Saturday, 1 March 2014

இன்றைய தமிழ் படங்களின் ஆயூட்காலம் மூன்று நாட்கள் மட்டுமே..!



ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் படங்கள் வெளியாகின்றன. புதுப் படம் என்ற அந்தஸ்தோடு வெள்ளிக்கிழமை களம் இறங்கி , இன்னும் சினிமாவை மட்டுமே முக்கியப் பொழுது போக்காக கொண்டிருக்கும் ரசிகர்களால் சனிக்கிழமை கவனிக்கப்பட்டு , ஏதாவது ஒரு படம் பாப்போம் என்ற எண்ணத்தோடு ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்க வரும் ரசிகர்களை அடைந்து , அவர்களை ஏமாற்றி உதடு பிதுக்க வைத்து, திங்கள் கிழமை காலைக் காட்சியில் காற்று வாங்க ஆரம்பித்து தன் உயிர்க் காற்றை முடித்துக் கொண்டு விடுகின்றன இன்றைய பல தமிழ்ப் படங்கள் .இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமையன்று அதாவாது இன்று மட்டும் 12 திரைப்படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது.

காரணம், பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் இனி ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் மட்டுமே வெளியாக வேண்டும் என்கிற புதிய நடைமுறையை தயாரிப்பாளர் சங்கம் அமல்படுத்தி இருக்கிறது. இந்த உத்தரவு சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களை உற்சாகம் கொள்ள வைத்த நிலையில், இதை பயன்படுத்தி இன்று(பிப்-28) மட்டும் 12 படங்கள் வெளியாக இருந்தன.நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ‘வல்லினம்’, ‘தெகிடி’, ‘அங்குசம்’ உட்பட பிறமொழி டப்பிங் படங்களும் இதில் அடக்கம்.
மொத்தம் 800 திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படங்களில் ‘வல்லினம்’ படத்திற்கு மட்டும் 400 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற படங்கள் மீதியுள்ள 400 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன என்று அரிவிக்கப்பட்ட நிலையில் கடைசியில் 4 தமிழ்ப் படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன. .இந்த நான்கு படங்கள் வெளியாவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பு மாலை முரசு நாளிதழில் நான் எழுதிய ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது. இப்போதும் உயிர் துடிப்புள்ள அந்த கட்டுரையை மறுபடியும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தியாகராஜா பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் பற்றிக் கூறும்போது மூன்று தீபாவளிகளைக் கண்ட படம் என்று கூறுவார்கள் . அதாவது படம் வெளியான போது தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியிருக்கிறது அந்தப் படம்.

அதன் பின்னரும்கூட நூறுநாள் , நூற்றி ஐம்பது நாள் , வெள்ளிவிழா , பொன்விழா கண்ட படங்கள்தான் தமிழ் சினிமாவில் எத்தனை எத்தனை !
ஒரு நிலையில் இனி நூறு நாள் ஒரு படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை என்ற நிலை வந்தபோது, படம் வெளியாகும்போதே அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு , மக்கள் காத்திருக்கத் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கி , படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வடிந்து விடுவதற்குள் குறுகிய காலத்திலேயே அவர்களைப் படம் பார்க்க வைத்து, லாபம் சம்பாதிக்கிற வழக்கம் வந்தது .

ஆனால் இன்று ?

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை வெள்ளிக் கிழமை நடிகர் என்று ஒரு காலத்தில் சொல்வார்கள் . காரணம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவர் நடித்த படம் ஒன்று வெளியாகிக் கொண்டிருக்கும் . குறைவான பட்ஜெட்டில் தயாராகும் அவருடைய படங்கள் பெரும்பாலும் லாபம் கொடுத்தன. அவரது படங்களால் நஷ்டத்தை சந்தித்து ஒட்டாண்டியான தயாரிப்பாளர் என்று யாரும் இல்லை .

இன்று தமிழ் சினிமாவின் நிலை என்ன?

ஹும்..ஈசல் பூச்சிகளின் வாழ்க்கை ஒரு நாள் . இந்த ஈசல் திரைப் படங்களின் வாழ்க்கை மூன்று நாட்கள் . அவ்வளவுதான் வித்தியாசம் .
தமிழ் சினிமாவுக்கு என்ன ஆச்சு? கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது

ஒரு காலத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள் .

