் தெரு’ வில் நடித்த மகேஷ், அந்தப் படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான். ஆனால், அது வலுவாக இல்லை என்றே சொல்லலாம். படம் முழுக்க சோர்வாகவே வருகிறார். கேரளத்து வரவான நாயகி நிரஞ்சனா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷின் அக்காவாக வரும் ஜானவி, நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் 2 பாடல்கள் அருமை. பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.

மதுரையில் நடத்த உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ள துரைவாணன், கதாபாத்திர தேர்விலும், கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால் காட்சிகளை ஒருங்கினைப்பில் சற்று தடுமாறியிருக்கிறார். திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘யாசகன்’ – தனி ஒரு மனிதனின் போராட்டம்….

0 comments:

Post a Comment