Tuesday, 4 February 2014

வெளிநாட்டில் படிக்கும்போது பணி - விதிமுறைகள் குறித்த ஒர் ரிப்போர்ட்..!



வெளிநாடுகளில் படிக்கும்போது, தங்களின் செலவினங்களுக்காக படிக்கும் நாட்டிலேயே ஊதியத்திற்காக பணிபுரிவது ஒரு வழக்கமான விஷயம். ஆனால், எந்தெந்த நாடுகளில் என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்த தெளிவு வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும், வெளிநாட்டு மாணவர்கள், படிக்கும்போது பணிபுரிவது தொடர்பான வேறுபட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றைப் பற்றிய அறிவை, மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பே தெரிந்துகொண்டால், எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரை அதற்கான விபரங்களைத் தருகிறது.

சிங்கப்பூர்

இந்நாட்டில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், Employment of Foreign Manpower -ன் கீழ், work pass பெறாமல், படிக்கும்போது அல்லது விடுமுறையின்போது, பணி செய்ய அனுமதி இல்லை. மாணவர்கள் 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து, விடுமுறையிலும் இருந்தால், சில பள்ளிகளுக்கு work pass பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பிரிட்டன்

இளநிலைப் படிப்பு மற்றும் அதற்கும் மேற்பட்ட படிப்புகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்கள், term time -ல் வாரத்திற்கு 20 மணி நேரமும், விடுமுறை நாட்களில் முழு நேரமும் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். அதேசமயம், இளநிலைப் படிப்பிற்கு கீழே படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், term time -ல், வாரத்திற்கு 10 நாட்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரான்ஸ்

ஒரு வெளிநாட்டு மாணவர், தேசிய மாணவர் சுகாதார திட்டத்தில் இணைந்திருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்கும் வரை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பணியாற்றலாம். அதேசமயம், ஐரோப்பிய யூனியன் அமைப்பை சாராத நாடுகளின் குடிமகனாக இருக்கும் ஒரு வெளிநாட்டு மாணவர், செல்லத்தக்க ரெசிடென்சி பெர்மிட் வைத்திருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டு மாணவர், ஆண்டிற்கு 964 மணி நேரங்கள் வேலை செய்வதற்கு பிரான்ஸ் நாட்டு சட்டங்கள் அனுமதியளிக்கின்றன.

ஜெர்மனி

ஐரோப்பிய யூனியனை சாராத வெளிநாட்டு மாணவர்கள், ஒரு ஆண்டிற்கு, 120 முழுநாட்கள் அல்லது 240 அரை நாட்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட ஜெர்மன் அதிகாரிகளிடமிருந்து அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், மேலே குறிப்பிட்ட வரம்பை மீறி பணியாற்ற விரும்பினால், அதன்பொருட்டு, வேலைவாய்ப்பு ஏஜென்சி மற்றும் வெளிவிவகாரத் துறை ஆகிவற்றிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும், ஐரோப்பிய யூனியனை சாராத வெளிநாட்டு மாணவர்கள், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது freelance பணியாளராக இருக்கவோ அனுமதியில்லை. அதேசமயம், கல்வி தொடர்பாகவோ அல்லது மாணவர் தேவை தொடர்பாகவோ இருந்தால், கால வரம்பின்றி அப்பணியை மேற்கொள்ளலாம்.

அயர்லாந்து

ஐரோப்பிய பொருளாதார மண்டலத்திற்கு(EEA) வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், கல்வி மற்றும் அறிவியல் அமைச்சரின் அங்கீகாரத்தை பெறத்தக்க வகையிலான, குறைந்தபட்சம் ஒரு வருட கால அளவைக் கொண்ட முழுநேர படிப்பை மேற்கொள்ளும்போது, அவர்கள் கேசுவல் பணி வாய்ப்பை பெறலாம்.

கேசுவல் பணி வாய்ப்பு என்பது, ஒரு வாரத்திற்கு பகுதிநேர முறையில் 20 மணிநேரங்கள் வரையும், சாதாரண கல்லூரி விடுமுறை நாட்களின்போது முழுநேரமும் பணி செய்வதாகும்.

இத்தாலி

ஒரு சர்வதேச மாணவர் கல்வி காரணங்களுக்காக விசா வைத்திருந்து, இத்தாலியில் 90 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய தேவையிருந்தால், அவர் ரெசிடென்ஸ் பர்மிட் கோர வேண்டும்.

ரெசிடென்ஸ் பர்மிட் வைத்திருக்கும் எந்த வெளிநாட்டு மாணவரும், இத்தாலிய குடிமகனைப் போலவே, வாரத்திற்கு 20 மணிநேரங்கள் மிகாமல், பகுதிநேர பணியை மேற்கொள்ளலாம்.

சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய யூனியன் மற்றும் EFTA நாடுகளை சாராத வெளிநாட்டு மாணவர்கள், வாரத்திற்கு அதிகபட்சம் 15 மணிநேரங்கள் வரை, பகுதிநேர பணி வாய்ப்பை பெற முடியும். ஆனால், அந்நாட்டில் வந்து குடியேறி 6 மாதங்கள் கழிந்த பிறகே இந்த உரிமையைப் பெற முடியும்.

மேலும், ஒருவர், முழுநேர மாணவர் என்ற நிலையை தக்கவைப்பதோடு, அவருடைய கல்வியில் தொடர்ச்சியான மேம்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம், ஒரு வெளிநாட்டுப் பல்கலையிலிருந்து இளநிலைப் பட்டம் பெற்று, சுவிட்சர்லாந்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொண்டு, தங்களின் சுவிஸ் கல்வி நிறுவனத்திற்காக பணிபுரியும் ஒரு மாணவர், மேற்கண்டபடி, 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

அமெரிக்கா

F1 விசா வைத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், முதலாமாண்டு படிக்கையில், கல்வி நிறுவனத்திற்கு வெளியில் சென்று பணிசெய்ய அனுமதியில்லை. அதேசமயம், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் அலுவலர்களிடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றிருந்தால் தடையில்லை.

சில குறிப்பிட்ட சூழல்களின் கீழ், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்(USCIS), ஒரு வருட படிப்பிற்கு பிறகு, மாணவர்கள் வெளியே சென்று பணிசெய்யும் அனுமதியை வழங்குகிறது. அதேசமயம், கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளேயே ஒருவர் பணிசெய்ய USCIS அனுமதி தேவையில்லை. இதன்மூலம் ஒருவர், ரெகுலர் நாட்களில் வாரத்திற்கு 20 மணி நேரங்களும், நீட்டிக்கப்பட்ட விடுமுறை நாட்கள், இடைவெளிகள் மற்றும் கோடைகால நாட்களின்போது, வாரத்திற்கு 40 மணிநேரங்கள் வரையும் பணிபுரியலாம்.

ஆஸ்திரேலியா

இந்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு வெளிநாட்டு மாணவர், ரெகுலர் படிப்பின்போது, ஒவ்வொரு 15 நாட்களிலும், 40 மணிநேரங்கள் பணிபுரியலாம். அதேசமயம், இடைவெளிகள் மற்றும் விடுமுறை நாட்களில், கால வரம்பின்றி பணியாற்றலாம்.

அதேசமயம், முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அதேபோல், ஊதியமின்றி நன்கொடை தொடர்பான தன்னார்வ பணிகளை மேற்கொள்வோருக்கும், படிப்பின் ஒரு பதிவுசெய்யப்பட்ட பகுதியாக பணி இருக்கின்ற படிப்பை மேற்கொள்வோருக்கும் எந்த தடையும் இல்லை.

கனடா

பொது பல்கலைகள், கம்யூனிட்டி கல்லூரிகள், CEGEP கல்வி நிறுவனங்கள், பொது நிதியளிக்கப்படும் வணிக அல்லது தொழில்நுட்ப பள்ளி அல்லது பட்டம் வழங்கும் வகையில் அனுமதியளிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வொர்க் பர்மிட் இல்லாமல், கல்வி நிறுவன வளாகங்களில் பணியாற்றலாம்.

குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திற்காகவோ அல்லது அந்த கல்வி நிறுவன வளாகத்தில் இயங்கும் இதர வணிக நிறுவனத்திற்காகவோ பணியாற்றலாம். அதேசமயம், வளாகத்திற்கு வெளியே என்று வரும்போது, ரெகுலர் நாட்களில் வாரத்திற்கு 20 மணி நேரங்கள் மற்றும் கோடைகால மற்றும் குளிர்கால விடுமுறை நாட்கள் மற்றும் வசந்தகால இடைவெளிகள் ஆகியவற்றின்போது, முழுநேர பணியையும் மேற்கொள்ளலாம்.

நியூசிலாந்து

இந்நாட்டைப் பொறுத்தவரை, சர்வதேச மாணவர்களுக்கு, படிக்கும்போது பணியாற்றும் விஷயத்தில், படிப்பின் வகைப்பாட்டைப் பொறுத்து, பல்வேறான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அகடமிக் வருடத்தின்போது மற்றும் அகடமிக் ஆண்டில் வரும் விடுமுறை நாட்களில், பணிவாய்ப்பு offer இல்லாமல், வாரத்திற்கு 20 மணிநேரங்கள் வரை பணிபுரிய கீழ்கண்ட வகைப்பாடுகள் உள்ளன. அவை,

* நியூசிலாந்தின் தனியார் பயிற்சி கல்வி நிறுவனம் அல்லது மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களில், குறைந்தபட்சம் 2 வருட காலஅளவு கொண்ட முழுநேர படிப்பை மேற்கொள்வோர்.

* தனியார் பயிற்சி கல்வி நிறுவனம் அல்லது மூன்றாம் நிலை நிறுவனத்தில், குறைந்தபட்சம் 6 மாத காளஅளவில் முழுநேர படிப்பை மேற்கொண்டிருப்போர். அதேசமயம், அவர்கள் விதிமுறைகள் தொடர்பாக, விசா அதிகாரியை திருப்தி செய்திருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment