Saturday, 22 February 2014

'' சித்திரை திங்கள் '' - திரை விமர்சனம்…!



விருதுநகர் மாவட்டத்தில் வெங்கிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவராக தீரன். இவருக்கு மனைவி கிடையாது. ஆனால், அஸ்வந்த் தத்துப் பிள்ளையாக வளர்த்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் ஸ்வாதியும், அஸ்வந்தும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர்.

இவர்கள் காதலுக்கு ஸ்வாதியின் தாய்மாமா ராஜானந்த் எதிர்ப்பாக இருக்கிறார். இருந்தும் அவருக்குத் தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் இந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிவிட திட்டமிடுகிறது. அந்த வேளையில்தான் தன்னுடைய அம்மா யார் என்பது நாயகன் அஸ்வந்துக்கு தெரிய வருகிறது. அவள் யார் என்பது தெரிந்திருந்தும் அஸ்வந்திடம் தீரன் மறைக்க காரணம் என்ன?
அஸ்வந்துடைய அம்மாவுக்கும், தீரனுக்கும் என்ன தொடர்பு? என்பதை இறுதியில் சொல்கிறார்கள்.

நாயகன் அஸ்வந்த், கதாநாயகனுக்கு சற்றும் பொருந்தாத முகம். நாயகியை காதலிப்பது, வில்லன்களுடன் சண்டை போடுவது, டூயட் பாடுவது என எந்தவொரு இடத்திலும் இவருக்கு நடிப்பு என்பது கொஞ்சம்கூட வரவில்லை. டான்ஸ் மட்டும் கொஞ்சம் நன்றாக ஆடுகிறார்.

நாயகி ஸ்வாதி, பாவடை தாவணியில் அழகாக இருக்கிறார். அழுகை, காதல் எல்லாம் இவருடைய முகத்தில் எல்லா நடிப்பும் நன்றாக வருகிறது. ராஜானந்த் வில்லனாக மிரட்டியிருக்கிறார். தீரன் இரு கெட்டப்புகளில் வந்தாலும் இரண்டிலும் தோற்றத்தில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. நடிப்பு என்பது இவருக்கு சுத்தமாக வரவில்லை. இவர் கோபப்படும்போது நம்மை சிரிக்க வைக்கிறார். டீச்சராக வரும் ஸ்ரீரேகாவும் செயற்கைத்தனமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகருக்கும், நடிகைக்கும் காதல், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறைமாமன், நாயகியை அடையத் துடிக்கும் வில்லன் என தமிழ் சினிமாவில் நரநரத்த கதையையே இயக்குனர் மாணிக்கமும் எடுத்திருக்கிறார். மற்றபடி இந்த கதையில் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. கதாபாத்திரங்கள் தேர்வில் கோட்டை விட்டுவிட்டார். காட்சியமைக்கும் விதத்திலும் நிறைய சொதப்பல் செய்திருக்கிறார்.

ஏ.எம்.அருண் ஒளிப்பதிவு படத்தின் தொய்வுக்கு மேலும் ஒரு காரணம். சரத் பிரிய தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘சித்திரை திங்கள்’ தெளிவில்லை…..

0 comments:

Post a Comment