Saturday, 15 February 2014

மறைக்க முடியாத கருப்புச் சரித்திரம்..!



 கலை நுட்பத்தினால், செங்கோலினால், ஈகையினால் இயற்றப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் காட்டிலும், கண்ணீரால், மனித அத்துமீறல்களால், செந்நீரால் தீட்டப்பட்ட வரலாற்றுக் கதைகளும், காப்பியங்களும் அதிகமாய் திகழ்கின்றன.

NRI எனும் வார்த்தையை 'நான் ரிடர்னிங் இண்டியன்ஸ்' என்றே பலர் பெயர் சூட்டிவிட்டனர். புண்ணிய பூமியாக, சந்தர்ப்பங்களின் சொர்க்க பூமியாக அமெரிக்காவை எண்ணி அங்கேயே டேரா போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக் கொண்டே தான் செல்கிறது.

அமெரிக்கா உண்மையில் கடந்த வந்த பாதை என்ன? கொலம்பஸ்ஸினால் கண்டறியப்பட்ட இத்தேசத்தில் புதைந்து கிடக்கும் வரலாற்று இழிபாடுகளை மிகைபடுத்தப்படாத மனித உணர்ச்சிகளால் சித்தரித்துள்ளது '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' (12 Years A Slave).

கதாநாயகன் சாலமன் வயலின் வாசிப்பதில் வித்தகர். நியூயார்க்கில் மனைவி, மக்களுடன் மகிழ்ச்சியாக வாழும் நாயகனை இரண்டு நபர்கள் அணுகுகிறார்கள். தாங்கள் சர்க்கஸ் கலைஞர்கள் என்றும், 'இப்போது வாஷிங்டனில் நடக்கவிருக்கும் எக்ஸிபிஷனில் நீங்கள் எங்களுக்காக வாசிக்க வேண்டும். வாசிக்கும் பட்சத்தில் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு தருவோம்' எனக் கூறுகின்றனர்.

நாயகன் இவ்விருவருடன் வாஷிங்டனிற்கு செல்கிறார். அங்கு ஒரு பாரில் தன்னை மறந்து குடிக்கும் நாயகன் மயக்கமுற, அழைத்து வந்த இருவரும் இவரை படுக்கையில் உறங்க வைக்கின்றனர்.

கண் கூச சாலமன் மெல்ல இமைகளை திறந்து, கால்களை இழுத்துப் பார்கிறார். ஏதோ தடுக்க, எழுந்து பார்க்கையில் அவர் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. சாலமனை அழைத்து வந்த இருவர் காசுக்காக சாலமனை அடிமை என்று விற்றுவிட்டதை பிறகு உணர்கிறார். அரசாங்கத்தினால் அடிமை அல்ல என அங்கீகரிக்கப்பட்ட நாயகன் அவ்விரு மனித நரிகளின் பணத்தாசைக்கு பலிகடாவாகிறார்.

அன்று முதல் ஒரு தவறும் செய்யாது, தன் நிறத்தின் காரணமாக பன்னிரெண்டு வருடம் அடிமைப்படுத்தப்பட்ட சாலமன் எனும் மனிதரை பற்றிய கதை தான் இப்படம். 1853 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சாலமனால் இயற்றப்பட்ட '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

சாலமனை பற்றிய கதை என்று மட்டும் இக்கதையை விவரிக்க இயலாது. இவர் சந்தித்த நல்லவர்-கெட்டவர், மேம்பட்ட மனிதர்கள், இழி பிறப்புகள், அப்பிராணிகள், சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் இவர்கள் யாவரும் இக்கதையின் அங்கத்தினர்கள்.

எதிர்ப்பாரா திருப்பங்களுக்கு இடம் அளிக்காத போதும் இப்படம் நம்மை ஈர்க்கத் தவறுவதில்லை. காரணம் இது ஒரு வரலாற்று பெட்டகம். இதில் வரும் நிகழ்வுகள் அமெரிக்காவுக்கு மட்டுமோ அல்லது அங்கு வாழ்ந்த மக்களுக்கு மட்டுமோ உரித்தான ஒன்றல்ல. பல தேசங்களில் இழைக்கப்பட்ட தீண்டாமை போன்ற அநீதியை, மனித இழிபாடுகளை இதில் வரும் கதைமாந்தர்களோடு நம்மால் ஒப்பிட்டு கூற முடியும்.

தெய்வத்தின் பெயரால், சர்வாதிகாரத்தின் பெயரால், சாதி சமயத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று கூட பல மக்களுக்கு நிந்தனைகள் நிகழ்த்தப்பட்டு தான் வருகிறது. நிறத்தின் பெயரால் விதிக்கப்பட்ட அநீதியை தான் இப்படம் விவரிக்கிறது.

படத்தில் சாலமனின் தோழி சக அடிமை ஒருத்தி அழுது கொண்டே இருக்கிறார். ' நீ இப்போ அமைதியா இரு. இல்லைன்னா உன்னால உயிரோடு இருக்க முடியாது' – சாலமன். அவளோ 'நான் இனி உயிருடன் இருந்து என்ன பயன். என் பசங்களை என் கூட வெச்சு காப்பாத்த எதை எல்லாம் விற்கக் கூடாதோ அத்தனையும் செய்து விட்டேன்.

செய்யாத இழி செயல் இல்லை. கடைசில இப்போ என் குழந்தைகளும் என் கிட்ட இல்லை. இதுக்கு மேல எதுக்கு வாழணும்' என்று புலம்பிக் கதறுகிறாள். இக்காட்சி நடக்கும் மறுபுறத்தில் இவர்களின் முதலாளி இயேசுவிற்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை பற்றிய கதையைச் சொல்லி 'இதை எப்படி பொறுத்துக் கொண்டாரோ ஆண்டவன்' என்று வியக்கிறார். கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக வருந்தும் மனிதம் கண்முன் இருக்கும் மனிதருக்கென வருகையில் மழுங்கடிக்கப்படுவதை உணர்த்தி அக்காட்சி சடார் சடார் என்று சாட்டையடி அடிக்கிறது.

தொழிலாளிகளை தன் பொழுது போக்கிற்காக ஆடச் சொல்கிறார் முதலாளி. அப்போது மனதில் விரத்தி, பயம், பிரிவுகளை சுமக்கும் அடிமை மக்கள் ஏனோ தானோ என்று கைகளை அசைக்கின்றனர். முதலாளியின் மனைவி அங்கே ஆடும் ஒரு பெண்ணின் நளினமற்ற ஆட்டத்தை கண்டு சினமுற்று அவள் மீது விஸ்கி பாட்டிலை வீசுகிறாள். நெற்றி கிழிகிறது. அதை பார்த்து நின்ற மக்களை 'நீங்கள் ஆடுங்கள்.. என் சந்தோஷத்தை கெடுக்காதீர்கள்' என்று முதலாளி கூறுகிறார்.

இதைப் போன்ற பல காட்சிகள் அமெரிக்காவில் மனிதத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட பல வன்கொடுமைகளை சித்தரிக்கிறது. கலையம்சத்துடன் செதுக்கப்பட்ட இப்படைப்பு கண்டிப்பாக உங்களை சோகத்தின் குழியில் தள்ளிவிடப் பார்க்கவில்லை, மாறாக மனிதத்தின் தேவையை உரத்து உரைக்கின்றது.

சவுக்கினால் அடிக்கப்பட்ட வரலாற்றை அன்பினால், கண்ணீரால் துடைக்கப் பார்க்கும் இப்படம், ஆஸ்கர் விருதுக்கு ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக ஆஸ்கர் விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment