Friday 7 February 2014

சர்வ வல்லமை படைத்தவையா பாரம்பரிய மருத்துவம்..?



 சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத முறையை மூடநம்பிக்கைகளாக சித்தரிக்கின்றேனோ என புருவத்தை உயர்த்த வேண்டாம். கண்டிப்பாக அவ்வாறு கூற வரவில்லை. அவற்றைத் தாண்டி, அந்தக் கட்டுரையை ஏற்பதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன.

ஹோமியோபதி (பாரம்பரிய) மருத்துவமா?

இந்திய அரசாங்கத்தின் ஆயுள் துறையின் (Department of AYUSH) கீழ் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், உனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவமுறைகள் அடங்குகின்றன. இதன் அடிப்படையிலேயே கட்டுரையாளர் ஹோமியோபதியையும் பாரம்பரிய மருத்துவமாக எடுத்துக்கொள்கிறார் என்றாலும், ஹோமியோபதி முறையானது 1796 ஆம் ஆண்டு சாமுவேல் ஹேனிமேன் எனும் ஜெர்மானிய மருத்துவரால் 'கண்டுபிடிக்கப்பட்டது' என்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (like cures like) என்ற கோட்பாட்டின்படி இயங்கும் ஹோமியோபதியை அறிவியல் உலகம் முறையான மருத்துவமாக ஏற்கவில்லை. பல மேற்கத்திய நாடுகளில் ஹோமியோபதி ஒரு முறைப்படுத்தப்பட்ட மருத்துவமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருந்தா? வெறும் சர்க்கரை உருண்டையா?

ஹோமியோபதி மருந்தின் வீரியத் தன்மையை ஓர் உதாரணம் கொண்டு விளக்கினால் இவ்வாறு கூறலாம்: ஒரு பெரிய நீச்சல்குளத்தில் ஒருதுளி மருந்தை விட்டு கலக்கி, அந்த நீரில் இருந்து ஒரு துளி நீரை எடுத்து சர்க்கரை உருண்டையில் இட்டால், என்ன வீரியம் இருக்குமோ அதற்கு ஒப்பானதுதான் ஹோமியோபதி மருந்து. மேலும், அந்த ஒரு துளி மருந்து கலக்கப்பட்ட நீச்சல் குள நீரில் இருந்து ஒரு துளி நீரை எடுத்து அந்த நீச்சல் குளத்தைவிட பத்து மடங்கு பெரிய ஏரியில் கலக்கி, அதிலிருந்து ஒரு சொட்டு நீரை எடுத்து ஒரு சர்க்கரை உருண்டையில் கலக்கினால் கிடைக்கும் மருந்து, ஹோமியோபதி விதியின்படி, முந்தைய மருந்தைவிட பன்மடங்கு வீரியமிக்கதாக கருதப்படுகிறது. நீருக்கு ஞாபக சக்தி இருப்பதாகவும், மருந்தினை நீர்க்க செய்வதினால் 'ஆதார சக்தி' வலுப்பெறுவதாகவும் நம்பப்படுவதே இதற்கு காரணம். வேதியியல் விதிகளின்படி இவ்வாறு பலமுறை நீர்க்கச் செய்தபின் கிடைக்கும் நீரில் அசல் மருந்தின் ஓரிரு மூலக்கூறுகள் கூட மிஞ்சாது என நிறுவப்பட்டுள்ளன.

மருந்துப்போலிகளை (Placebo) விட ஹோமியோபதி மருந்துகள் அதிக நிவாரணங்களை தந்ததாக இதுவரை வெற்றிகரமாக நிறுவப்படவில்லை.

சிறப்பம்சங்கள்?


இம்மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது என்றபோதும், இவற்றுக்குரிய பொதுவான சிறப்புகள் பல: பக்கவிளைவுகள் அற்றவை; நோயின் விளைவுகளை மட்டும் குணப்படுத்தாமல் நோயை வேரோடு போக்கி முழுமையாகக் குணப்படுத்துபவை; அன்றாட உணவுகள், மூலிகைகள் மூலமாகவும் எளிய உடற்பயிற்சிகள் வழியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவை; உடலை மட்டுமோ உடலின் தனி உறுப்பை மட்டுமோ கவனத்தில் கொள்ளாமல், ஒவ்வோர் உறுப்பும் ஒட்டுமொத்த உடலின் பாகம் என்னும் முழுமை உணர்வைக் கொண்டவை; மனம்பற்றிய அறிதலையும் செய்து மருந்துகளைத் தேர்பவை.

மேற்கூறிய அம்சங்கள் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளனவா என்பது பெரும் சந்தேகமே. இன்னும் சொல்லப்போனால், பக்க விளைவுகள் அற்றவை, நோயை வேரோடு போக்கவல்லவை என்பதற்கெல்லாம் எதிரான ஆதாரங்கள் உள்ளன. 1990 மற்றும் 2004இல் நடந்த இருவேறு ஆய்வுகள் ஆயுர்வேத மருந்துகளில் 20 முதல் 40% மருந்துகளில் அபாய அளவுகளில் பாதரசமும் ஈயமும் (mercury and lead) இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டன. முடக்கு வாதம் (rhumetoid arthritis) மற்றும் இதய குழலி நோய் (cardiovascular disease) ஆகியவற்றிற்கு ஆயுர்வேத முறை பெரிய முன்னேற்றத்தை செய்யவில்லை என நிறுவப்பட்டுள்ளது.