தயாரிப்பாளர் எனறால் யார் ? பணம் போடுபவர் என்பீர்கள் . இதுவே தப்பு . பணம் போடுவதால் மட்டுமே ஒருவர் தயாரிபாளர் ஆகி விடலாம் என்ற நிலை வந்ததுதான் தமிழ் சினிமாவின் முதல் சாபக் கேடு .

அன்றைய தயாரிப்பாளர்களுக்கு சினிமா குறித்த சகல அறிவும் ஆற்றலும் இருந்தது . கதை அறிவு , படம் இயக்கும் ஆற்றல் எல்லாம் உண்டு . ஏ வி மெய்யப்பன் , மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் , எஸ் எஸ் வாசன் , எல் வி பிரசாத் , போன்றவர்கள் பல வெற்றிப் படங்களை இயக்கி தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குனராக நிரூபித்து விட்டு , ஒரு நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் தயாரிப்பு பணிகளுக்கே நேரம் போதாத காரணத்தாலும் தயாரிப்பாளராக மட்டும் தங்களை சுருக்கிக் கொண்டவர்கள் . எனவே தங்கள் படத்தை உருவாக்கும் படைப்பாளிகள் பாதியில் தவறாகப் படத்தைக் கொண்டு போனாலும் படைப்பிலும் தலையிட்டு அதை சரிசெய்யும் திறமை அன்றைய தயாரிப்பாளர்களுக்கு இருந்தது .

முதலில் சரியான கதையை முடிவு செய்யும் ஆற்றல் , அடுத்து பொருத்தமான இயக்குனர் , பின்னர் சரியான நடிகர் நடிகைகள் , மற்ற கலை நுட்ப தொழில் நுட்ப கலைஞர்கள் என்று திட்டமிட்டு படம் எடுத்து அவர்கள் வென்றார்கள் . ஒரு வேளை சில படங்கள் தோற்றாலும் பெரிதாக கையைக் கடிக்காமல் பார்த்துக் கொண்டார்கள்

ஒரு நிலையில் தயாரிப்பாளர் என்று யாரும் இல்லாமல் போனார்கள் . தயாரிப்பாளர் என்ற பெயரில் திட்டம் உருவாக்குவோர் (ஆங்கிலத்தில் புரபோசல் மேக்கர் என்பார்கள் ) வந்தார்கள் . இவர்கள் எப்படியாவது ஒரு பிரபல நடிகர் அல்லது இயக்குனரின் கால்ஷீட்டைப் பெறுவார்கள். பின்னர் அந்த பிரபல நடிகரின் விருப்பப்படிய எல்லாம் நடக்கும் . கதையாவது மண்ணாங்கட்டியாவது . ! இந்த இடத்தில்தான் தயாரிப்பாளர்கள் சுணங்கிப் போனார்கள் .பொதுமக்களின் ரசனைக்காக அல்லாமல் ஒரு தனிப்பட்ட நடிகரின் விருப்பத்துக்காக வைக்கப் படும் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பாதகமானது .

அதன் பின்னர் தயாரிப்பாளர் என்பவர் பைனான்சியரின் கையாளாக மாறிப் போனார் . விநியோகஸ்தர் சொன்ன படியெல்லாம் ஆடி, கரைந்து போனார் .இன்றைய பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பலர் எப்படிப் பட்டவர்கள் ? அவர்களுக்கு சினிமா பற்றிய புரிதலோ அறிவோ இல்லை .

சரி இல்லாவிட்டால் பரவாயில்லை . பிறக்கும்போதே யாரும் சினிமா அறிவோடு பிறப்பதில்லை .ஆனால் படம் தயாரிக்க என்று முடிவு செய்த உடன் , அனுபவப் பட்ட தயாரிப்பாளர் சினிமா பிரமுகர்களிடம் இருந்து அதை முறைப் படிக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வமோ .. குறைந்த பட்சம் நல்ல ஆலோசனை பெறவேண்டும் என்ற எண்ணமோ கூட அவர்களுக்கு . இல்லை

