மதுரையில் ஜமீன்தாரான பிரபுவின் தங்கை சீதா 20 வருடத்துக்கு முன், முஸ்லீமான சுமனை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் பிரபு, சுமனின் ஒரு காலை வெட்டி விடுகிறார். இதனால், பிரபுவை பழிவாங்க நினைக்கும் சுமன் தன் மனைவிக்கு சேரவேண்டிய சொத்தை தரும்படி பிரபு மீது வழக்கு தொடருகிறார்.
20 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சுமன் வெற்றி பெறுகிறார். அதன்படி சீதாவுக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரபு அவரிடம் ஒப்படைக்கிறார். எப்படியாவது தன் அண்ணன் குடும்பமும், தன் குடும்பமும் ஒன்று சேர்ந்துவிடும் என்று எண்ணி வாழ்ந்து வந்த சீதாவுக்கு, இந்த வழக்கின் வெற்றி வேதனையைத் தருகிறது.
சீதா தன்னுடைய மகனான விஷ்ணு மஞ்சுவிடம் இதுபற்றி சொல்லி வருத்தப்படுகிறார். தனது ஆசையே அண்ணன் குடும்பத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்றும் சொல்கிறார். இதனால் நாயகன் விஷ்ணு மஞ்சு, தன்னுடைய அம்மாவையும், மாமாவையும் சேர்த்து வைக்க களம் இறங்குகிறார்.
வழக்கு தோல்வியடைந்த வருத்தத்தில் இருக்கும் பிரபுவுக்கு வீட்டில் யாகம் வளர்த்தால் நன்மை கூடும் என்று அறிவுரை கூறுகின்றனர். அதற்கு ஏற்பாடு செய்யும்படி பிரபு தன்னுடைய மேனேஜரான பிரம்மானந்தத்திடம் கட்டளையிடுகிறார். இவரோ, முஸ்லீமான நாயகன் விஷ்ணு மஞ்சுவை தவறுதலாக புரோகிதர் என்று வீட்டுக்கு வரவழைக்கிறார். தனது மாமா வீட்டுக்குள் நுழைய இது ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணி, விஷ்ணு, பிரபுவின் வீட்டுக்குள் நுழைகிறார்.
அங்கு பிரபுவின் மகளான ஹன்சிகா, நாயகனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இருந்தும் தன் காதலை நாயகனிடம் சொல்லாமல் இருந்து வருகிறார். ஹன்சிகாவுக்கு நாயகன் தனது முறைமாமன் என்று தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார்.
ஒருகட்டத்தில் புரோகிதரான விஷ்ணு மஞ்சுவை காதலிப்பதாகவும் அவனை எனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் எனவும் தனது தந்தை பிரபுவிடம் ஹன்சிகா கூறுகிறாள்.
இதைக்கேட்ட பிரபு ஹன்சிகா-விஷ்ணு மஞ்சு காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாரா? நாயகன் தனது தங்கை மகன் என்பதை அறிந்தாரா? தன் தாயின் ஆசையை நாயகன் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் விஷ்ணு மஞ்சு காதல், சண்டை, நகைச்சுவை, நடனம் என எல்லாவற்றையும் நிறைவாக செய்திருக்கிறார். ஹன்சிகா மொத்வானி தனது துறுதுறு நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார்.
நாயகனை வலிய வலிய காதல் செய்யும் காட்சிகள் சிறப்பு. பிரபு, சுமன், சீதா, பிரம்மானந்தம் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் ஒரு அழகான குடும்பக் கதையை படமாக்கிய இயக்குனர் நாகேஸ்வர ரெட்டியை பாராட்டலாம். திரைக்கதையில் பளிச்சிடுகிறார். படத்தை ஆரம்பம் முதல் கடைசிவரை தொய்வு இல்லாமல் கொண்டு போவது சிறப்பு.
தெலுங்கில் இருந்து டப்பிங் ஆகிய படம் என்பதால், சில கதாபாத்திரங்களின் வசனங்கள் உச்சரிப்பு புரியவில்லை. குறிப்பாக, பிரபுவுக்கு டப்பிங் பேசியவர், பிரபுவின் குரலை சீர்குலைத்திருக்கிறார்.
யுவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எஸ்.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் கூடுதல் பலம். குறிப்பாக, பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘நாங்கெல்லாம் அப்பவே அப்படி’ குடும்ப சித்திரம்.
0 comments:
Post a Comment