மேலும், ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை சித்தாந்தங்களான தோஷ பிராகிருதி, பஞ்சகர்மா, ரசாயன முறை போன்றவை சிகிச்சை மற்றும் நிவாரணத்தில் ஆற்றும் பங்கினை அறிவியல் பூர்வமாக நிறுவ முயற்சிகள் பெரிதாக எடுக்கப்படவில்லை என்ற நியாயமான குற்றசாட்டும் உள்ளது.

சிக்குன் குனியா?

உலக சுகாதார அமைப்பு சிக்குன் குனியா நோய்க்கு மருத்துவம் ஏதும் இல்லை என்று கூறுகிறது. ஆனால், அந்தக் கட்டுரையிலோ சிக்குன் குனியா காய்ச்சலைக் குணமாக்கவும், குணமான பின் பல நாட்கள் நீடித்த மூட்டுவலி, சோர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் இம்மருத்துவ சிகிச்சைகள் பெரிதும் உதவி செய்தன என கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் அரசின் நிதி ஒதுக்கீட்டு அறிக்கையில், அரசும் இம்மருத்துவ முறைகளின் சிறப்பையும் அவை பயன்பட்ட விதத்தையும் வியந்து குறிப்பிட்டுள்ளது என கூறுகிறார்.

கொசுக்களை ஒழிப்பதில், சுகாதாரத்தை பேணுவதில் கவனம் செலுத்த இயலாத அரசு, அவசர கால மருத்துவ நிலைகளை சமாளிக்க பெரிய திட்டங்கள் இல்லாத அரசு மற்றும் சுகாதார துறைகள் சிக்குன் குனியா பரவும் காலங்களில் ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களின் பின் ஒளிந்துகொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

உலக சுகாதார அமைப்பின்படி சிக்குன் குனியா தானாக குணமடைந்து விடும் நோய் என்றும், சில நேரங்களில் மூட்டு வலிகள் நீடிக்கும் என்றும், மருத்துவம் வலிகளை போக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறது. நோய்க்கான மூலம் கொசுக்களிலிருந்து பரவும் RNA வகை வைரஸ்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹோமியோபதி உண்மையிலயே நோயை குணப்படுத்தியது என்றால் எவ்வாறு இந்த RNA வைரஸ்களை உடலில் ஹோமியோபதி மருந்துகள் கட்டுப்படுத்தின எனும் ஆய்வுகள் அரசின் வசம் உள்ளனவா? நோய் பரவல், அளிக்கப்பட சிகிச்சை மற்றும் நிவாரணம் பற்றிய விரிவான புள்ளிவிவரங்களாவது இருக்கின்றனவா என்பதும் கேள்விக்குரியது.

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை

சித்தா, ஆயுர்வேதா மற்றும் உனானி மருத்துவமுறைகளில் நன்மைகள் இருந்தாலும், மருந்து தயாரிக்கும் முறைகளில் அரசு முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் விநியோகம், விற்பனை ஆகியவற்றில் முறையான மேற்பார்வையை அமல்படுத்துவதிலும் பெரும் சவால்கள் உள்ளன. மேலும், மருத்துவமுறைகள் மற்றும் மருந்து தயாரித்தல் ஆகியவற்றில் முறையான அறிவியல் அடித்தளம் அமைப்பதிலும் பெரும் சவால்கள் உள்ளன. பாரம்பரிய மருத்துவ பாடத்திட்டங்களை வகுப்பதிலும், மருத்துவப்படிப்பை ஒழுங்குபடுத்துவதிலும் பெரும் குளறுபடிகள் நீடிக்கின்றன.

இறுதியாக, சித்த மருத்துவத்தின் 'உணவே மருந்து' எனும் கோட்பாட்டை விட சிறந்த உடல்நலம் பேணும் முறை இருக்கமுடியாது என்பது மறுப்பதற்கில்லை. ஆயுர்வேதத்திலும் உடல்நலத்தை பேணும் பல மூலிகை மற்றும் மருத்துவ முறைகள் இருக்கின்றன என்பதும் உண்மை. இவற்றோடு முறையான உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கு அடிப்படை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த மருத்துவ முறைகளில் மேற்கூறிய சிக்கல்கள் களையப்படாத வரையிலும், இம்முறைகளை முழுவதும் அறிவியல் பூர்வமாக அணுகாத வரையிலும், இவற்றை முழுமையான மாற்று மருத்துவ முறைகளாக முன்வைப்பதில் பெரும் அபாயம் இருக்கின்றன.

கேள்வி கேட்காமல் மக்கள் இம்முறைகளை பின்பற்றுவது அரசிற்கும் தன் கடமைகளில் இருந்து பின்வாங்க வசதியாக போய்விடும். பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தொடர்ந்து மந்தநிலையில் இயங்கவும் இது வாய்ப்பளித்து விடும். அதுவரை, உடல்நலம் சார்ந்த நமது பார்வையை முற்றிலுமாக ஆங்கில மருத்துவத்தில் இருந்து பாரம்பரிய முறைக்கு திருப்புவோம் என்பது போன்ற அறைகூவல்கள் விடுப்பதில் இருந்து தவிர்த்தல் நலம்.

0 comments:

Post a Comment