தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்குப் பிறகு பெண்கள் பாதுகாப்புச் சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது கிண்டல், கேலி போன்றவற்றிற்கே கடும் தண்டனை உண்டு. மும்பை போன்ற இடங்களில் பெண்கள் கையில் கத்தி கொடுக்கப்படுவதாகச் செய்திகள் வந்தன. ஆனால், தவறான எண்ணத்துடன் தங்களிடம் வருபவர்களை எளிதாகச் சமாளிக்க நல்லதொரு ஆயுதம் சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு வந்துவிட்டது. அது பெப்பர் ஸ்பிரே.
டெல்லி, ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் பெரும்பாலான பெண்களின் கையில் இது இருக்கிறது. கத்தி பயன்படுத்தும்போதுகூட பெண்களுக்கும் ஆபத்து நேரிடலாம். ஆனால், இதில் அந்த மாதிரி பயப்படத் தேவையில்லை. ஹேண்ட் பேக்கில் வைக்குமளவுக்குக் கிடைக்கிற இதைக் கையாள்வதும் எளிது. தாக்குதலில் எதிராளி இறந்து விடுவாரோ என்கிற அச்சம் தேவையில்லை. ஏனெனில், இந்த ஸ்பிரேயில் இருப்பது அமிலமோ, வேதிப்பொருள்களின் கலவையோ அல்ல. வெறும் மிளகுத்தூளும் மிளகாய்த் தூளும்தான்.
சென்னை போன்ற நகரங்களில் முன்னணி மருந்துக்கடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளில் இது கிடைக்கிறது. வெளியிடங்களில் தவறான நோக்கத்துடன் தங்களை ஒருவர் நெருங்குகிறார் என்றால், சம்பந்தப்பட்டவர் செயல்படத் தொடங்கும் முன் நீங்கள் முந்திக் கொள்ள வேண்டும். முகத்தில் இந்த ஸ்பிரேயை அடிப்பது நல்லது.
அடுத்த நொடியே செயல்பட முடியாமல் போவதால், ஸ்பாட்டிலேயே அவர் பிடிபட இது உதவும். ஸ்பிரே பயன்படுத்தி முடிந்ததும் உடனடியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள். அல்லது கூட்டத்தைக் கூட்டி விடுங்கள்.மேலும் பெண்கள் பாதுகாப்புக்கென்றே சமீபத்தில் மத்திய அரசு பிரத்யேக எண்ணை ஒதுக்கியுள்ளது. சிக்கலான நேரங்களில் 181 என்ற அந்த எண்ணை அழைக்கவும் மறக்காதீர்கள்.
0 comments:
Post a Comment