Wednesday, 26 February 2014

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌதம் மேனன்..!



தமிழ்த் திரையுலகில் அழகான காதல் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான கௌதம் வாசுதேவ் மேனன் இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இயந்திரவியல் பொறியாளாரான கௌதம் மேனன் மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகப் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததுடன் அடுத்தடுத்துப் படம் இயக்கும் வாய்ப்பினையும் பெற்றுத்தந்தது.

மின்னலே படத்திற்குப் பிறகு சூர்யா- ஜோதிகா நடித்த காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் மெஹா ஹிட்டாக அமைந்தது. பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு, சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்று மேலும் மேலும் உயரத்திற்குச் சென்றுகொண்டிருந்தார் கௌதம் மேனன்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை என்ற அளவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெரும் தோல்விகளையும் வழக்குகளையும் சந்தித்துவருகிறார். குறிப்பாக நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் மாபெரும் தோல்வி மற்றும் எதிர்மறை விமர்சனங்கள், நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் தோல்வி, சூர்யா நடிக்கவிருந்த துருவ நட்சத்திரம் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொண்டது, படத் தயாரிப்பாளர்களின் வழக்குகள் என அடி மேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு பிரச்னைகளுக்கும் நடுவில் தல அஜித் நடிக்கும் ஒரு படம் மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படம் என்று இரண்டு படங்களைக் கையில்
வைத்திருக்கிறார் கௌதம் மேனன். தல அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

இன்று பிறந்திருக்கும் இந்தப் புதிய வருடம் அவரது எல்லா கஷ்டங்களையும் போக்கி, வெற்றிப் பயணத்திற்கான பாதையை வகுத்துக் கொடுக்க  வாழ்த்துகிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கௌதம் மேனன் சார்.

0 comments:

Post a Comment