'கோச்சடையான்’ படத்துக்காகத் தான் எழுதிய பாடல் வரிகளை வாசிக்கக் கொடுக்கிறார் 'கவிப்பேரரசு’ வைரமுத்து. வாசித்து முடித்து நிமிர்ந்ததும், 'எப்படி இருக்கு?’ என்று ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார். எத்தனை உயரம் தொட்டாலும், அந்த ஆர்வமும் துடிப்பும் வைரமுத்து ஸ்பெஷல்!
''கோச்சடையான் என்கிற படைத்தலைவன், ஒரு பெரிய போரில் வெற்றிவாகை சூடித் திரும்புகிறான். அவனுக்குப் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவு நல்ல பெயர். அவன் வீரன். அதே நேரத்தில் ஞானம் நிறைந்தவன். மக்கள் அவனைப் புகழ்ந்து பாடுகிறார்கள். நடுநடுவே கோச்சடையான், மக்களுக்கு நல்மொழிகளைச் சொல்கிறான். இதுதான் காட்சி.
பாடலை ரஜினியையே பாட வைத்தோம். ஒலிப்பதிவு முடிந்து பாடலைக் கேட்டபோது, காந்தமாக ஈர்த்தது ரஜினியின் குரல். இத்தனைக்கும் அவர் பாடவில்லை. தன் கணீர் குரலில் அந்த வரிகளைத் துணிவும் கனிவுமாக வாசிக்கத்தான் செய்தார். அதற்கே அப்படியொரு வசீகரம்!'' - பாடல் உருவாக்கம் பற்றிய அறிமுகத்துக்குப் பிறகு அந்தப் பாடல் வரிகளை தனது குரலிலேயே வாசிக்கிறார் வைரமுத்து.
''மக்கள் குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம் முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்
ரஜினி:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு
மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
பொறுமைகொள்
தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்
பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது
பகைவனின் பகையைவிட
நண்பனின் பகையே ஆபத்தானது.
சூரியனுக்கு முன் எழுந்துகொள்
சூரியனை ஜெயிப்பாய்
நீ என்பது உடலா... உயிரா... பெயரா?
மூன்றும் இல்லை - செயல்
'நீ போகலாம்’ என்பவன் எஜமான்
'வா போகலாம்’ என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?
நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்
பெற்றோர்கள் அமைவது விதி
நண்பர்களை அமைப்பது மதி
சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்
நண்பா... எல்லாம் கொஞ்ச காலம்!
இப்படி, ஒவ்வொரு பாடலையும் புது ட்யூன், எழுதாத மொழி எனக் கலவையாக உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு ரசிகனும் இசைக்கு ஒரு காதும், மொழிக்கு ஒரு காதும் கொடுப்பான் என்று நம்புகிறேன்!''
''பொதுவா பாடல் எழுதும்போது இசையமைப் பாளருக்கும் பாடலாசிரியருக்கும் நிறைய சண்டை வருமே... ரஹ்மான்கூட நீங்க அப்படி சண்டை போட்டிருக்கீங்களா?''
''சண்டை, சர்ச்சைகள் ஆரோக்கியமான விஷயம். சண்டை இல்லாமல் கலை வராது; வளராது. ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கும் ரஹ்மானுக்கும் பெரிய சர்ச்சைகள் வரவில்லை. ரஹ்மானோட ரொம்ப சண்டை வந்தா, நான் அவர் வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து டீ சாப்பிடப் போயிடுவேன். அதை அவரும் புரிஞ்சுப்பார். 'கவிஞர், டீ சாப்பிடுறாரா?’னு விசாரிப்பார்.
ரஹ்மான், ஒரு ஜப்பானியர் மாதிரி. அவருக்குக் கோபம் வந்தா, ரொம்பத் தீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருவார். ஏன்னா, ஜப்பானியத் தொழிலாளர்கள் கோபம் வந்தா ஸ்ட்ரைக் பண்ண மாட்டங்க. அதிகமா உற்பத்தி பண்ணிட்டு, அதை விற்க முடியாதபடி பண்ணிருவாங்க.
எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது 'ரட்சகன்’ படத்தின் 'சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?’ பாடல் பதிவில்தான். அதில் அவர் 'ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தை ரொம்பக் கடுமையா இருக்கு. ட்யூன்ல ஒட்டலை. அதை எடுத்திரலாம்’னு சொன்னார். 'நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, அந்த வார்த்தை இல்லைன்னா அந்தப் பல்லவியில் புதுமை இல்லையே...’னு நான் சண்டை போட்டேன். ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்கலை. 'சரி பாடுறதுக்கு ஹரிஹரன் வந்துட்டு இருக்கார். அவர் பாடும்போது இடிக்குதுனு சொன்னா எடுத்துருவோம்’னு நான் சொன்னேன். ஹரிஹரன் வந்தார். பாட்டு வரியைச் சொன்னதும், 'ஸோ பியூட்டி!’னு சொல்லிட்டுப் பாடினார். பாடும்போது 'ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தையில் 'ஸ்ட்ராங்’கை மென்மையாப் பாடிட்டார். ட்யூன் இடிக்கலை. பாடல் இன்றும் பெரும் ஈர்ப்புடன் ரசிகர்களைத் தக்கவைத்திருக்கிறது!
அதேபோல 'மின்சார கனவு’ படத்தின் 'ஊலல்ல்லா...’ பாடல் ட்யூனை ரஹ்மான் வாசித்தார். எனக்கு அது பிடிக்கவே இல்லை. 'நான் இந்த ட்யூனுக்கு பாட்டு எழுதலை’னு சொல்லிட்டு வந்துட்டேன். பிறகு, ரஹ்மானும் ராஜீவ் மேனனும் வந்து பேசினாங்க. 'பிரமாதமான ட்யூன் அது. நீங்க நிச்சயம் பாட்டு எழுதணும்’னு சொன்னாங்க. எனக்கு அப்போ புரியலை. அரை மனசோட எழுதிக் கொடுத்தேன். ஆனா, இசையும் வரிகளுமா பாடல் கம்போஸ் ஆகி வந்தப்போ, அற்புதமா இருந்தது. அந்தப் பாட்டு பிரமாண்ட ஹிட் ஆனதோட, பாடகி சித்ராவுக்கு தேசிய விருதையும் பரிசளித்தது. எங்களுக்குள் நடக்கிற இந்த ஆரோக்கியமான சண்டைகள்தான், நல்ல நல்ல பாட்டுகளை ஊற்றெடுக்க வைக்குது!''
''ரஜினி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டாரா?''
''புகைபிடிப்பதைச் சுத்தமா விட்டுட்டார்; மதுவும் தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்துட்டார். முன்னாடி எல்லாம் அவர் நினைச்ச நேரத்துக்குச் சாப்பிடுவார். இப்போ குறித்த நேரத்துக்குச் சாப்பிடுகிறார். மிக அமைதியாக இருக்கிறார். கடந்த 30 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைத்த மனுஷன், இப்போது ஒரு நாளில் 15 மணி நேரம் எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது துன்பமான காரியம். அந்தத் துன்பத்தையும் அவர் ஏத்துக்கிட்டார்.
சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து வந்தவரை நான் சந்தித்தபோது, ஒரு விஷயம் சொன்னார். 'சென்னை மருத்துவமனையில் எனக்கு எந்தத் துன்பமும் இல்லை; சிங்கப்பூர் மருத்துவ மனையில்தான் நான் ரொம்பத் துன்பப்பட்டேன். அவ்வளவு கடுமையான சிகிச்சை.'மத்தவங்களைப் போல நீங்களும் ஒரு நோயாளி. ட்ரீட்மென்ட் கடுமையா இருக்கும். தாங்கித்தான் ஆகணும்’னு சிங்கப்பூர் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க’ என்றார் சிரித்துக்கொண்டே.
ஏன்னா, சென்னையில் அவர் நோயாளி அல்ல... ரஜினிகாந்த். சிங்கப்பூரில் அவர் ரஜினிகாந்த் அல்ல... நோயாளி. அந்தக் கடுமையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக இப்போ பழைய ரஜினியா, ஆரோக்கியமா, புயல் வேகத்துக்குத் திரும்பிட்டார். பழைய ரஜினியா நடிக்கிறதுக்கான நல்ல கதையைத் தேடிட்டு இருக்கார்!''
0 comments:
Post a Comment