இப்போது படமெடுக்க வரும் பலருக்கு சினிமா நிரந்தரத் தொழிலே அல்ல . அவர்கள் வேறு ஏதாவது ஒரு தொழிலில் சம்பாதிக்கிறார்கள் . அவர்களுக்கு இருக்கும் சில பல அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அங்கு இருக்கும் வாய்ப்புகளை விட சினிமாவில் அது எளிது .என்று எண்ணுகிறார்கள் எனவே அவர்கள் படம் எடுக்க நினைக்கும்போதே படம் ஓட வேண்டும் என்பதை விட விரும்பிய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர் .அவர்களுக்கு கதை என்று ஏதாவது ஒன்று வேண்டும் . இயக்குனர் என்று யாராவது ஒருவர் வேண்டும் . மற்றபடி ஆசைகள் நிறைவேறுவதே குறி .

அன்றைய தயாரிப்பாளர்கள் தான் கோடீஸ்வரராக இருந்தாலும் தன் படத்தில் பணியாற்ற வருபவன் ஓட்டை சைக்கிளில் வந்தாலும் திறமைகளுக்காக அவர்களை மதித்தார்கள் . முக்கியத்துவம் கொடுத்தார்கள் . ஏனெனில் அந்தத் தயாரிப்பாளர்களும் படைப்பாளியாக ஜெயித்துக் காட்டியவர்கள்தானே . எனவே அவர்களிடம் படைப்பாளிகளும் தன்னம்பிக்கையோடு பணியாற்ற முடிந்தது . படைப்பு மிளிர்ந்தது . வெற்றி கிடைத்தது .

ஆனால் இன்று படமெடுக்க வருபவர்கள் பலருக்கு படைப்பாளிகள் மீது மரியாதை இல்லை . நிஜ படைப்பாளிகளை மதிக்க வேண்டும் என்ற அவசியமும் அவர்களுக்கு இல்லை . நல்ல படைப்பாளிகள் அவர்களை நெருங்க முடிவதில்லை . ஒரு அறிமுக இயக்குனர் கதை சொல்ல வாய்ப்பு கேட்கும்போதே அவர்களை மேலும் கீழும் அலட்சியமாக பார்த்தால் அவன் எப்படி தன்னம்பிக்கையோடு கதை சொல்வான் ?

உலகின் சிறந்த படங்களைத் தரும் பல நாடுகளில் கதை திரைக் கதை ஆசிரியர்கள் ஒரு கல்லூரி பேராசிரியர் போல கம்பீரமாக கதையை விவரிக்க , இயக்குனரும் தயாரிப்பாளரும் மற்ற கலை நுட்ப மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மாணவாகள் போல அமர்ந்து கதை கேட்பது உண்டு. அங்கு உள்ள தயாரிப்பாளர்களும் பணம்தான் போடுகின்றனர் . அவர்கள் மட்டும் வெறும் காகிதத்தையா போடுகின்றனர்?

ஆனால் இங்கே பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்ல வரும் புது இயக்குனர் தன் முன்னால் நிமிர்ந்து உட்காருவதே தவறான செயலாகப் படுகிறது . எனவே நிஜமான திறமைசாலிகள் ஒதுங்கி நின்று விட சம்மந்தப் பட்டவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் உதவத் தயாராக இருப்பவர்கள் படைப்பாளிகளாக நுழைந்து விடுகிறார்கள் . ‘தயாரிப்பாளர் என்ற தனி மனிதனை எப்படியாவது திருப்திப் படுத்துவது முக்கியமல்ல ; ஒரு சமூகத்தின் கலை ரசனையை கட்டி உறவாடுகிற படைப்பே வெற்றி பெறும்’ என்ற உண்மை பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை .

படம் என்ற பெயரில் எதையோ ஓட்டி வைக்க , அந்தப் படம் முடிந்ததும் அவிழ்த்து விட்ட நெல்லிகாய் மூட்டையாக அனைவரும் சிதற , வெள்ளிக் கிழமை வெளியே போன படப் பெட்டி திங்கள் கிழமை சோகமாக திரும்ப வருகிறது .

இப்படிப் பட்டவர்கள் இயக்குனர் பதவியை குறுகிய காலத்தில் அடைந்து எப்படியோ கொஞ்சம் காசும் பார்த்து விடுவதால் முறைப்படி இயக்குநராகி முன்னேற நினைக்கும் இளைஞர்களும் பொறுமைஇழந்து அவசரப் படுகிறார்கள் .

திரைப்பட இயக்கம் என்பது ஒரு வித கலையறிவு . ஒரு இயக்குனரிடம் உதவியாளராக இருப்பதால் மட்டும் அது வந்து விடுவதில்லை . ஆனால் எப்படிப் பட்ட கதை திரைக்கதைகளையும் கையாளும் அறிவு , படப்பிடிப்பு தளத்தில் பதறாத பக்குவம் , நடிகர் நடிகைகளை வியந்து பிரம்மித்து நின்றுவிடாத தெளிவு இவையெல்லாம் வர குறைந்தது மூன்று படங்களிலாவது முழுமையாக பணியாற்றுவது அவசியம் .ஆனால் இப்போது பலர் ஒரு படத்திலேயே அதுவும் அரைகுறையாக வேலை பார்தது விட்டு கம்பியூட்டரில் சில டிசைன்களை செய்து கொண்டு கதை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள் .

ஒரு கேமரா மேனோ எடிட்டரோ இயக்குனராவது பரவாயில்லை . சினிமாவில் ஏதாவது சின்ன சின்ன வேலை பார்த்த்வர்கள் கூட அதையும் அனுபவமாக சொல்லி இயக்குனர் ஆகும் கோதாவில் கலந்து விடுகிறார்கள் .விளைவாக , நல்ல திறமைசாலிகள் கூட அதிவேக பயணத்தில் இறங்குகிறார்கள் . டைரக்ஷன் என்பது பேப்பரில் இருப்பதை இதயங்களில் இறக்குவது என்ற அக்கறையோ தெளிவோ இல்லாமல் சும்மா ஸ்டார்ட் கட் சொல்வது , எழுத்திய காட்சிகளை சும்மா கோர்த்து விடுவதுதான் என்று படம் எடுக்கின்றனர் . எனவே அந்தப் படங்கள் எல்லாம் உதிரிக் காட்சிகளிண் குவியலாக இருக்கின்றனவே ஒழிய ஒரு முழுமையான திரை அனுபவமாக மாறி மக்களின் ரசனையை ஈர்ப்பதில்லை .

இன்னொன்றும் கவனிக்க முடிகிறது .

முன்பெல்லாம் தமிழில் வந்த — நாடகத்தனமான செயற்கையான படங்கள் என்று இப்போது நாம் கருத்துக் கூறும் —-படங்களில் கூட , படத்தின் இடைவேளைக்குப் பின்பு வரும் இரண்டாம் பகுதியை மக்கள் விரும்புகிற , ரசிக்கிற , பிரம்மிக்கிற ஏதோ ஒரு வகையில் உருவாக்கி படத்துக்கு வெற்றி தேடித் தருவதில் அன்றைய இயக்குனர்கள் கில்லாடிகளாக இருந்தனர் .
ஆனால் இப்போது ?

பெரும்பாலான இயக்குனர்கள் அவர்கள் உருவாக்கும் படத்தின் இரண்டாவது பாகத்தை சரியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் . இரண்டாம் பாகத்திடம் சிக்கி அவர்களும் சீரழிந்து படம் பார்க்க வருபவர்களையும் குதறி விடுகிறார்கள் . காரணம் இவர்களிடம் கற்பனை திறன் உண்டு . ஆனால் தொழில் நுட்ப ரீதியாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் அவசரப் பட்டு இயக்குனர் ஆகிவிடுவதால் வரும் ஆபத்து இது . இப்போதைய பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ‘சினிமா அறிவு’க்கு இதை வேடிக்கை பார்ப்பதைதவிர, அவர்களால் பாவம் என்ன செய்ய முடியும் ?.
அதனால்தான் திரைக்கு வந்து சில ‘நொடி’களே ஆன படங்கள் கூட தொலைக்காட்சிகளுக்கு வந்து விடுகின்றன .

