Saturday, 22 March 2014

மான் கராத்தே - இசை விமர்சனம்...!




எதிர்நீச்சல்’ ஆல்பத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் இன்னொரு ஆல்பம் என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதோடு, ஸ்ருதிஹாசன், தேவா, ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன் என பாடகர்களிலும் வெரைட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

மற்ற ரசிகர்களைவிட ‘மான் கராத்தே’ ஆல்பம் எப்படி வருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ‘தல தளபதி’ ரசிகர்களுக்குதான் ஆர்வம் அதிகம். பின்னே... அஜித், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறாரே அனிருத். இவ்வளவு பில்டப்களுக்கும் ஈடுகொடுத்திருக்கிறதா ‘மான் கராத்தே’வின் பாடல்கள்!

மாஞ்சா...
பாடியவர் : அனிருத்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

வழக்கமாக தன் இசையமைப்பில் வெளிவரும் ஆல்பங்களில் குறைந்தது இரண்டு பாடல்களையாவது பாடிவிடுவார் அனிருத். ‘மான் கராத்தே’ ஆல்பத்தில் முதல் பாடலையே தன் குரலில் ஆரம்பித்து பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். இந்த வெஸ்டர்ன் டைப் பாடலின் பின்னணியில் கர்நாடக இசையை லேசாக ஒலிக்கவிட்டு பாடலை வித்தியாசமாக அமைத்திருக்கிறார் அனிருத். குறிப்பாக கர்னாடிக் கோரஸும், தவிலின் இசையையும் ரசனையாக கலக்க வைத்திருக்கிறார் அனிருத். கார்க்கியின் ஸ்டைல் வரிகளும், அனிருத்தின் குரலும் இந்தப் பாடலுக்கு பெரும் பலம். டிரம்ஸ், கிடார், பியானோ, தவில் என எல்லாவிதமான வாத்தியங்களையும் கலந்து கட்டி ரசிக்க வைத்திருக்கிறார். டிரைலரில் வரும் இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயனின் டான்ஸ் மூவ்மெண்ட் வாய்பிளக்க வைக்கிறது.

டார்லிங் டம்பக்கு....
பாடியவர்கள் : பென்னி தயாள், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : யுகபாரதி

ஃபர்ஸ்ட் லுக் டீஸரின் பின்னணியில் ஏற்கெனவே ஹிட்டடித்துவிட்ட ட்யூன் என்பதால் பரிச்சயத்துடன் இந்தப் பாடலுக்குள் நம்மால் உள்புக முடிகிறது. எனர்ஜி கொப்பளிக்கும் இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருப்பவர்கள் பென்னி தயாளும், சுனிதி சௌகானும். ‘டார்லிங் டம்பக்கு... கிருடா... கிருடா....’ என பென்னி தொடங்கி வைக்க, ‘பாவிப்பயலே இவ உயிர்மூச்சுல கடைபோடுற...’ என சுனிதி ஆரம்பிக்கும் ஸ்டைலே சூப்பராக இருக்கிறது. கிடாரின் ஜாலங்கள் நிறைந்திருக்கும் இந்த போக் பாடலை திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆடப்போவது நிச்சயம். சிவகார்த்திகேயன், ஹன்சிகாவின் ‘லுங்கி டான்ஸ்’ இப்பாடலுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமையும். யுகபாரதியின் பாடல் வரிகள் ரசிக்கும்படி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக நீண்ட நாட்கள் டிவிகளில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது இந்த ‘டார்லிங் டம்பக்கு’!

உன் விழிகளில்...
பாடியவர்கள் : அனிருத், ஸ்ருதிஹாசன்
பாடலாசிரியர் :ஆர்.டி.ராஜா

ஆல்பத்தின் இந்த ஒரே மெலடிப் பாடலைப் பாடியிருப்பவர்கள் அனிருத்தும், ஸ்ருதிஹாசனும். வெஸ்டர்ன் ‘பேஸ்’ சப்தங்களும், கர்நாடிக் வயலினும் கலவையாக கலந்து ஒலிக்கிறது இப்பாடலில். சரணத்தை அனிருத் பாட, பல்லவியில் அவரோடு கைகோர்த்திருக்கிறார் ஸ்ருதி. புதிதாக எதுவும் இந்தப் பாடலில் நம்மை ஈர்க்கவில்லை என்றாலும், கேட்பதற்கு போரடிக்காத ரகம்தான். ஆச்சரியமாக இப்பாடலின் மூலம் ‘கவிஞர்’ அவதாரம் எடுத்திருப்பவர் ‘மான் கராத்தே’வின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ‘ஹேப்பி பர்த்டே’ ட்யூனோடு இப்பாடல் முடிவதால், அதற்கான காட்சி படத்தில் இடம்பிடித்திருக்கலாம்.

ராயபுரம் பீட்டரு...
பாடியவர்கள் : ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன்
பாடலாசிரியர் : ஆர்.டி.ராஜா

ரசிகர்களுக்கு வித்தியாச விருந்து கொடுக்கும் முனைப்போடு இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயனையும், நாட்டுப்புற பாடல் ஸ்பெஷல் ‘பரவை’ முனியம்மாவையும் இணைந்து பாடவைத்திருக்கிறார்கள்! தியேட்டரை அதிர வைக்கும் முடிவோடு இறங்கி குத்தியிருக்கிறார் அனிருத். எலக்ட்ரிக் கிடாரும், உறுமியும் இணைந்து விளையாடியிருக்கிறது ‘ராயபுரம் பீட்டரு...’ பாடலில்! ரகளையான இந்தப் பாடலுக்கு கைகொடுத்திருக்கிறது ஆர்.டி.ராஜாவின் வித்தியாசமான பாடல் வரிகள்! மொத்தத்தில் இந்தப் பாடல் ‘கொலக் குத்து’!

ஓப்பன் த டாஸ்மாக்...
பாடியவர்கள் : தேவா, அனிருத்
பாடலாசிரியர் : கானா பாலா

கானா பாலாவின் வரிகளுக்கு ‘கானா’ தேவாவின் குரல் என செம ரகளை பண்ணியிருக்கிறார்கள் இந்தப் பாடலில். ‘சரி சரி... க ம ப த நி....’ என தேவாவின் வாய்ஸில் கர்நாடக சங்கீதத்தோடு கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்தப் பாடல் முழுவதும் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் அனிருத்.

 பார்ட்டிகளிலும், ‘பப்’களிலும் நிச்சயமாக இடம் பிடிக்கும் இந்த ‘ஓப்பன் த டாஸ்மாக்’. முழுப்பாடலையும் தேவா பாட, இடையிடையே சின்ன சின்ன வித்தியாசமான வரிகளுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் அனிருத்.

பாடலின் கடைசியில் ‘பில்டிங் ஸ்டராங்கு பேஸ்மென்ட் வீக்கு...’, ‘ஐயாம் வெரி ஹேப்பி...’ என வடிவேலு, கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி டயலாக்கையே பாடல் வரியாக்கி எனர்ஜி ஏத்துகிறார் கானா பாலா. இன்னும் கொஞ்ச நாட்கள் பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடல் ஒலிக்கப்போவது நிச்சயம்!

மொத்தத்தில்... ‘3’, ‘எதிர்நீச்சல்’ ‘வணக்கம் சென்னை’ ஆல்பங்களைப் போன்ற பாடல்கள் நிச்சயம் இந்த ‘மான் கராத்தே’வில் இல்லைதான். ஆனால், இந்த வருடத்தின் ‘சூப்பர் ஹிட்’ வரிசையில் இந்த ஆல்பத்திற்கும் நிச்சயம் இடமிருக்கும். அமைதியாக உட்கார்ந்து ரசிப்பதற்குப் பதிலாக ரகளையாக எழுந்து நின்று ஆடவைத்திருக்கிறார் அனிருத்! காட்சிகளோடு பார்க்கும்போது பாடல்கள் கூடுதல் கவனம் பெறும்! ‘மான் கராத்தே’... அனிருத்தின் ஸ்பெஷல் குத்து!

0 comments:

Post a Comment