Tuesday 4 March 2014

உயிர் கொல்லும் மருத்துவமனைகள்..!




அண்மையில் 25 ஆண்டை பூர்த்தி செய்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அஞ்சல் துறை, தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியிருக்கிறது. அதை வெளியிட்ட தமிழக துணை முதல்வர், அம்மருத்துவமனை தமிழகத்தின் சிறப்புகளுள் ஒன்றாக மிளிர்வதாகப் பாராட்டியும் இருக்கிறார்.


நல்லது... நூற்றாண்டு கண்ட அரசு மருத்துவமனைகளை நினைக்கும் போதே மக்கள் மனதில் எழும் அருவெறுப்பும், அவலமும் வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவலத்தின் உச்சம் அரசு மருத்துவமனைகள். இதை நான் புனைந்துரைக்கவில்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.கடந்த நவ., 3ம் தேதி, "தினமலர்' நாளிதழில் ம.மீனாட்சி, நங்கைநல்லூரில் இருந்து எழுதிய புகார் கடிதம், பிரசுரமாகி இருக்கிறது.

அதன் சாராம்சம்: மீனாட்சியின் 13 வயது பேத்தி, சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில், பன்றிக் காய்ச்சல் நோய் கண்டு சேர்க்கப்பட்டிருக்கிறாள். மருந்தில் ஜுரம் குறைந்தது. ஆனால், மீண்டும் காய்ச்சல் வந்தது. மருத்துவர், சிறுநீர்த் தொற்று என சந்தேகம் கொள்கிறார்.


"இங்குள்ள கழிவறைகளை உபயோகித்தால் சிறுநீர்த் தொற்று எப்படி வராமல் இருக்கும்?' என்று விவரமாகக் கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. நம்பாத அந்த மருத்துவர், கழிப்பறைக்குச் சென்று பார்த்து அதிர்ந்திருக்கிறார். அப்பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு உடனே, "டிஸ்சார்ஜ்' செய்தார்.

வீட்டுக்கு வந்த பின், தனியாரிடம் மருத்துவம் செய்து கொண்ட போது, அவளுக்கு, "டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிந்தது; அரசு மருத்துவமனை தந்த அன்புப் பரிசு அது!

காரணம் என்னவெனில், அங்குள்ள மருத்துவர்களோடு, 24 மணி நேரம் பணியில் பெருச்சாளிகள், பூனைகள், நாய்கள் மற்றும் ஓய்வறியா கொசுக் கூட்டம், பன்றிக் காய்ச்சல் வார்டிலேயே வாசம் செய்கின்றன என்கிறார் கடித வாசகர்.இதை, "சுத்தி செய்யும் தொழிலாளர் பணிப் பிரச்னை' என்று, அதிகாரிகள் மிகச் சுலபமாக பைல் எழுதி முடிப்பர்.


தொழிலாளிகளுக்கு சரிவர வேலை பங்கீடு செய்யாததும், நான்கு பேர் பணியாற்றும் இடத்தில் ஒரு நபரை நியமிப்பதும், ஒரு நபருக்கு இரண்டு மூன்று இடங்களில் பணி செய்யும் ஆணை விடுப்பதும் போல, பல நிர்வாகக் காரணங்களால் நேரும் பிரச்னை இது. இதைச் சுலபமாக நிவர்த்தி செய்ய முடியும்.ஆனால், அரசு மருத்துவமனைகளின் பிரச்னை பல்வேறு பரிமாணம் கொண்டது. மூன்று தளங்களில் இதைப் பிரித்துப் பரிசீலிக்க வேண்டும்.


முதலில், அரசு மருத்துவமனைகளைப் பயன் கொள்வதும் மக்கள். இரண்டாவது அங்கு பணிபுரியும் மருத்துவர்கள். மூன்றாவது மருத்துவமனைகளை ஆளும் நிர்வாகம் அல்லது அதிகார வர்க்கம்.சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய அரசு போட்ட ஒரே கோடு, வறுமைக் கோடு. தான் போட்ட கோட்டைத் தானே அழிக்க விரும்பவில்லை அது.

அந்த வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களே பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை, அங்கு அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம், அலட்சியம் அனைத்தையும் சகித்துக் கொண்டு, மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர்.மருத்துவர்கள், இந்த ஏழை மக்கள் பால் காட்டும் அக்கறை அல்லது அக்கறையின்மை, அளிக்கப்படும் மருந்தின் தரம் பற்றி எதுவும் அவர்கள் அறியாதவை.


தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வசதி இல்லாத காரணத்தாலே, அவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர்; அவைகளின் மேல் உள்ள மதிப்பினால் இல்லை.மருத்துவர்களாக வந்து அமர்கிறவர்கள், அவர்கள் சந்திக்கும் நோயாளிகளுக்கு முடிந்தவரை நிவாரணம் தரவே எண்ணுகின்றனர்; பணி புரிகின்றனர்.

அவர்களை எளிதில் சோர்வடையச் செய்யும் விதமாக, மருத்துவமனைகளில் மருந்திருப்பதில்லை, சரியான மருந்துகள், "ஸ்டாக்' வைக்கப்படுவதில்லை. இருந்தால் அவைகளை வினியோகிக்கும் ஊழியர்கள் இல்லை.

பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த உயர் விலைக் கருவிகள் இருக்கவே செய்கின்றன. என்றாலும் அவை பழுதுபட்டிருக்கின்றன அல்லது அவைகளை இயக்கும் துறை சார்ந்த நிபுணர்கள் அல்லது உதவியாளர்கள் இல்லை.புது நியமனம் பெறுவதில் காலவிரயம் ஆகிறது.


நியமனமாகி வரும் போது, கருவி, வேலை செய்யாமலேயே பழுதடைந்து பயன்படும் நிலையில் இருப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், விரக்தியும், சிடுசிடுப்பும் அடைந்து, தங்கள் பணியை ஒப்பேற்றுகின்றனர். தங்கள் விருப்பத்துக்கும், அறிவுக்கும் ஏற்ப, தம் "கிளினிக்'களில் பணிபுரிந்து அமைதியடைகின்றனர்.

"கிளினிக்குகள்' மருத்துவர்களை சீமான்களாக்கி விடுகின்றன.அரசு மருத்துவமனைகளின் நடைமுறை பற்றி எதுவும் அறியாதவர்கள் பல சமயங்களில் அதிகாரத்துக்கு வருகிற அபாயங்கள் நிகழ்வதுண்டு.சமூக மனோதத்துவம் வேறு; மருத்துவமனைகளின் மனோ நிலை வேறு. இந்த நுட்பம் அறியாதவர்களே, பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை நடத்தும் அதிகாரிகளாக வந்துவிடுகின்றனர்

0 comments:

Post a Comment