இது இப்படி இருக்க , அதிகார , பண , படை பலம் கொண்ட சிலர் தமிழ் சினிமாவில் நுழைந்து தொழிலை ஆக்கிரமித்து , திரையரங்குகளையும் ஆக்கிரமித்து விட்டனர் . தாங்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்களுக்காக மொத்தமாக திரையரங்குகளை தங்களுக்கென முடகிக் கொள்கின்றனர் . வித்தியாசமான சில படங்கள் எடுத்தால் கூட மக்களிடம் நேரடியாக போக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது . . இந்த நபர்களிடம் போய் , தான் எடுத்த படத்தை கொடுத்து “எப்படியாவது ரிலீஸ் செய்ய வைத்து நீங்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள் ” என்று கெஞ்சிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு . .இதனால் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் பெட்டியில் தூங்கி , கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு வட்டி ஏறி , பெட்டிக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கும் படங்கள் பல .

இது போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வரும்போது எல்லா தியேட்டர்களையும் அவர்கள் கைக்குப் போய்விடும் என்பதால் அதற்கு முன்பே கும்பல் கும்பலாக படங்களை வெளியிட வேண்டிய நிலைமை சிறிய தயாரிப்பாளர்களுக்கு ஏற்பச்டுகிறது .
cinema realse 2
Add caption
ஓட்டப் பந்தயம் வைத்தால் மைதானத்தில் வைக்கவேண்டும் . தி நகர் ரங்கநாதன் தெரு ஜனத்திரளுக்கு நடுவில் ஓட்டப் பந்தயம் வைத்தால் ? அந்தக் கதையாய் கும்பல் கும்பலாக ரிலீஸ் ஆகும்போது , ஓகே ரக படங்களும் காணாமல் போய் விடுகின்றன


‘என்ன இது .. இப்படி ஒரு அபத்தமான கட்டுரை . !
படம் ஓடாததற்கு இவைகளா காரணம் ? அன்று மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை . இன்று எத்தனையோ உண்டு , பெருகும் விலைவாசி . திருட்டு வீடியோ , ஆதிக்கம் . தொலைக்காட்சியில் மூழ்கும் மக்கள் இவை தானே திரைப்படங்கள் ஓடாததற்கு காரணம் . இந்தக் கட்டுரையில் என்னென்ன்னவோ சொல்கிறார்களே…..’

-என்று நினைப்பது மடமை .

இவைகளும் படங்கள் ஓடாததற்கு காரணம்தான் , மறுக்க வில்லை . ஆனால் நமக்கு முன்பே இவைகளை சந்தித்த ஹாலிவுட் பட உலகம் எப்படி சிக்கலில் இருந்து மீண்டது ?

உலகைக் கலக்கிய நேற்றைய ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கலக்கியிருக்கும் எக்ஸ்பெண்டபிள் போன்ற படங்கள் இங்கே ஏன் சாத்தியமில்லை ? அவர்களுக்கு எல்லாம் இல்லாமல் இங்கே இருப்பவர்களுக்கு மட்டும் தலையில் எந்தக் கொம்பு முளைத்திருக்கிறது ?
தமிழ் சினிமா ஏன் நிஜமான படைப்பாளிகளின் கையில் இருந்து வேகமாக நழுவுகிறது ?

இன்றைய கூவம் எப்படி இருக்கிறது ? இப்போது இதை சுத்தப் படுத்த பல நூறு கோடிகள் வேண்டுமென்று கூறப் படுகிறது . ஆனால் இதே கூவத்தில் ஒரு நாள் சுகமான படகுப் படகுப் போக்குவரத்து நடந்தது . எப்போது சாக்கடை கலக்க ஆரம்பித்ததோ அந்தக் காலத்திலேயே தடுத்து வேறு வழி செய்து தீர்வு கண்டிருந்தால் இன்று கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆகும் என்று திட்டம் போட்டு கனவு கண்டுகொண்டிருக்க தேவை இல்லை .

தமிழ் சினிமாவில் இப்போது தரம் அழித்தல் வேகமாகவே நடக்கிறது . கூவத்திலாவது இப்போது சாக்கடை ஓடுகிறது .

ஆனால் திரையுலக நிலைமை இப்படியே போனால் தமிழ் சினிமா இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகலாம் .

தமிழ் படங்கள் எனும் ஈசல் பூச்சிகளின் ஆயுள் இன்னும் குறையலாம்!

0 comments:

Post a Comment