அனீமியா என்னும் இரத்த சோகை, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நோய். இந்த பிரச்சனை கர்ப்பமாக இருக்கும் போது பொதுவாக ஏற்படும். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதனால் பிறக்கும் போது குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும். பொதுவாக இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலேட் குறைபாடு மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு போன்றவை தான். ஆனால் இவற்றில் முக்கியமானது இரும்புச்சத்து குறைபாடு தான்.
இத்தகைய பிரச்சனை இருந்தால், குறைபிரசவம் ஏற்படுவதற்கும், குழந்தை மிகவும் எடை குறைவுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் இரத்தத்தின் அளவை சீராக வைக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் அத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
ஏனெனில் வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சாப்பிட்டால் தான், உடலானது இரும்புச்சத்தினை உறிஞ்சும். அதே சமயம், டீ, காபி போன்ற பானங்களை அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்சியம் நிறைந்த பாலையும் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். ஏனென்றால், இவை இரும்புச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இப்போது இரத்த சோகையை எதிர்த்துப் போராடும் சிறந்த 15 உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் காலையில் 1-2 வாழைப்பழத்தை சாப்பிட்டால், இரத்த சோகையை தவிர்க்கலாம்.
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே அத்தகைய பேரிச்சம் பழத்தை கர்ப்பிணிகள் தினமும் இரண்டு முறை, இரண்டு சாப்பிட்டு வர வேண்டும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் சாப்பிட்டாலும், இரத்த சோகையிலிருந்து விடுபட முடியும். ஏனெனில் இவை எளிதில் செரிமானமடைவதால், உடலுக்கு வேண்டிய கனிமச்சத்துக்களையும், இரும்புச்சத்தையும் எளிதில் உறிஞ்சச் செய்யும்.
நட்ஸ்
நட்ஸில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக இதனை அவ்வப்போது சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
ப்ராக்கோலி
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியை கர்ப்பிணிகள் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் அதிகம் நிரம்பியுள்ளது.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் சொல்லமுடியாத அளவில் இரும்புச்சத்தானது நிறைந்துள்ளது. மேலும் சைவ உணவுகளை விட, அசைவ உணவுகளில் உள்ள இரும்புச்சத்துக்களை உடலானது எளிதில் உறிஞ்சும். எனவே இரத்த சோகை உள்ள கர்ப்பிணிகள், இரத்தத்தின் அளவை அதிகரிக்க மாட்டிறைச்சி ஒரு சிறந்த உணவாகும்.
பசலைக் கீரை
கீரையை கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பசலைக் கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட், இரத்த சோகையை விரைவில் போக்கும்.
மாதுளை
மாதுளையில் நல்ல அளவில் இரும்புச்சத்தானது நிறைந்துள்ளது. எனவே பழங்களில் கர்ப்பிணிகள் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
உலர் திராட்சை
உலர் திராட்சை, கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமானது. அதற்கு உலர் திராட்சையை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட வேண்டும்.
முட்டை
முட்டையின் மஞ்சள் கருவில் நல்ல அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய இரத்தணுக்களை பெறலாம்.
முழு தானியங்கள்
தானியங்களை அதிகம் சாப்பிட்டால், இரத்த சோகையின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும் இவை இரத்தத்தின் அளவை சீராக வைக்கும்.
கடல் சிப்பி
இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சிறந்த உணவுகளில் ஒன்று தான் கடல் சிப்பி. அத்தகைய கடல் சிப்பியை கர்ப்பிணிகள் டயட்டில் சேர்த்தால், அனீமியா என்னும் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.
தேன்
இரத்த சோகை உள்ள கர்ப்பிணிகள், தேனை டயட்டில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில் இதிலும் இரும்புச்சத்தானது அதிகம் உள்ளது. வேண்டுமெனில் இதனை அப்படியே அல்லது பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் வளமான அளவில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. எனவே கர்ப்பிணிகள் தினமும் ஒரு பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஆரஞ்சு ஜூஸ்
மேற்கூறிய அனைத்து இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும் போது, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸை பருகினால், அதில் உள்ள வைட்டமின் சி சத்து, உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்துக்களை உறிஞ்சச் செய்யும்.
0 comments:
Post a Comment