Tuesday, 11 February 2014

தமிழ்நாட்டிலேயே மிக பழைமையான இரண்டு கோவில்கள்..!




1, சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில், மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் வட்டம், காஞ்சி மாவட்டம்.

2, வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.


1, சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில், மாமல்லபுரம்...!

இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலாகும். இது சென்னைக்கு அருகேயுள்ள புகழ்பெற்ற மாமல்லபுரத்திலிருந்து சில கல் (5 கிமீ) தொலைவில் சாளுவன்குப்பம் என்ற இடத்தில் உள்ளது. இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது.

இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

பெரும்பாலான கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில்கள் அமைக்கப்பட வேண்டிய ஆகமநெறிகளை விளக்கும் "சிற்ப சாஸ்திரங்கள்" எழுதப்படுவதற்கு முன்னமேயே கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது. தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவ காலத்துக்கு முந்தைய கோவில்கள் இரண்டில் இக்கோவில் ஒன்று. மற்றொன்று வேப்பத்தூரில் அமைந்துள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலாகும்.

2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் அல்லது ஆழிப் பேரலைகளால் இந்தச் செங்கல் கோவில் அழிந்து போயிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் கருத்து. 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் எழுந்த ஆழிப் பேரலைகள் குறைந்த பின்னர் தொல்லியல் ஆய்வாளர்கள் சுனாமி அலைகளால் வெளிப்பட்ட பாறைகளில் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தனர். சோழ மன்னர்கள் முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுகள் திருவீழ்ச்சில் (தற்போதைய சாளுவன்குப்பம்) என்ற இடத்தில் அமைந்த முருகன் கோவிலைப் பற்றிக் குறிப்பிட்டன.

2, வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர்...!

வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர் பெருமாளுக்குரிய கோவிலாகும். இக்கோவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள வேப்பத்தூர் கிராமத்தில் உள்ளது. கற்கள் மற்றும் சாந்து கொண்டு அமைக்கப்பட்ட இந்த விஷ்ணு கோவில் கிபி 850 களில் பல்லவ மன்னர்களாலும் பின்னர் சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனாலும் அதற்குப் பிறகு 1520 களில் கிருஷ்ணதேவராயராலும் கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. செங்கல்லால் ஆன பழைய கோவிலுக்கு மேல் இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில், பல்லவர் காலத்துக்கும் முந்தைய கோவில்களாக அறியப்பட்டுள்ள மிகவும் பழமையான இரண்டு கோவில்களில் இக்கோவில் ஒன்றாகும்.

இந்த கோவில் பற்றிய குறிப்புகள் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் உள்ளன.
தரையில் இருந்து, 4 மீ., உயரத்தில், மூன்று அடுக்குகளாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம், இன்னும் சிதைந்த நிலையில், காட்சி
அளிக்கிறது.

இன்று ஒற்றைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது. தற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பார்க்கலாம். ஆதியில் ஒரு பௌத்த ஆலயமாக இருந்து பின்னர் வடிவம் மாறிய கோயிலாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. ஆய்வாளர்களின் தொடர்ந்து ஆய்வு இக்கோயிலின் ஆரம்ப நிலையைக் கண்டறிய உதவும்.

0 comments:

Post a Comment