ஆஞ்சநேய பக்தரான ஹீரோவுக்கு பூக்கும் காதல், தடை தாண்டி வெல்லும் கதை. காதல் திருமணம் செய்த அக்கா சாயா சிங், மாமாவிடம் கோபம் கொண்டு சொந்த வீட்டுக்கு வருகிறார். மாமாவை சமாதானம் செய்ய, கோவை செல்கிறார் ஹீரோ.
அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும் நயன்தாராவின் அழகில் மயங்க, அங்கேயே டேரா போடுகிறார். விரட்டி விரட்டி காதலிக்கிறார். பிறகு முளைக்கிறது புதுப் புது சிக்கல்கள். நண்பன் உதவியுடன் காதலையும் காதலியையும் ஹீரோ எப்படி ஜெயிக்கிறார் என்பதை பாதி காமெடி மீதி சென்டிமென்ட் என சொல்லியிருக்கிறார்கள்.
ஆஞ்சநேய பக்தராக உதயநிதி. அப்படியென்ன அழகி என்று நயன்தாராவை பார்த்ததும் காதலில் விழுவது, அவருக்காகப் பின் தொடர்வது, அப்பாவுக்கு பயப்படுவது என உதயநிதி நடிப்பில் நல்ல முன்னேற்றம். நடனத்திலும் அசத்துகிறார். சந்தானத்துடன் காமெடி ஏரியாவிலும் கலக்குகிறார். படத்தை மொத்தமாக ஆக்கிரமித்து கொள்கிறது நயன்தாராவின் அழகு. அவரது சின்ன அசைவுகள் கூட ரசிக்க வைக்கிறது. மோதலில் ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் காதலுக்குள் விழும் அவரது கேரக்டரைசேஷன் அருமை.
தனது நண்பன் சுந்தர் பற்றி ஹீரோ சொன்னதை நம்பாமல் பேசிவிட்டு பிறகு அதை நினைத்து உருகும்போது பீல் பண்ண வைக்கிறார். நடிக்க அதிக வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்தவரை சரியாகச் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் அவருக்கான காஸ்ட்யூம்ஸ் ரகளையாக இருக்கிறது. இந்தப் படத்திலும் ஹீரோவுக்கு நண்பனாக சந்தானம்.
அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும், சிதறுகிறது சிரிப்பு. நடை சாத்துன பிறகு கோயிலுக்கு போகக் கூப்பிடறதும் கடை சாத்துன பிறகு கட்டிங் அடிக்க கூப்பிடறதும் உன் வழக்கம்டா, புண்ணாக்கு வேணுன்னா எருமையா இருக்கணும். பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கணும் என்பது போன்ற சந்தானம் பிராண்ட் காமெடி ரசிக்க வைக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்காவாக சாயா சிங். அந்தப் பெண்ணை பார்த்திராதடா. காதலிச்சிராதடா என்று உசுப்பேற்றியே காதலிக்கத் தூண்டும் கேரக்டர். அவருடைய கணவனாக வரும் பரத் ரெட்டி, அம்மாவாக வரும் சரண்யா, அப்பா நரேன், நண்பன் முருகதாஸ், கொடூரமாக பார்க்கும் சுந்தர் ராமு, ஜெயப்பிரகாஷ், நயன்தாராவின் தோழியாக வருபவர் என அனைவரும் சிறப்பான தேர்வு. சின்ன சின்ன இடங்களில் கவனிக்க வைக்கும் இயக்குனர், திரைக்கதையை இன்னும் அழுத்தமாக அமைத்திருக்கலாம். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பாடல் காட்சிகளில் வெளிநாட்டு குளிர்ச்சியைத் தருகிறது பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு.
0 comments:
Post a Comment