தமிழர்கள் மத்தியில் உண்ணும் உணவு முறையில் ஒரு நம்பிக்கை பழங்காலமாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும், மேற்கு நோக்கிச் சாப்பிட்டால் செல்வம் வளரும், வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது. என்பதே அந்த நம்பிக்கையாகும்.நம் உணவு முறையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்பதே போதுமானது. எனினும் பழக்கத்தை மாற்ற இயலாதவர்கள் மூன்று முறை உண்ணலாம். சாப்பிட்ட சாப்பாடு வெளிவரும் வண்ணம் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது. வயிற்றில் பாதியளவு உணவு, கால்பகுதி தண்ணீர், அடுத்த கால்பகுதி காற்றின் வருகைக்கு ஏற்றபடி வயிற்றில் இடம்விட்டுச் சாப்பிடுவதே மிதஉணவுப் பழக்கமாகும்.
அதிக அளவிற்கு உண்டால் நோய் வரும். ஆயுள் குறையும். எனவே எப்போதும் வயிறு புடைக்க, மூச்சு முட்ட உண்ணக்கூடாது. அளவிற்குக் குறைவாக உண்டாலும் உடலில் சக்தி குறையும். எனவே தேவையான அளவு அதாவது அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் உண்ண வேண்டும். நமக்குப் பசியே இல்லாத பொழுது கடனே என்று, மேலும் மேலும் உண்ணக்கூடாது. பசித்தே புசிக்க வேண்டும். பகலில் உணவு சிறப்பான விருந்தென்றால் இரவில் எதுவும் உண்ணக்கூடாது. மன உழைப்பு அதிகம் உள்ளவர்கள் அரிசி உணவு குறைவாகவும், கோதுமை, பால், வெண்ணெய், தேன், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, தக்காளிச்சாறு, ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, பசலைக்கீரை, புடலங்காய், பாகற்காய், ஆகிய ஊட்டச்சத்துக்களையும், புதிய காய்கறிகளையும் நிறைய உண்ண வேண்டும்.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, உணவு அதிகம் தேவை. இவர்கள் அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் உழைப்பின்றி நாற்காலியில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும். அதனால் நாள் முழுதும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் எளிதில் செரிக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒரு கப் அளவான சாதம் எடுத்துக் கொண்டு அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானது. இது மேலும் இவர்கள் கொழுப்பு சார்ந்த எண்ணெய் பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், நெய், தேங்காய் போன்றவற்றில் தயாரான உணவுப் பொருட்களைக் குறைத்தால் வீணாக உடலில் கூடும் கொழுப்புகளைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
மூன்று வேளையும் அதிக உணவுகளை உண்பவர்கள் தம் உடலில் தேவை இல்லாத நோய் வளரத் தானே காரணமாக அமைந்துவிடுகின்றனர். இவ்வாறு அதிகம் உண்பதால் இரைப்பையின் உறுதித்தன்மை குறைந்து தொப்பை உண்டாகிறது. வயது முதிர்ந்த பொழுது, பாதியளவே உண்பவர்கள் நீண்டகாலம் வாழ்கின்றனர்.
இதில் சர்க்கரை வியாதி உடையவர்கள் வயிறு புடைக்க உண்ணாமல் மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளைகளில் உண்ணலாம்.
எதைச் சாப்பிட்டு எதைத் தவிர்க்க வேண்டும்?
1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.
8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.
16.மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
அசைவம் உண்போர் கவனத்திற்கு . . .
அசைவம் பல வழிகளில் மனிதனுக்குக் கெடுதல் செய்கிறது. “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி, எல்லா உயிருந்தொழும்” என்கிறார் வள்ளுவர்.
1.அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் இவ்வுணவு நமக்குச் செரிப்பதற்கு, நம் குடலானது இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும்.
2.அசைவ உணவு நம் குடலில் செரிமானமாகாத பட்சத்தில் இவ்வுணவு புளித்துப் பல கிருமிகளை உண்டாக்கும். அதனால் உடலுக்குக் கெடுதியாகும். இவை மேலும் பல நோய்களை உண்டாக்கும். ஆனால் மனிதக்குடல் நீளமாய் இருப்பதால் கழிவுப் பொருட்கள் எளிதில் வெளியாகாமல் நீண்ட நேரம் குடலில் தங்கி நச்சுக் கிருமிகளைத் தோற்றுவிக்கிறது. இவை ரத்தத்தில் கலந்து பல நோய்களைத் தோற்றுவிக்கிறது.
3.அசைவ உணவில் கொடிய புளிப்பு நஞ்சு கலந்துள்ளது. இதனால் மார்பு வலி, வயிற்று வலி, நீரிழிவு ஆகியவை உண்டாகின்றன.
4.சில நேரங்களில் இறந்த விலங்கின் கறியை உண்ணுவதால் விசக்கிருமிகள் தொற்றும் வாய்ப்பும் உள்ளது.
5.இரண்டு, மூன்று நாட்கள் கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் சேர வாய்ப்புள்ளது.
6.அசைவ உணவு உண்பதால் இயற்கையான மன உணர்வுகள் மாறுகின்றன. குறிப்பாக நல்ல உணர்வுகள் குறையத் தொடங்கும்.
0 comments:
Post a Comment