தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை செலவிடாமல் வைத்திருக்கின்றனர். வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.இப்போது மக்களவை உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அந்த உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவிட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்படாமல் இருக்கின்றன.நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு அதை மத்திய அரசு 5 கோடி ரூபாயாக உயர்த்தியது. அதன்படி முதல் 2 வருடங்களுக்கு தலா 2 கோடி ரூபாயும், அடுத்த மூன்று வருடங்களுக்கு தலா 5 கோடி ருபாய் என்ற கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் 19 ( 2 x 2 = 4 3 x 5 = 15 15+4=19 ) கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலமாக தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் தொடங்கி நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் சராசரியாக ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் வைத்திருக்கின்றனர். மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்திற்குள் முடிவடைகிறது. அதற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.
தொகுதி வளர்ச்சிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகம் செலவிடாமல் வைத்திருப்பவர்களில் முதலிடம் பெறுபவர் விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்க தாகூர் (காங்கிரஸ்). தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இன்னும் 7 கோடியே 93 லட்ச ரூபாய் செலவு செய்யாமல் வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தருமபுரி மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன் (திமுக), 5 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி மீதம் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தயாநதி மாறன் (4.09 கோடி), (நெப்போலியன் 3.1 கோடி), (அழகிரி 5.3 கோடி), ஆ.ராசா (2.09 கோடி) ஆகியோரும் நிதியினை செலவு செய்யாமல் மீதம் வைத்து பட்டியலில் இடம்பெறுகிறார்கள். அவ்வளவு ஏன், மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரமே தனது தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 4.05 கோடி ரூபாயை செலவு செய்யாமல் வைத்திருக்கிறார்.
சரி, இந்த நிதியை உச்சபட்சமாக செலவிட்டவர்கள் யார்..?
ஆரணி தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் (திமுக), கள்ளக்குறிச்சி தொகுதி உறுப்பினர் ஆதிசங்கர் (திமுக), தஞ்சாவூர் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக), தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் ஜெயதுரை(திமுக), வேலூர் தொகுதி உறுப்பினர் அப்துல் ரகுமான் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) என ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியினை கிட்டத்தட்ட 100 சதவீதம் செலவு செய்திருக்கிறார்கள்.
2004 -2009 ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் செலவு செய்யப்படாமல் மீதம் இருந்த தொகை 13.04 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதியில், இன்னும் 106.92 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் உள்ளது.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரும் விளக்கம் என்ன..?
நாங்கள் பணிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்கிறோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து, தொடங்கிட காலதாமதம் செய்வதால் நிதி மீதம் இருக்கிறது” என்கிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் தொகுதியில் எந்தெந்த திட்டங்களுக்குப் எவ்வளவு நிதி பரிந்துரை செய்தார்கள், அவற்றில் எவை எவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கின்றன என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடலாமே!
எத்தனையோ பள்ளிகள் முறையான கட்டிட வசதிகள் இல்லாமலும், மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லாமலும், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் இயங்கி வருகின்றன. கஜானாவில் உறங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் இவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் எதற்கும் பயனில்லாமல் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி, அரசு கஜானாவில் உறங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் யார்?
தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை முழுவதுமாக செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- ஜெகத்ரட்சகன் (திமுக)
- தொகுதி: அரக்கோணம்
- நிதி ஒதுக்கீடு: 16.92 கோடி
- செலவு செய்தது: 16.66 கோடி
- ஆதிசங்கர் (திமுக)
- தொகுதி : கள்ளக்குறிச்சி
- நிதி ஒதுக்கீடு : 16.64 கோடி
- செலவு செய்தது : 16.61 கோடி
- எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)
- தொகுதி : தஞ்சாவூர்
- நிதி ஒதுக்கீடு : 14.18 கோடி
- செலவு செய்தது : 14.15 கோடி
- எஸ். ஆர். ஜெயதுரை (திமுக)
- தொகுதி : தூத்துக்குடி
- நிதி ஒதுக்கீடு : 17.61 கோடி
- செலவு செய்தது : 17.53 கோடி
- அப்துல் ரகுமான் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்)
- தொகுதி: வேலூர்
- நிதி ஒதுக்கீடு: 16.9 கோடி
- செலவு செய்தது: 16.7 கோடி
தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியினை செலவிடாமல் மீதம் வைத்துள்ளவர்கள்
- மாணிக்க தாகூர் (காங்கிரஸ்)
- தொகுதி : விருதுநகர்
- நிதி ஒதுக்கீடு : 14.98 கோடி
- செலவு செய்தது : 7.03 கோடி
- ஆர்.தாமரைச்செல்வன் (தி.மு.க)
- தொகுதி : தருமபுரி
- நிதி ஒதுக்கீடு : 16.91கோடி
- செலவு செய்தது : 11.14 கோடி
- மு.க அழகிரி (தி.மு.க)
- தொகுதி: மதுரை
- நிதி ஒதுக்கீடு: 17.02கோடி
- செலவு செய்தது: 11.72 கோடி
- சி.சிவசாமி (அ.இ.தி.மு.க)
- தொகுதி : திருப்பூர்
- நிதி ஒதுக்கீடு : 16.95கோடி
- செலவு செய்தது : 12.17 கோடி
- டாக்டர்.பொன்னுசாமி வேணுகோபால் (அ.இ.தி.மு.க)
- தொகுதி : திருவள்ளுவர்
- நிதி ஒதுக்கீடு : 16.78 கோடி
- செலவு செய்தது : 12.24 கோடி
ஆதாரம்: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சகம்
0 comments:
Post a Comment