Thursday 20 February 2014

பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன் – பாலா



பாலு மகேந்திரா போன்ற ஒருவரிடம் மட்டும் நான் சிக்கியிருக்காவிட்டால், நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன் என்று இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

தன்னை பாலு மகேந்திராவின் மூத்த பிள்ளை என்று எப்போதும் கூறுபவர் பாலா. பாலு மகேந்திராவும் கூட அப்படித்தான் கூறிப் பெருமை கொள்வார்.

இந்த நிலையில் பாலுமகேந்திரா குறித்த தனது நினைவுகளை ஆனந்த விகடன் மூலமாக தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பாலா – உருக்கமாக.

ஞானத் தகப்பன் விடைபெற்றுவிட்டான். ´அப்புக்குட்டி அப்புக்குட்டி´ எனக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குருநாதன்.

பாலுமகேந்திரா என்கிற ஒருவர் மட்டும் இல்லையென்றால், நானெல்லாம் 10, 15 வருடங்களுக்கு முன்பே செத்துப்போயிருப்பேன்.

மூர்க்கனாகத் திரிந்தவனை மனுஷனாக்கியதே அவர்தான். தன் வீட்டில் தங்கவைத்து, கெட்டவை திருத்தி, நல்லவை காட்டி, சோறு போட்டுத் தொழில் கற்றுக்கொடுத்தவர்.

25 வருட உறவு இது.

எனக்கும் அவருக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டைதான். ´ஆறு மாசத்துக்கு ஒரு சண்டை போடலேன்னா, உனக்குத் தூக்கம் வராதுல்லடா´ என்பார்.

அகிலாம்மா என் தாய். எங்கள் சண்டைக்குள் ஒரு நாளும் வரமாட்டார். சாருடன் முறைத்துக்கொண்டு திரிந்தாலும் அகிலாம்மாவைப் பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியாது.

ஐந்து படங்கள் சாரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்திருக்கிறேன்.

அவருக்கே தெரியாமல் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தவன் நான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடைசி அசிஸ்டென்ட். படிப்படியாக படம் படமாக வளர்த்து இணை இயக்குநர் ஆக்கி அழகு பார்த்தவர்

படம் பண்ண விரும்பிக் கிளம்பியபோதுகூட, விட்டுவிட மனம் இல்லாமல் பிடிவாதம் பிடித்தவர்.
என்று குறிப்பிட்டார் இயக்குனர் பாலா.

0 comments:

Post a Comment