கவனக்குறைவாக கையாளப்படும் காலாவதி மருந்துகள்தான் சமயங்களில் இப்படி காலனின் பிரதிநிதியாக ‘கடமை’யைச் செய்துவிடுகின்றன. மருந்து, மாத்திரைகள் வாங்கும்போதே ‘எக்ஸ்பயரி’ தேதியை கவனித்து வாங்குவதில் துவங்குகிறது… வீட்டுக்கான மருந்து, மாத்திரை பொருட்களின் பராமரிப்பு!
இந்த வகையில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை குடும்பத்துக்கு அவசியமான பராமரிப்புக் குறிப்புகளைத் தருகிறார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூக நலம் மற்றும் மருத்துவத்துறையின் பேராசிரியரும், சிறப்பு மருத்துவருமான எம்.அகிலா.
காலாவதி தேதியை சரிபாருங்கள்!
”மருந்து, மாத்திரை வாங்கும்போதே, அவற்றின் காலாவதி (எக்ஸ்பயரி) தேதியை சரிபார்ப்பது நல்லது. வாங்கும் பில்லிலும் அவற்றைக் குறிப்பிடச் சொல்லலாம். சில சமயம் உதிரியாக மாத்திரைகளை வாங்கும்போது, மருந்து அட்டையின் ஒரு பாதியில் காலாவதி தேதி காணக் கிடைக்காது. அப்போது கடைக்காரரிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
காலாவதி தேதி என்பது, கடையோடு முடிந்துபோகிற விஷயமில்லை. வீட்டுக்கு வந்த பிறகும் கவனம் தேவை. ஒரு மருந்தின் ஆயுள் இரண்டு வருடமாக இருக்கிறது எனில், காலாவதி தேதிக்கு இரண்டு மாதம் முன்பே அதன் உபயோகத்தை நிறுத்திவிடுவது நல்லது. காரணம், மருந்து மாத்திரைகளின் வீரியம் என்பது, காலாவதி காலத்தை எட்டும் முன்னரே படிப்படியாக குறையத் தொடங்கும். சில மாத்திரைகளின் மேலிருக்கும் இனிப்பு பூச்சு, நாளாக உருகத் தொடங்கலாம். இரும்பு சத்துக்கான மாத்திரைகள், காலாவதி காலம் நெருங்கும்போது கருக்கத் துவங்கிவிடும்.
பாட்டிலை திறந்தாலே… போச்சு!
என்னதான் காலாவதி தேதி என்ற ஒன்று இருந்தாலும், ஒரு மருந்து பாட்டிலின் மூடியைத் திறந்துவிட்டாலோ… அல்லது மாத்திரையின் உறை கிழிக்கப்பட்டாலோ… எவ்வளவு சீக்கிரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன் படுத்திவிட வேண்டும். ‘காலா வதி தேதிதான் இன்னும் இரண்டு வருஷத்துக்கு இருக்கே’ என்கிற நினைப்பில் அவற்றை நீண்ட நாள் வைத்திருந்து பயன்படுத்துவது நல்லதல்ல. பாட்டில் மூடி திறக்கப்பட்ட பிறகு, மாத்திரையின் உறை கிழிக்கப்பட்ட பிறகு… அந்த மருந்துகளில் வேதிமாற்றம் நிகழ்ந்து, அது வாங்கப்பட்ட நோக்கம் நிறைவேறாமல் போக வாய்ப்பு இருப்பதோடு… வேறுவிதமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்! எனவே, வீட்டில் ஒரு தடவை பயன்படுத்திவிட்டு வைத்திருக்கும் மருந்து மற்றும் மாத்திரைகளில் போதிய கவனம் செலுத்துவது முக்கியம்!
மருந்துகள் வைக்கும் இடம்!
