Saturday, 15 February 2014

தமிழ் சினிமா காட்டிய புதிய காதல்கள் - காதலர் தின ஸ்பெஷல்..!



காதல் இல்லாத தமிழ் சினிமாவே கிடையாது. பக்தி படமானாலும், புராண படமானாலும், சரித்திர படமானாலும் அவ்வளவு ஏன் கார்டூன் படமாக இருந்தாலும் கட்டாயம் காதல் இருக்கும். சில தமிழ் படங்களைப் பார்த்த ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் "உங்களுக்கு ஐ லவ் யூ சொல்வது மட்டும்தான் பிரச்னையா?" என்று கேட்டார். அந்த அளவுக்கு காதலை கதற கதற காட்டியிருக்கிறது தமிழ் சினிமா. சினிமா காட்டிய சில வித்தியாசமான காதல்களை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போம்.

தேவதாஸ் காதல்

காதல் வகையிலேயே அதிகம் பேமஸ் ஆனது தேவதாஸ் காதல்தான். காதலி உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட காதலில் தோற்ற நாயகன் தாடி வைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டே செத்த காதல். காதலில் தோற்றவர்கள் தண்ணி அடிக்க வேண்டும். தாடி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது இந்த தேவதாஸ் காதல்.

அபூர்வ காதல்

அம்மா வயதுள்ளவரை மகன் வயதுள்ளவர் காதலிப்பதும், அப்பா வயதுள்ளவரை மகள் வயதுள்ளவர் காதலிப்பதும் அபூர்வராக காதல். இதை சொன்னவர் பாலச்சந்தர். நல்ல வேளையாக இந்த இரண்டு காதலையும் அவர் சேர்த்து வைக்க வில்லை. அப்படி வச்சிருந்தால் நிஜத்துலேயும் இந்த அபூர்வ காதல் செழித்து வளர்ந்திருக்கும்.

பள்ளிக்கூட காதல்

காதலிக்கிறதுக்கு ஒரு வயசு வேண்டும், ஒரு தகுதி வேண்டும் என்பதை உடைத்து பத்தாம் வகுப்பு படிக்கும்போதே காதலிக்கலாம் என்று பள்ளிக்கூட காதலை அறிமுகப்படுத்தியது பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை. இன்றைய சினிமாவின் பள்ளி காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாரதிராஜா. பள்ளிக்கூட சீருடை அணிந்து காதலிப்பது மாதிரி காட்சிகள் வரும்போது மனசு கிடந்த பதறுது பலருக்கு.

மழலை காதல்

பள்ளிக்கூட காதலாவது பரவாயில்லை தங்க பச்சான். அஞ்சாப்பு படிக்கும்போதே காதலிக்க கற்றுக் கொடுத்தவர். அழகி படத்தில் அவர் ஆரம்பித் வைத்த இந்த மழலை காதல் நேற்று வந்த உ படம் வரை தொடர்கிறது.

பார்க்காமலே காதல்

காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்வாங்க. அதையே மாற்றி காதலிக்கிறதுக்கு பார்க்ககூட தேவையில்லை. பார்க்காமலேயே காதலிக்கலாமுன்னு சொல்லிக் கொடுத்தார் அகத்தியன். காதல் கோட்டையில் அஜீத்தும், தேவயானியும் பார்க்காமலேயே காதலிச்சு கடைசி நேரத்துல ரெயில் நிலையத்துல சேர்ந்ததை லிட்டர் கணக்கில் கண்ணீர் வடிச்சு ரசிச்சு ரசிச்சு பார்த்தோம்.

அலைபாயுதே காதல்

காதலில் இது தனி வகை. அதாவது வீட்டுக்கு தெரியாம தாலிகட்டி குடும்பம் நடத்துற காதல். அடிக்கடி பத்திரிகையில் அலைபாயுதே பாணியில் என்று பல காதல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். இந்த காதலை கண்டுபிடித்து சொன்னவர் மணிரத்னம்.

தற்கொலை காதல்

காதல் கைகூடி வரவில்லையா ஆத்துலேயோ, குளத்துலேயோ விழுந்து செத்துடணும். ஏக் துஜே கேலியேவும், புன்னகை மன்னனும் கற்றுக் கொடுத்தது. கொஞ்ச காலம் சினிமா காதலர்கள் இப்படித்தான் செய்தார்கள். 80 களில் ஊட்டி சூசைட் பாயிண்டில் இருந்து தொப்பு தொப்புன்னு விழுந்து காதலர்கள் செத்துக்கிட்டிருந்தாங்க. இப்பதான் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.

அழுக்கு காதல்

இப்போ உள்ள சினிமா கண்டுபிடிச்சது இந்த அழுக்கு காதலை. காண்வெண்ட்டில் படித்து ஐ.டியில வேலை பார்த்தாலும் கூடவே ஸ்மார்ட்டா இருக்கிற பையனை ஏறிட்டும் பார்க்காமல் கட்டச்சுவர்ல உட்கார்ந்துகிட்டு நண்பர்களோட அரட்டை அடிச்சிக்கிட்டு பீடி குடிக்கிறவனைத்தான் காதலிப்பாங்க. அதிலும் லுங்கியும், கட்டம்போட்ட சட்டையும் போட்ட ஆளைப் பார்த்தாலே காதல் பொங்கி வழிஞ்சிடும்-.

சைக்கோ காதல்

பொண்ணு தெளிவாத்தான் இருக்கும். ஆனா தெளிவில்லாம சைக்கோவா திரியுறவனை காதலிக்கும், இல்லேன்னா பல கொலைகளை பண்ணினவத்தான் பிடிக்கும். அவனை கல்யாணம் பண்ணிகிட்டு இவள் திருத்திவிடுவாளாம். அவனும் காதல் வந்த பிறகு எல்லாத்தை விட்டுவிட்டு நல்லவனாகி விடுவானாம். கோர்ட்டும் ஹீரோ செஞ்சது எல்லாமே மக்கள் நலனுக்காகத்தான்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடும்.

இப்படி நம்ம தமிழ் சினிமா காட்டிய காதல் எக்கச்சக்கமா இருக்கு. இதுல நீங்க ரசித்து பார்த்த காதலையும், வெறுத்து ஓடின காதலையும் கமெண்டுல போடுங்க. காதலர் தினத்தை கொண்டாடுங்க பாஸ்...

0 comments:

Post a Comment