Saturday 1 March 2014

இன்று தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் - மார்ச் 1- 1910



எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.

1934-ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944-ல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948-ல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959-ல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்.

தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.

0 comments:

Post a Comment