நோயாளிக்கு கைக்கு எட்டும் வாகில் அருகிலேயே எல்லா மருந்துகளையும் சிலர் குவித்து வைத்துவிடுவார்கள். சிலர் அந்தந்த நாளுக்கான அல்லது நேரத்துக்கான மாத்திரைகளை அவற்றின் உறையிலிருந்து அகற்றி, ஒரே பொட்டலமாக மடித்து வைத்திருப்பார்கள். இரண்டிலேயும் நோக்கம் பிறழ வாய்ப்புண்டு. தேவையான மருந்து, மாத்திரைகளை அந்தந்த நேரத்தில் மட்டுமே நோயாளியோ… உதவியாளரோ அதன் பிளாஸ்டிக் உறையிலிருந்து எடுக்க வேண்டும். தேவைப்பட்டால்… பிளாஸ்டிக் உறையோடு தனி மாத்திரைகளாக நறுக்கி வைக்கலாம். காற்றோட்டமான, ஒளிபடாத அலமாரி போன்ற இடங்களில் மருந்து, மாத்திரைகளை வைப்பதுடன், குழந்தைகளுக்கு எட்டாத இடமாக அது இருக்க வேண்டியது அவசியம்.
‘ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்’ என்று மருந்துகளில் குறிப்பிட்டுஇருந்தால் மட்டுமே, அவ்வாறு செய்யலாம். சிலர் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை மொத்தமாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு, தங்கள் வசதிக்காக அருகில் இருக்கும் மருத்துவமனை அல்லது பக்கத்தில் குடியிருக்கும் மருத்துவரை அணுகி ஊசிகளைப் போட்டுக் கொள்வார்கள். தடுப்பூசிகளை இயன்றவரை அரசு மருத்துவமனைகளில் போட்டுகொள்வதே நல்லது. பவர் கட் மற்றும் தடுப்பூசி மருந்துக்கான சரியான குளிர்நிலை பராமரிப்பு உட்பட பல பாதுகாப்பு அம்சங்களில் வீட்டு ஃப்ரிட்ஜ் என்பது உசிதமான இடம் அல்ல.
சாப்பிடும் முறை, இடைவெளி, அளவு!
மாத்திரைகளை உணவுக்கு முன்பா பிறகா, முன்பு எனில் எவ்வளவு நேரத்துக்கு முன்பாக, எத்தனை டோஸ்கள், தொடர்ச்சியாக எத்தனை நாட்களுக்கு என்பவற்றை எல்லாம் மருத்துவரின் பரிந்துரையின்படி, தவறாமல் சாப்பிட வேண்டும். தண்ணீரில் கலந்து, அரை மாத்திரை, கால் மாத்திரை என அவற்றை பயன்படுத்தும்போதும் உரிய பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டும். மாத்திரை கசக்கிறது என்று அவற்றை இனிப்புகளுடன் சேர்த்தோ, கரைத்தோ உண்ணும் பழக்கம் ஒரு சில பெரியவர்களுக்குக்கூட இருக்கிறது. குழந்தைகளுக்குக் கூட தேன் அல்லது தண்ணீர் தவிர்த்து டாக்டரின் ஆலோசனை இல்லாது ஏனைய இனிப்பு பொருட்களில் கலந்து தரக்கூடாது.
ஒருவரின் மாத்திரை மற்றவருக்குக் கூடாது!
ஊட்டச்சத்து பானமாக நோயாளிகள், பெரியவர்கள், குழந்தைகளுக்கு என உபயோகிக்கும் பவுடர்களை பராமரிப்பதிலும்கூட கவனம் அவசியம். பிளாஸ்டிக் பேக்கை திறந்ததுமே உகந்த டப்பாவில் போட்டு இறுக மூடிவைத்து பராமரிக்க வேண்டும். காற்று பட்டால் கெட்டியாகிவிடும் என்பது மட்டுமல்ல, ஆக்சிஜனேற்றத்தால் சத்துக்கென வாங்கிய பொருட்கள் அவற்றின் அர்த்தத்தை இழந்துவிடும் என்பதும் காரணம்” என்ற அகிலா,
”ஒருவருக்கு வந்திருக்கும் நோயின் அடிப்படையில் டாக்டர் பரிந்துரையின் பேரில் வாங்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் மட்டுமல்ல… சத்து மாத்திரைகள், பவுடர்கள் என்றாலும் ‘மீந்துவிட்டது’ உள்ளிட்ட காரணங்களுக்காக, உரிய மருத்துவ ஆலோசனை இன்றி பிறர் சாப்பிட அனுமதிப்பது தவறு. இதன் பின்விளைவுகள் விபரீதமாக கூட மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு” என்றும் எச்சரிக்கத் தவறவில்லை!
0 comments:
Post a Comment