காதல் தோல்வியால் துவண்டு ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்று பாடும் தேவதாஸ், ‘ஓர் இரவு’ படத்தில் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து’ என்ற பாடலில் வரும் கனவான். இந்த பாத்திரங்கள் தான் நாகேஸ்வரராவ் பற்றி தமிழ் ரசிகர்களுக்கு இருக்கும் அறிமுகம்.
ஆந்திர ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்களாக வளர்ந்த பெரும்பாலான நடிகர்களைப் போலவே நாகேஸ்வரராவும் சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்று தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு திரையுலகில் முக்கியமான ஆளுமையாகவும், தமது வாரிசுகளின்வழி தெலுங்குத் திரையுலகை ஆட்சி செய்த பெரிய நடிகர்களில் ஒருவருமாக இருந்தவர் அவர்.
அந்தக்காலத்தில் நடிப்பதற்கு பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளால் ஆண்களே ‘ஸ்த்ரீபார்ட்’ பாத்திரங்களில் நடித்தனர். சிவாஜியும் பெண் வேடங்கள் மூலம் புகழ்பெற்றவர் தான். நாடகப் பின்புலம் கொண்ட நாகேஸ்வர ராவ், பெண் வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
தனது 17-வது வயதில் ‘தர்மபத்தினி’ என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனுக்கு நண்ப னாக நடித்தார். ரயில்வே நிலையம் ஒன்றில் இவரைப் பார்த்த இயக்குநரும் தயாரிப் பாளருமான கண்டசாலா(இவர் இசையமைப்பாளர் அல்ல. இசையமைப்பாளர் கண்டசாலா இப்படத்தில் துணை நடிகராகவும் கோரஸ் பாடகராகவும் அறிமுக மானார்!) தனது சீதாராம ஜனனம் என்ற புராணப் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கவைத்தார். இப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதன் பின்னர் தெலுங்கு, தமிழ் என்று பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார் நாகேஸ்வர ராவ்.
தமிழில் எம்.ஜி.ஆர்.,-சிவாஜிக்கு இணையாக தெலுங்கில் என்.டி.ஆரும், நாகேஸ்வரராவும் இரட்டை நாயகர்களாகக் கோலோச்சினர் என்று பலரும் தெரிவிக்கின்றனர். எனினும், ‘ஓர் இரவு’, ‘தேவதாஸ்’, ‘மாயக்காரி’, ’கல்யாணப் பரிசு’ போன்ற படங்களில் அவரது நடிப்பு மிகையில்லாத, ஆர்ப்பாட்டமான உடல்மொழி தவிர்த்த இயல்பான நடிப்பாகவே அமைந்தது. மென்மையான குரலும் பாந்த மான உடல்மொழியும் அவரது சிறப்பம்சங்களாக அமைந்தன. ‘தெலுங்கில் ’டாக்டர். சக்கரவர்த்தி’, ‘சம்சாரம்’, வெலுகு நீடாலு’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் அவரது நடிப்பில் பெரும் வெற்றியடைந்தன.
1960-களில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் நாகேஸ்வர ராவை அரசு முறை விருந்தினராக அழைத்து கவுரவித்தன. மூன்று முறை பிலிம்பேர் விருது வென்றுள்ள நாகேஸ்வரராவ், பத்மவிபூஷண், தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகளால் கவுரவிக்கப்பட்டார்.தனது பெயரால் ஏ.என்.ஆர். தேசிய விருது என்ற பெயரில் இந்தியாவின் சிறந்த திரைக்கலைஞர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கமும் விருதும் வழங்கி கவுரவித்தார். ஷபானா ஆஸ்மி, ஷ்யாம் பெனெகல் ஆகியோருடன் கே.பாலச்சந்தருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.
புராணப்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பாபு இயக்கிய ‘ராம ஜெயம்’ படத்தில் வால்மீகியாக அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.தனது மகன் நாகார்ஜூன், பேரன் சைதன்யா ஆகியோருடன் அவர் நடித்திருக்கும் ‘மனம்’ என்ற தெலுங்குப்படம் தான் அவரது கடைசிப்படம். இந்த ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது.
ஷாருக்கான், அபய் தியோல் என்று பலரும் தேவதாஸ் வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றும் தேவதாஸ் என்றால் திரைரசிகர்களின் மனதில் தோன்றுவது நாகேஸ்வரராவ் தான். தேவதாஸ் கதையை அடிப்படையாக வைத்து நாகேஸ்வர ராவ், தேவி நடித்த ‘ப்ரேமாபிஷேகம்’ என்ற தெலுங்குப்படம் தான் கமல் ஹாஸன், தேவி நடிப்பில் ‘வாழ்வே மாயம்’ என்று ரீமேக் செய்யப்பட்டது. அதனால் தான் புகழ்பெற்ற இந்தி நடிகர் திலீப் குமார் குறிப்பிட்டார், “ஒரே ஒரு தேவதாஸ் தான். அது நாகேஸ்வர ராவ் தான்”.
0 comments:
Post a Comment